சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும். ஐயப்பனின் படை வீடுகளில் ஒன்று. அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை சூழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது. மண்டல மகோற்ஸவ விழா, இத்தலத்தின் முக்கிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டுமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. ஐயப்பன் பயன்படுத்திய வாள் இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சிவன், பார்வதி சன்னிதிகளும் உள்ளன. இந்த சன்னிதிகளுக்குப் பின்னால் சுவாரஸ்யம் மிகுந்த பல கதைகள் உண்டு.இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் இங்குள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று மணி அடித்தால், நடை திறக்கப்பட்டு அந்தக் கோயிலில் உள்ள தந்திரி, மந்திரித்த தீர்த்தமும் ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள ந்தனமும் தருவார். அவைதான் விஷக்கடிக்கான மருந்து. அதை அருந்தினால், உடலில் இருந்து முற்றிலுமாக விஷம் இறங்கி, உடல் பூரண குணமடைகிறது. இந்த நடைமுறை இன்றும் அந்த ஊரில் நடைமுறையில் உள்ளது.இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.