இங்கு வாலீஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இக்கோயில் பாலாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது. இங்குள்ள விநாயகர் தாமரை மலர் பீடத்தின் மேல் இருக்கிறார். இந்த பீடத்திற்கு கீழே ஆவுடையாரும் இருக்கிறது. இதனை விநாயகரை, சக்தி தாங்கிக் கொண்டிருக்கும் வடிவம் என்கிறார்கள். இங்கு சாந்த முகத்துடன் இருக்கும் விஷ்ணு துர்க்கையின் வலது கையில் பிரயோகச் சக்கரம் இருப்பதுடன் இடக்கையில் சக்கர முத்திரையும் இருக்கிறது. இவள் காலுக்கு கீழே மகிஷாசுரனும் இல்லை. இது விசேஷமான அமைப்பாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 238 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். அர்ச்சகர் வீடு அருகிலேயே இருப்பதால், எந்த நேரத்திலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம். முன்னரே அர்ச்சகரிடம் போனில் தொடர்பு கொண்டுவிட்டுச் செல்வது நல்லது.
முகவரி:
அருள்மிகு வாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர்,
தூசி போஸ்ட், மாமண்டூர் வழி,
குரங்கணில்முட்டம் - 631 702.திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
+91 94456 42409, 98946 99095, 72999 04344
பொது தகவல்:
பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், பைரவர், நவக்கிரகங்கள், சப்தமாதர், நாகதேவதை ஆகியோர் இருக்கின்றனர். கருவறைக்கு பின்புறத்தில் மகாவிஷ்ணு, பிரயோக சக்கரத்துடன் தனிச்சன்னதியில் இருக்கிறார்.
பிரார்த்தனை
பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரவும், சனி தோஷம் நீங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இங்குள்ள அம்பாளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர். வாலீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் குறைவில்லாத வாழ்வும், பிறப்பில்லாத நிலையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாலாரிஷ்ட தோஷம் உள்ள குழந்தைகளுக்கு குணமாக அம்பாளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கொய்யாமலர் நாதர்: சுவாமி சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. குரங்கு வடிவில் வந்த வாலி, சிவனை வணங்கியபோது அவருக்கு பூஜை செய்வதற்கு கையால் மலர்களை பறிக்காமல் மரத்தை உலுக்கி பூஜித்தாராம். எனவே, சிவனுக்கு "கொய்யா மலர் நாதர்' (பறிக்காத மலரால் பூஜிக்கப்பட்டவர்) என்ற பெயரும் உண்டு. இவருக்கு விசேஷமாக கரும்புச்சாறு அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் என்றும் இனிமையான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவரை ஐந்தறிவு கொண்ட பறவை மற்றும் விலங்கு வழிபட்டு மீண்டும் ஆறறிவு கொண்டவர்களாக மாறினர். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள பாவ விமோசனம், ஞானம் மற்றும் அறிவுத்திறனும் வளரும் என்கின்றனர்.
வளையல் அணிந்த அம்பாள்: இங்குள்ள அம்பாள் பெயர் "இறையார்வளையம்மை'. இவள் தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். வாலி, இந்திரன், எமன் ஆகியோர் சிவனை வணங்கும் முன்பு அம்பாளை வணங்கினார்களாம். அவர்களுக்கு அருள் செய்யும்படி சிவனிடம் அம்பாள் பரிந்துரை செய்தாளாம். எனவே, அம்பாளுக்கு இப்பெயர் வந்ததாம். அதாவது, தன்னை வணங்குபவர்களுக்கு வளைந்து கொடுத்துச் செல்பவள் என்ற பொருளில் இப்பெயரால் அழைக்கின்றனர்.
சம்பந்தர் தனது பதிகத்தில் அம்பாளைக் குறித்தும் பாடியிருக்கிறார். இவள் கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.
முக்தி தலம்: சிவனை வழிபடும் முன்பு காக வடிவில் இருந்த எமதர்மன் தன் அலகால் நிலத்தில் கீறி தீர்த்தம் உண்டாக்கினார். பின் அதில் மூவரும் நீராடி சிவனை வணங்கினர். இந்த தீர்த்தம் பிறைச்சந்திர வடிவில் கோயிலின் மூன்று புறங்களிலும் சூழ்ந்திருக்க, நடுவில் சிறிய பாறையின் மீது சிவன் வீற்றிருக்கிறார். இத்தீர்த்தத்தை, "காக்கைமடு தீர்த்தம்', "வாயசை தீர்த்தம்' என்கின்றனர். எமன், சனீஸ்வரருக்கு அதிபதி. எனவே, சனி தோஷங்கள் நீங்க எமன் வழிபட்ட வாலீஸ்வரரையும், நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வரரையும் வழிபடலாம்.
திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் இத்தலத்தை, "குரங்கணின்முட்டம்' என்றும், "பறவா வகை வீடு' (முக்தி கிடைக்கும் தலம்) என்றும் சொல்லி பதிகம் பாடியுள்ளார். எனவே, இங்கு வேண்டிக்கொள்ள முக்தி நிச்சயம் என்கிறார்கள்.
தல வரலாறு:
தனது பதினாறாவது வயதில் இறக்கும்படியான வரம் பெற்றிருந்த மார்க்கண்டேயர், சிவதல யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு பதினாறு வயதாகியபோது, எமதர்மன் அவரைப் பிடிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிச் சென்ற மார்க்கண்டேயர் சிவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அவரிடம் சிவன், பூலோகத்தில் குறிப்பிட்ட காலத்தில் தன் தரிசனம் கிடைக்கப்பெற்று இழந்த பதவி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி பூலோகம் வந்த எமன், முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார். கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், "தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும்' கூறினார். அவரது சொல்கேட்ட இந்திரன், அணில் வடிவில் பூலோகம் வந்தான்.
இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் "குரங்கு அணில் முட்டம்' என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு வாலீஸ்வரர் சுயும்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது.
இருப்பிடம் : காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலையில் (8 கி.மீ.) தூசி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
இவ்வூருக்கு பஸ்வசதி கிடையாது. எனவே, ஆட்டோவில் செல்வது நல்லது.
அருகிலுள்ள ரயில் நிலையம் :
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம் :
சென்னை
தங்கும் வசதி : காஞ்சிபுரம்:
ஹோட்டல் தமிழ்நாடு போன்: +91-44-2722 2554, 2722 2553 பாபு சூரியா போன்: +91-44-2722 2555 ஜெயபாலா போன்: +91-44-2722 4348 ஹெரிடேஜ் போன்: +91-44-2722 7780 எம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023 ஜி. ஆர். டி. போன்: +91-44-2722 5250.