இங்கு துவார கணபதி, துவார தண்டாயுதபாணி, மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
செல்வம் பெருக, கல்வியில் சிறந்து விளங்க, மகப்பேறு உண்டாக, முக்திநிலையாகிய பிறப்பற்ற பேரின்ப வாழ்வு கைகூட, துன்பங்கள் யாவும் நீங்கி நினைத்த செயல்கள் கைகூட, வறுமை நீங்கி செல்வவிருத்தி உண்டாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கும், அம்மனுக்கும் 11 வாரம் மாலை சாற்றி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
மன அமைதிக்கு வழிபாடு: மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய உமாபதீஸ்வரர் கோயிலில், சுவாமி, அம்பாளுக்கு 11 வாரம் மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் மனஅமைதி கிடைக்கிறது. உமாபதியின் தரிசனத்தால் பெரும் பாவங்கள்அகலும். செல்வம் பெருகும். கல்வி ஓங்கும், மகப்பேறு உண்டாகும். முக்திநிலையாகிய பிறப்பற்ற பேரின்ப வாழ்வு கைகூடும். துன்பங்கள் யாவும் நீங்கி, நினைத்த செயல்கள் கைகூடும், வறுமை நீங்கி செல்வவிருத்தி உண்டாகும்.
மங்களாம்பிகை: மூலவர் உமாபதீஸ்வரர் கிழக்கு பார்த்து, பக்தர்களிடம் கருணைகொண்டு அருள் மழை பொழிகிறார். அம்பாள் மங்களாம்பிகை மேற்கு நோக்கி நின்று பக்தர்களுக்கு கருணை செய்கிறாள். தம்மை அன்போடு வணங்குபவர்களுக்கு திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்று இத்தலத்து அம்பாளுக்கு பெயர் ஏற்பட்டது. இவளுக்கு வெள்ளிக் கிழமைகளில் 108 செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவிப்பவருடைய குலம் வாழையபடி வாழையாய் வம்ச விருத்தி அடையும். செம்பருத்திப் பூ கிரீடம் செய்து தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மங்களாம்பிகைக்கு அணிவிப்பவர்கள் குபேரனை ஒத்தசெல்வந்தன் ஆகி விடுவான் என்று பவிஷ்யோத்ரா பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
தல வரலாறு:
1920ம் ஆண்டுகளில் வாகனவசதி குறைவு. திருமயத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள் திருமயத்துக்கு வர மாட்டு வண்டிகளை பயன்படுத்தினர். அவர்கள் வரும் வழியில் பாம்பாறு குறுக்கிட்டது. சில சமயங்களில் வண்டிகள், ஆற்று சேற்றில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றுவிடும். இதனை பயன்படுத்திக் கொண்டு ஈச்சங்காட்டில் மறைந்திருந்த திருடர்கள், பெண்களிடமிருந்த நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இதுபற்றிய தகவல் திவான் பகதூர் முத்தையா செட்டியாருக்கு சென்றது. பாம்பாற்றின் குறுக்கே தனது சொந்தச்செலவில் பாலம் ஒன்றை கட்டி வண்டிகள் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார். பாலத்தின் அடியில் மறைந்திருந்த திருடர்களின் குற்ற செயல்களைத் தடுக்க, தன் தாயார் பெயரில் உமையாள்புரம் என்ற ஊரை ஏற்படுத்தினார். மக்கள் நடமாட்டம் அதிகமானால் திருடர் பயம் குறையும் என்பது அவரது நம்பிக்கை. ஒரு குளம் வெட்டி, தண்ணீர் பந்தல் அமைத்ததுடன், விநாயகர் கோயில் ஒன்றும் கட்ட முடிவு செய்தார். அப்போது அவ்வூருக்கு காஞ்சிப்பெரியவர் விஜயம் செய்தார். சிவாலயம் ஒன்றை அங்கு அமைத்து விநாயகரையும் பிரதிஷ்டை செய்யுமாறு அறிவுறுத்தினார். விநாயகர் கோயிலில் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை அமைத்து 1929லிருந்து இன்று வரை வழிபாடுகள் நடந்து வருகிறது. காஞ்சிப்பெரியவரின் ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் என்ற நூலில், திவான் பகதூர் முத்தையா செட்டியார், பூஜைகளுக்கு செய்த நற்பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்குள்ள அம்மன் மங்களாம்பிகை மேற்கு நோக்கி அருள்பாலிப்பதும், அம்மனுக்கு செம்பருத்தி மாலை, கிரீடம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.
இருப்பிடம் : புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்திலும், மதுரையில் இருந்து 80 கி.மீ., தூரத்திலும் உள்ள திருமயம் சென்று, அங்கிருந்து ராயவரம் செல்லும் ரோட்டில் 8 கி.மீ., சென்றால் உமையாள்புரத்தை (கடியாபட்டி) அடையலாம்.