வைகாசியில் பத்து நாள் பிரம்மோற்சவம் நடக்கிறது. திருவிழாவில் கருட சேவை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 6ம் நாளில் பெருமாளும், ஆண்டாளும் யானை வாகனத்தில் அமர்ந்து மாலை மாற்றி கொள்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தல சிறப்பு:
ராமர் வழிபட்ட பெருமாள் கோயில்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில்,
செங்கம் -
திருவண்ணாமலை மாவட்டம்
போன்:
-
பொது தகவல்:
கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, மதில் ஆகிய அமைப்புக்களுடன் உயர்ந்த கோபுரம் கொண்டது இக்கோயில். மகாமண்டபத்தை கருங்கல் தூண்கள் தாங்கியுள்ளன. மேலே ராமாயண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பிரார்த்தனை
மனவியாதி உடையவர்களை இங்குள்ள ஆழ்வார்கள் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபட்டு, நோய் தீர வேண்டிக்கொள்கிறார்கள். திருமணத்தில் தடை உள்ள பெண்கள் காலை வேளையில் பெருமாளை சுற்றி வந்தால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார்.பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக் கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.
ஏழை ஒருவனது தோஷத்தைப்போக்கி அவனுக்கு புதையலை காட்டிய வள்ளல் இந்த பெருமாள். சங்க காலத்தில் செங்கம் நகரை "செங்கண்' என அழைத்தனர்.இதை திம்மப்பன் ஆட்சி செய்த போது, "தளவா நாயக்கன்' என்ற குறுநில மன்னன் கப்பம் வசூல் செய்ய செங்கண் நகருக்கு வந்திருந்தான். அப்போது இவனும் இவனது குடும்பத்தினரும் கட்டியதே இக்கோயில்.
700 ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கும் 60 அடி தொலைவிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சுரங்கப்பாதை இருந்திருக்கிறது. போர்க்காலங்களில் மன்னர்கள் இந்த பாதையை பயன்படுத்தி உள்ளனர்.
தல வரலாறு:
ராமாயண காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்த போரில் ராவணன் கொல்லப்பட்டான். இதனால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் தீர இத்தலத்திற்கு வந்து 13 நாட்கள் வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று பிரம்மன் கூறினார்.இதன்படி ராமனும் இத்தலம் வந்து 13 நாட்கள் தங்கி வழிபட்டு தன் தோஷத்தை போக்கியதாக தலபுராணம் கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ராமர் வழிபட்ட பெருமாள் கோயில்.