புலிகுன்னூர் (புலிகுன்று): பந்தளத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் புலி குன்னூர் அமைந்திருக்கிறது. புலிப்பால் கொண்டு வருவதற்காக, ஐயப்பன் சுமார் ஆயிரக்கணக்கான புலிகளுடன் வந்ததும், பின்னர் அந்தப் புலிகளைத் திரும்பக் கொண்டு சென்று விட்டபோது, ஒரு புலி இந்திரனாகவும், ஒரு புலி வாயுவாகவும் இப்படி ஒவ்வொரு புலியும் ஒவ்வொரு தேவனாக மாறி மறைந்த இடம்தான் இந்தப் புலிகுன்னூர். மணிகண்டன், புலியுடன் வந்து கீழே இறங்கிய போது, அவரது வலது பாதமும் புலியின் பாதமும் பதிந்திருப்பதே இந்த இடத்தின் சிறப்பு.
குருநாதன் முகடி: புலிகுன்னூரில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது குருநாதன் முகடி. ஐயப்பன் குருகுலத்தில் படித்துப் பல வித்யைகளைக் கற்றுக்கொண்ட இடம். முக்கியமாக, குருநாதரின் வாய் பேச முடியாத குழந்தையைப் பேச வைத்து சாஸ்தா ஆசி வழங்கிய இடம் இதுதான். இந்த இடத்துக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால், குழந்தைகளுக்கு கல்வி ஞானம் வளரும் என்பது நிச்சயம். மணிகண்டனுக்குக் கல்வி கற்றுத் தருவதற்காகவே, அந்த குருநாதர் மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.