Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: கனககிரீசுவரர்
  அம்மன்/தாயார்: பெரியநாயகி
  தல விருட்சம்: வில்வம்
  தீர்த்தம்: சிவதீர்த்தம்
  புராண பெயர்: தேவக்காபுரம்
  ஊர்: தேவிகாபுரம்
  மாவட்டம்: திருவண்ணாமலை
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  பங்குனி உத்திரப் பெருவிழா - பங்குனி மாதம் கிருத்திகையுடன் கூடிய பஞ்சமி திதியில் கொடியேற்றி, அன்று முதல் பத்து நாட்களுக்கு நடைபெறும். பத்தாவது நாள் உத்திரத்தன்று விழா முடிவடையும் அன்று கொடி இறக்கப்படும். இவ்விழாவில் நாள்தோறும் பஞ்சமூர்த்திகளும் மலைக்குச் சென்று வரும் காட்சி மிகவும் சிறப்புடையதாகும். சித்திரை - நடராஜர் அபிசேகம் புரட்டாசி - நவராத்திரி ஐப்பசி - மலையின் மீது சுவாமிக்கு அன்னாபிசேகம் கார்த்திகை - கார்த்திகை தீபத்திருவிழா மாசி- மகாசிவராத்திரி இவை தவிர பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் மிகவும் சிறப்புற நடைபெறுகிறது.பிரதோசம் மிக சிறப்பாக நடைபெறுகிறது.வருடத்தின் விசேச நாட்களான தமிழ்,ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி,பொங்கல் தினங்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேச பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார். ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் உள்ளது. சிறப்பு : சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.  
     
திறக்கும் நேரம்:
    
 மலைமீதுள்ள கோயில் காலை 8 முதல் 10 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். கீழே உள்ள அம்மன் கோயில் காலை 6 முதல் 12மணி, மாலை 5 முதல் 8 மணிவரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு கனககிரீசுவரர் திருக்கோயில், தேவிகாபுரம்- 606 902, திருவண்ணாமலை மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4173-247 482, 247 796. 
    
 பொது தகவல்:
     
  500 அடி உயரத்தில் 365 படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. எல்லாநாளும் நல்ல நாளாக அமைய வேண்டும் என்பதற்காக இந்த எண்ணிக்கையில் படிகள் அமைக்கப்பட்டது. 3 நிலை ராஜகோபுரம், நந்தி, பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தமாதர், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கு விசாலாட்சி அம்மன் சன்னதியும் உள்ளது. கீழே உள்ள பெரியநாயகி அம்மன் தனி சன்னதி. விஜய நகர கிருஷ்ணதேவராயர் காலத்தில் கோயில் கட்டப்பட்டதாக தெரிகிறது. அழகிய சிற்பங்கள் உள்ள அற்புதமான கோயில் இது.
 
     
 
பிரார்த்தனை
    
  இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.

மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பொங்கல் வைத்தல், மொட்டை அடித்தல், கல்யாண மாலை சாத்துதல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள். நெய்விளக்கு ஏற்றவும் செய்கிறார்கள். பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம். சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்கிறார்கள். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்கிறார்கள். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். 
    
 தலபெருமை:
     
  மலை உச்சியில் சுவாமி : அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரமும் 5 கி.மீ. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனககிரி என்னும் பெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருநாமம் கனககிரீசுவரர் அல்லது பொன்மலைநாதர் என்று அழைக்கப்படுகின்றது.

சுடுதண்ணீர் அபிசேகம் : வேடன் ஒருவன் கிழங்கு அகழ்ந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டியபோது குபீர் என ரத்தம் கொப்பளித்தாம்.அதை மேலும் தோண்டிய போது அழகிய சிவலிங்கத் திருமேனி தெரிய வந்தது.அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து வந்தனர். காயம் ஏற்பட்டதன் காரணமாக வெந்நீரில் அபிசேகம் செய்தனர்.அது இன்றும் மலை மேல் உள்ள இறைவனுக்கு வெந்நீர் அபிசேகம் நடைபெற்று வருகிறது.சுயம்புத் திருமேனி மிகவும் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியும் அளவில் இருப்பதால் அருகிலேயே காசிவிசுவநாதர் லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காலங்காலமாக பூஜைகள் நடந்து வருகின்றன. இந்த வேடன் கதை, செவிவழிச் செய்தி ஆகும்.

அம்பிகை பெரியநாயகி ஆலயம் :
கற்றவர் போற்றும் காஞ்சி மாநகரில் அன்னை காமாட்சி தனிப்பெரும் ஆலயத்துள் எழுந்தருளியிருப்பது போல, இங்கும் அன்னை ஆதிசக்தி தனி ஆலயத்துள் எழுந்தருளியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றாள். இவ்வன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்றும் பெரியநாயகி என்றும் அழைக்கப்படுகிறது.தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. மலையடிவாரத்திலுள்ள பெரியநாயகி கோயில், சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 7 நிலை ராஜகோபுரம் மற்றும் 3 பிரகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவி இங்கு தவமிருந்து ஈசனிடம் சேர்ந்ததால், திருமணத்தடை உள்ளவர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. தவத்தை மெச்சி பங்குனி உத்திரத்தின்போது சுவாமி மலையிலிருந்து கீழே இறங்கி வந்து திருமணம் செய்து கொண்டு போகிறார் என்பது இத்தலத்தின் சிறப்பு.

இரட்டை மூலஸ்தானம்: ஒரு முறை இத்தலத்தின் வழியே போருக்கு சென்ற பல்லவ மன்னன், இங்குள்ள சிவனின் பெருமை பற்றி கேள்விப்பட்டான். போரில் வென்றால், சிவனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டான். வெற்றியும் பெற்றான். சிலர் கஷ்ட காலத்தில் கடவுளுக்கு நேர்ந்து கொள்வார்கள். காரியம் முடிந்ததும், கடவுளை மறந்து விடுவார்கள். மன்னனும் வெற்றிக்களிப்பில் இப்படியே மறந்தான். மீண்டும் ஒரு கஷ்டம் வரவே, சிவனுக்கு கோயில் கட்டினான். ஆனால், வேடன் கண்டெடுத்த சுயம்புலிங்கம் காணாமல் போய்விட்டது. வருத்தமடைந்த மன்னன் காசியிலிருந்து வேறு லிங்கம் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினான். கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததும், மறைந்த சுயம்புலிங்கம் கிடைத்தது. கடவுள் தன்னை மறந்தவரை தானும் மறந்து விடுகிறார் என்பதற்கு உதாரணமே இந்த நிகழ்ச்சி. அவருக்கு மன்னன் கனககிரீஸ்வரர் என பெயரிட்டு, அதே கருவறையில் பிரதிஷ்டை செய்தான். இப்படியாக ஒரே கருவறையில் எங்கும் இல்லாதபடி இரண்டு லிங்கங்கள் அமைந்தது.

உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பது போல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில், அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. மலையில் அம்மன் இல்லாததால், பிரதோஷம் இங்கு நடத்தப்படுகிறது. பவுர்ணமி நாட்களில் 3.5 கி.மீ தூரம் உள்ள இந்த மலையை கிரிவலம் வருகிறார்கள்.
 
     
  தல வரலாறு:
     
  ஒரு சமயம் அம்மையும் அப்பனும் கயிலை மால்வரையில் வீற்றிருக்கும்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சக்தியை நீக்கி சிவனை மட்டும் வணங்கிச் சென்றார்.அதுகண்டு வருத்தமடைந்த அன்னை இறைவனை நோக்கி வணங்கி அய்யனே தங்களுடலில் சரி பாதியை எனக்கு வழங்கியருள வேண்டும் என்று வேண்டினாள்.

இறைவனும் சக்தியை நோக்கி, பெண்ணே நீ பூவுலகம் சென்று கச்சியம்பதியில்(காஞ்சிபுரம்) காமாட்சி என்ற பெயருடன் தவமிருந்து என்னை பூஜித்து வா. உரிய காலத்தில் உன்னை மணந்து கொள்வேன். பின்னர் திருவருணைக்கு (திருவண்ணாமலை) வந்து வழிபாடு செய்யும்போது உமக்கு இடப்பாகம் தருவேன் என்று உறுதியளித்தார். அவ்வண்ணமே அன்னை கச்சியம்பதி வந்து தவமிருந்து ஏகாம்பரநாதரை மணந்தார். பின்னர் திருவருணைக்கு செல்லும்போது வழியில் தேவிகாபுரத்தில் ஒரு மண்டலம் தங்கி இங்குள்ள கனககிரி நாதரை வணங்கி தவமிருந்தார்.அதனால் இத்தலம் தேவிகாபுரம் என்று பெயர் பெற்றது என்பர். பின்னர் திருவருணைக்கு சென்று இடப்பாகம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்புரிகிறார்.
விஞ்ஞானம் அடிப்படையில்: உள் மண்டபத்தின் தூணில் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக 9 பெண்களின் சிலையை யானை நிற்பது போல் வடிவமைத்துள்ளனர். மலையை விட்டு கீழே இறங்கும் வழியில் தேவி தவம் செய்ததாக கருதப்படும் இடத்தில், அன்னையின் திருவடி உள்ளது. மலையடிவாரத்தில் கோகிலாம்பாள் சமேத காமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் மொத்தமே 9 கல்லால் அமைக்கப்பட்டுள்ளது.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar