சிறிய மண்டபத்தில் நந்தி, கொடிமரம், பலிபீடத்தை வணங்கிச் சென்றால் இறைவன் சிதம்பரேஸ்வரர் காட்சி தருகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சிதம்பரேஸ்வரர் (சத்திரத்து) திருக்கோயில்,
தொண்டைமான் நல்லூர்,
புதுக்கோட்டை மாவட்டம்.
பொது தகவல்:
சிறிய மண்டபத்தில் நந்தி, கொடிமரம், பலிபீடத்தை வணங்கிச் சென்றால் இறைவன் சிதம்பரேஸ்வரர் காட்சி தருகிறார். தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள் சிவகாமி அம்பாள். விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகியோரும் இங்கே அற்புதக் காட்சியளிக்கின்றனர்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் யாவும் நிறைவேற இங்குள்ள இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள இறைவனுக்கு புது வஸ்திரம் சார்த்தியும், நெய் விளக்கேற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
குறுகிய காலத்தில் கோயில் அமைந்தது. கும்பாபிஷேகமும் நடந்தது. அதன்பிறகு இந்த வழியே பயணிக்கும் அடியார்கள், குளத்தில் நீராடி, சிவதரிசனம் முடித்து சத்திரத்தில் இளைப்பாறினர். அங்கே பரிமாறப்படும் அன்னதானத்தை ஏற்று இரவில் அங்கேயே தங்கி, விடிந்ததும் பயணத்தைத் தொடர்ந்தனர். அப்படிக் கிளம்பும்போது, மறுபடி ராமேஸ்வரம் வந்தா, இங்கேதான் தங்கணும். அருமையான ஊரு என்றனர். மன்னர் தொண்டைமான் நல்லா இருக்கணும் என்று வாழ்த்தினர். அதன் பிறகு இந்த ஊர், தொண்டைமான் நல்லூர் என அழைக்கப்பட்டது. கல்வெட்டுகள், சத்திரத்துக் கோயில் என்றே இந்த கோயிலைக் குறிப்பிடுகின்றன. இதுதவிர தொண்டைமான் நல்லூர், அம்மா சத்திரம், களமாவூர், நீர்ப்பழநி ஆகிய ஊர்களில் சத்திரக் கோயில்களை அமைத்தாராம் மன்னர்.
தல வரலாறு:
புதுக்கோட்டையை ஆட்சி செய்த மன்னர் தொண்டைமானும் காடு-கழனி பசுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினார். குளம் வெட்டினார்; ஊருணி அமைத்துக் கொடுத்தார். ஒருநாள், பல்லக்கில் ஏறி கிராமம் கிராமமாகச் சுற்றி வந்தார். பார்க்கும் மனிதர்களிடமெல்லாம், குறையேதும் உள்ளதா? என்று கேட்டறிந்தார். வழியில், ஓர் ஊரின் எல்லையில், மரத்தடியில் சிலர் சோர்வாக அமர்ந்திருப்பதைக் கண்டார். அவர்களிடம் விசாரித்தார். என்ன ஊருங்க இது! கும்பிட சாமி இல்ல; குளிக்கத் தண்ணி இல்ல; அட கால் நீட்டிக் கொஞ்சம் இளைப்பாறக் கூட வசதி கிடையாது! என்று அலுத்துக் கொண்டனர், அந்த வெளியூர்வாசிகள். அவர்கள் காசி தலத்திலிருந்து தரிசித்தபடி, ராமேஸ்வரத்திற்குச் செல்லும் சிவனடியார்கள். பல்லக்கில் இருந்து இறங்கிய மன்னர், சிவனடியார்களிடம் கைகூப்பி மன்னிப்புக் கேட்டார். தனக்காகவும் தனது படையினருக்காகவும் வைத்திருந்த உணவு மற்றும் பழங்களை அவர்களிடம் கொடுத்தார். கைநிறைய பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார். இனி உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது. எங்கள் தேசமும் மக்களும் நலமாக இருக்க வேண்டும் என ராமேஸ்வரம் தலத்தில் பிரார்த்தியுங்கள்! என்று வேண்டினார். இதையடுத்து மன்னர், அமைச்சர் பெருமக்களை அழைத்தார். இந்தப் பகுதியில் சிவனடியார்கள் நீராடுவதற்கு வசதியாக குளம் வெட்டுங்கள். அப்படியே சத்திரம் ஒன்றும் கட்டுங்கள். அங்கு, சமைக்கவும் பரிமாறவும் ஆட்களை நியமியுங்கள். அடியவர்கள் நீராடியதும் சிவலிங்க தரிசனம் செய்யாமல் உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, குளமும் அதனருகே சிவாலயமும் அமைப்பதற்கான பணிகளில் உடனே இறங்குங்கள் என்று உத்தவிட்டார். அதன்படி அனைத்து பணிகளும் இரவு பகலாக நடைபெற்றன.
இருப்பிடம் : புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகேயுள்ளது தொண்டைமான் நல்லூர். திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 23 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து சுமார் 34 கி.மீ. கீரனூரிலிருந்து சுமார் 4 கி.மீ.