குமரமலை அருகில் இரண்டு கி.மீ., தூரத்திலுள்ள தேவர்மலையில் விநாயகர் கோயில் கொண்டுள்ளார். இங்கு ஒரு சுனையும், சிவலிங்கமும் உள்ளது, இங்கிருந்து நான்கு கி.மீ., தூரத்திலுள்ள நற்சாந்துபட்டியை அடுத்த மலைக்கோயிலில் சண்முகநாதன் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயிலை குமரமலையிலிருந்தே தரிசிக்கலாம்.
பிரார்த்தனை
வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமாகவும், திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் இங்குள்ள முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.
வாதநோய்க்கு பிரார்த்தனை: வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குமரமலை அடிவாரத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடி முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வதுடன், அர்ச்சனை செய்து வழிபட்டு செல்வதால் வாதம் நோய் நீங்குகிறது. நோய் நீங்கியவுடன் மலைப்படிகளில், தங்கள் பாதங்களை பதித்து முருகனுக்கு காணிக்கை செலுத்தி வழிபடுகின்றனர். வாழ்க்கையில் சகல செல்வவளமும் பெற மூலிகைச்சாறு, நெய், பால், விபூதி அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
வேலுக்கு வளையல்: இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபடுகின்றனர். இவ்வாறு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயதானவுடன் காது குத்தும் நேர்த்திக்கடனையும் இங்கு செய்கின்றனர். குமரமலைக்கு சஷ்டி திதிகளில் வந்து விரதம் இருப்பதன் மூலம் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் செய்வதாக நம்பிக்கையுள்ளது.
சங்கு சுனைத்தீர்த்தம்: குமரமலைக்கு மேல் சங்கு வடிவிலான சுனைத்தீர்த்தம் உள்ளது. இதில் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளது. இங்கிருந்தே சுவாமிஅபிஷேகத்துக்கு தேவையான புனித நீர் எடுக்கப்படுகிறது. கோயிலில் வழங்கப்படும் இந்த தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதன் மூலம் நோய் நொடிகள் நீங்குவதாகவும் நம்பிக்கையுள்ளது. பங்குனி உத்திரத்தன்று, பத்தாம் திருநாளில் அருகிலுள்ள குன்னக்குடிப்பட்டியிலுள்ள வெள்ளாற்றில் சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.
தல வரலாறு:
குமரமலையை அடுத்த குன்றக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுபதி. இவர் பழநி முருகனின் தீவிர பக்தர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து நடந்தே பழநிக்கு காவடி எடுத்து சென்று வந்துள்ளார். இவருக்கு 80 வயதான போதும் காவடியைத் தூக்கிக் கொண்டு நடப்பதற்கு சிரமப்பட்டார். இதனால் மனதளவில் ஏக்கமும், வேதனையும் அடைந்தார். ஒருமுறை, பழனியாண்டவர் அவருடைய கனவில் தோன்றி,குமரமலை குன்றின் மீது சங்கம்செடி புதருக்கருகில் நாளை வந்து தங்குகிறேன். அந்த இடத்தில் விபூதிப்பை ஒன்றும், ருத்ராட்ச மாலையும், பிரம்பும், எலுமிச்சம் பழமும் காணப்படும் அங்குவந்து என்னைத் தரிசிக்கலாம், என்று கூறி மறைந்தார். மறுநாள் காலை, சேதுபதி குமரமலைக்குச் சென்று பார்த்த போது கனவில் பழனியாண்டவர் கூறியபடி பொருட்கள் இருந்தன. அந்த இடத்தில், வேல் ஒன்றை நட்டு வழிபட துவங்கினார். காலப்போக்கில், ஒரு கோயில் கட்டி பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு பாலதண்டாயுதபாணி என்ற திருநாமம் சூட்டினார். 1898ல், பல்லவராயர்கள் கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இப்பகுதி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சியன்று அர்த்தமண்டபத்திலுள்ள வேலில் வளையல்களை கட்டி வழிபாடு செய்தால் பிரசவம் எளிமையாகும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் : புதுக்கோட்டையில் இருந்து காரையூர் செல்லும் வழியில் 12 கி.மீ., சென்றால் குமரமலை விலக்கு வரும். அங்கிருந்து ஒரு கி.மீ., கடந்தால் மலை அடிவாரம். படிகள் ஏறினால் கோயில் வரும்.