Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்)
  உற்சவர்: பழம்பதிநாதர்
  அம்மன்/தாயார்: பெரியநாயகி, ப்ருஹந்நாயகி
  தல விருட்சம்: புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
  தீர்த்தம்: லட்சுமி, பிரம தீர்த்தம், இந்திர தீர்த்தம் (10 தீர்த்தங்கள்)
  ஆகமம்/பூஜை : சிவாகமம்
  புராண பெயர்: புன்னை வனம், திருப்புனவாசல், திருப்புனவாயில்
  ஊர்: திருப்புனவாசல்
  மாவட்டம்: புதுக்கோட்டை
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
 

சம்பந்தர், சுந்தரர்
தேவாரப்பதிகம்



சித்தம் நீநினை என்னொடு சூளறு வைகலும் மத்தயானையின் ஈருரிபோர்த்த மணாளன் ஊர் பத்தர் தாம்பலர் பாடி நின்றாடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்டுஅறாப் புனவாயிலே.



சுந்தரர்.
தேவாரப்பாடல் பெற்ற பாண்டியநாட்டுத்தலங்களில் இது 7வது தலம்.



 
     
 திருவிழா:
     
  வைகாசி விசாகம் 11 நாள்.  
     
 தல சிறப்பு:
     
  வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது. தஞ்சையை விட பெரிய ஆவுடை உள்ள கோயில். இவ்வளவு பெரிய ஆவுடையை வேறு எந்த கோயிலிலும் பார்க்க முடியாது. இதுவே இத்தலத்தில் மிகச்சிறந்த சிறப்பம்சமாகும்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 197 வது தேவாரத்தலம் ஆகும்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் (பழம்பதிநாதர்) திருக்கோயில், திருப்புனவாசல்-614 629. புதுக்கோட்டை மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4371-239 212, 99652 11768 
    
 பொது தகவல்:
     
  இத்ததல விநாயகர் ஆகண்டல விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவ்வூர் கோயிலுக்கு தெற்கே பாம்பாறும், கோயில் எதிரே 3 கி.மீ. தொலைவில் கடலும் உள்ளது. கடல் மற்றும் ஆற்றின் புனலில்(வாயிலில்) ஊர் இருப்பதால் "திருப்புனவாசல்' என்ற பெயர் ஏற்பட்டது.

65 அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும், கோயிலின் வெளியே பிரம்ம தீர்த்தமும் அமைந்துள்ளது. பெயரளவுக்கே தற்போது தீர்த்தம் உள்ளது) கோயிலின் சுற்றுப்பகுதியில், பஞ்ச விநாயகர், கபிலரின் 9 குமாரர்கள், ஆதி சிவனடியார்கள், தெட்சிணாமூர்த்தி, தல விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சண்டிகேஸ்வரர், கஜலட்சுமி சன்னதிகள் உள்ளன.

சிவனுக்கு இடப்புறம் அம்மன் கிழக்கு நோக்கி தனி சன்னதியில் அருளுகிறாள். அம்மனுக்கு எதிரில் குடவரை காளி சன்னதி உள்ளது.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தொட்டில் கட்டும் வழக்கமும், செவ்வாய்க்கே தோஷம் போக்கிய இத்தலத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள். 
    
நேர்த்திக்கடன்:
    
  சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. இக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரி கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள். கேட்டதை கொடுக்கும் சிவபெருமானுக்கு வேஷ்டியும் துண்டும் சிவனுக்கென தனியாக நெய்து காணிக்கையாக செலுத்துகிறார்கள். 
    
 தலபெருமை:
     
 

தஞ்சையை விட பெரிய ஆவுடையார்: எந்த ஊர் லிங்கம் பெரியது எனக்கேட்டால், பெரும்பாலானவர்கள் "தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் (பெரிய கோயில்) லிங்கம் என்று தான் சொல்வார்கள். உண்மையில், தஞ்சாவூர் கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை விட, அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரத்தின் லிங்கமே உயரத்தில் பெரியது. தஞ்சை கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது.


கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. திருப்புனவாசல் கோயிலில் லிங்கம் 9 அடி உயரமே உடையதென்றாலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தஞ்சை மற்றும் கங்கைகொண்டசோழபுரத்தை விட பெரியது. இதனால், ஆவுடையாருக்கு வஸ்திரம் அணிவிக்கும் போது, ஒருவர் பிடித்துக் கொள்ள இன்னொருவர் ஆவுடையாரை சுற்றி வந்து கட்டி விடுவார். லிங்கத்திற்கு 3 முழமும், ஆவுடைக்கு 30 முழமும் வேட்டிகட்டப்படுகிறது. 


இதை வைத்து தான் "மூன்று முழமும் ஒரு சுற்று, முப்பது முழமும் ஒரு சுற்று' என்ற வட்டாரமொழி இப்பகுதியில் சொல்லப்படுகிறது. இங்கே முழம் என்பது "தச்சுமுழம்' கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு தச்சுமுழம் என்பது 2.75 அடி. அப்படியானால் 82.5 அடி நீளமுள்ள வேஷ்டி கட்ட வேண்டும். இதை உத்தேசமாக 90 அடிக்கு நெய்து விடுகிறார்கள்.  இந்த வஸ்திரத்தை பக்தர்கள், ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து நெய்து காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆவுடையை சுற்றி பலகை கட்டியிருக்கிறார்கள். இதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர்.

கள்ளியும் தலமரம்: கோயில்களில் ஒன்று அல்லது இரண்டு தலவிருட்சங்கள் இருக்கும். இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தலவிருட்சங்கள் உள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக்கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது.


கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தலவிருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன.


காளியைக் கண்டாலே நடுக்கம்: சதுரகள்ளி வனமாக இருந்த இப்பகுதியில் கார்கவ முனிவர் தவம் செய்து வந்தார். அசுரன் ஒருவன் புலிரூபம் எடுத்து இவரைக் கொல்ல முயன்றான். கோபமடைந்த முனிவர் அவனை எப்போதும் புலியாகவே இருக்கும்படி சபித்தார்.  ஒருமுறை பார்வதி மானிட வடிவில் இப்பகுதிக்கு வரும்போது, புலிவடிவில் இருந்த அரக்கன் பார்வதி மீது பாய்ந்தான். கோபமடைந்த அம்பாள், காளியாக மாறி புலியை எட்டி உதைத்தாள். தாயின் திருவடி பட்டதோ இல்லையோ அவன் சுயரூபம் பெற்றான். அவனது அசுரகுணங்களும் ஒழிந்து விட்டன.


அன்னையே! நான் எப்போதும் உங்கள் அருகில் இருக்கும் வரம் தர வேண்டும்,''என்றான். அதன்படி அசுரன் இத்தலத்தில் பெரியநாயகி அம்மனின் எதிரே நந்தி வடிவில் அமர்ந்து விட்டான். எனவே இத்தலத்து நந்தி "வியாக்ர நந்தி' எனப்படுகிறது.


வியாக்ரம்' என்றால் புலி: அம்மன் காளியாக மாறியவுடன், பெரியநாயகி சன்னதி எதிரே உள்ள மொட்டைக்கோபுர நுழைவு வாயிலில் ஊர் காவல் தெய்வமாக அமர்ந்து விட்டாள். அவள் மிகவும் உக்கிரமாக இருந்ததால், ஊரில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டது. எனவே, அவள் இருக்கும் நடையை பூட்டி விட்டனர். அவளுக்கு உருவம் கிடையாது. ஒரு கண்ணாடியில் காளிக்குரிய சூலத்தை மட்டும் தரிசிக்கலாம்.


காளியம்மனுக்கு பயந்து கோயில் குத்தகைதாரர்கள் பணத்தை இன்று வரை ஒழுங்காக கட்டி விடுகின்றனர். யாராவது கட்டாவிட்டால், அவர்கள் வீட்டில் கொடிய சம்பவங்கள் நிகழ்கிறது என்பதால் பயத்திலேயே கட்டி விடுகிறார்கள். மேலும், கோயில் வாசலைக் கடக்கும் போது, ஊர்மக்கள் தங்கள் காலணிகளை கழற்றி கையில் வைத்துக்கொண்டு பணிவாகச் செல்கின்றனர்.


செவ்வாய் தோஷம் போக்கும் தலம்: முனிவர் ஒருவரின் சாபத்தினால் அங்காரனாகிய செவ்வாய் பகவான், தனது சக்தியை இழந்தான். நாரதரின் அறிவுரைப்படி இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு சக்தி பெற்றான்.


சிவஞான சபை: சிவபெருமான் நடராஜராக திருவாலங்காடு ரத்னசபை, சிதம்பரம் கனக சபை, மதுரை ரஜதசபை, திருநெல்வேலி தாமிர சபை, குற்றாலம் சித்திர சபை ஆகியவற்றில் நடனமாடுகிறார். திருப்புனவாசலில் நடராஜர் வீற்றிருக்கும் சபை "சிவஞானசபை' எனப்படுகிறது. இந்த சபையில், அகத்தியருக்காக சிவபெருமான் நடனக்காட்சி தந்தருளினார். கோயில் மேற்கு பிரகாரத்தில் குருந்த மரத்தின் அடியில் அகத்தியர் பூஜித்த லிங்கம் உள்ளது. திங்கள் கிழமைகளில் மட்டுமே இந்த லிங்கத்திற்கு பூஜை செய்யப்படும். மற்ற கிழமைகளில் இவர் மோன நிலையில் இருப்பதால் "மோன நிலை முனீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.


உதிரிப்பூக்கள்: இத்தலத்தை தரிசித்தால் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிநாட்டு தலங்கள் பதினான்கையும் தரிசித்த பலன் கிடைக்கும். சிவன் சன்னதிக்கு பின்புறம் லிங்கோத்பவருக்கு பதிலாக பெருமாளும், அனுமனும் உள்ளனர். சிவன் சன்னதியின் வடக்கு பகுதியில் துர்க்கைக்கு பதில் பிரம்மா உள்ளார். ஒரே சன்னதியில் இரண்டு சண்டிகேஸ்வரரும், தனித்தனி சன்னதிகளில்  இரண்டு பைரவரும் அருளுகின்றனர்.  மிகப்பெரிய தெட்சிணாமூர்த்தி அமர்ந்த கோலத்தில் உள்ளார். சிவனுக்கு எதிரே சூரியனும் சந்திரனும் இடம் மாறியுள்ளனர். பெருமாள், பார்வதி, இந்திரன், சூரியன், சந்திரன், எமன், வாயு, ஐராவதம், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.


சிவன் வழிபாட்டுக்குரிய முக்கிய மலர்கள் கொன்றை, பிச்சி, பிடவம், முல்லை, புன்னை ஆகியன. இதில் புன்னைமரமே இங்கு தல விருட்சமாக உள்ளது. இந்திர, சூரிய, சந்திர, வருண, சக்கர, கல்யாண, சிவகங்கை, நாகநதி போன்ற தீர்த்தங்களும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமானுக்கு அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். காஞ்சிப்பெரியவர் சந்திசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடிக்கடி இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலம் இது ஒன்று தான். பெரிய்ய சிவலிங்கத்திற்கு தகுந்தாற்போல் மிகப்பெரிய பலிபீடம் உள்ளது.


 
     
  தல வரலாறு:
     
 

"ஓம்' என்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார். லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் "பிரம்ம தீர்த்தம்' என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. "சதுர்' என்றால் "நான்கு'. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது. பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ஒரு கோயிலை எழுப்பினான்.


சோழர் கோயில்களில், ராஜகோபுரம் சிறிதாகவும், விமானம் உயரமாகவும் இருக்கும். பாண்டியர் கோயில்களில் இதற்கு நேர்மாறாக இருக்கும். இது கலப்படக் கோயில் என்பதால், ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் பிரம்மாண்டமான ஆவுடையாருடன் கூடிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவரை "விருத்தபுரீஸ்வரர்' என அழைத்தனர். "விருத்தம்' என்றால் "பழமை'. இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது.


 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar