இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை மணி 3 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு யோகராமச்சந்திர மூர்த்தி திருக்கோயில்,
படவேடு - 606 905.
திருவண்ணாலை மாவட்டம்.
போன்:
+91 4181-248 224, 94435 40660
பொது தகவல்:
கோயிலுக்கு நேரே வெளியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர் உள்ளனர். பிரகாரத்தில் வேணுகோபாலர், பரசுராமர், ஆஞ்சநேயர் உள்ளனர். இக்கோயிலுக்குப் பின்புறமுள்ள கோட்டை மலையில் வேணுகோபாலர் கோயில் உள்ளது. கோயிலில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் பிரசித்தி பெற்ற படவேடு ரேணுகாம்பாள் கோயில் இருக்கிறது.
பிரார்த்தனை
கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமியை வழிபடுகின்றனர். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காகவும் வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
நெய் தீபம் ஏற்றியும், பாசிப்பயறு, சர்க்கரைப் பொங்கல் படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
புஷ்பக விமானத்தின் கீழ், ராமபிரான் வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். அருகில் சீதாப்பிராட்டி அமர்ந்திருக்கிறாள். ராமர், சீதை இருவரின் சிலையும் ஒரே கல்லில், ஒரே பீடத்தில் அமர்ந்தபடி வடிக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு அருகில், ஆஞ்சநேயர் அமர்ந்து கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கிறார். ஆஞ்சநேயருக்கு ஆசிரியராக இருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் இங்கு குரு அம்சமாக போற்றப்படுகிறார். எனவே, சக்கரவர்த்திக்குரிய போர் ஆயுதங்கள் எதுவும் இல்லை. அருகிலுள்ள லட்சுமணர் மட்டும் கையில் வில், அம்பு வைத்திருக்கிறார்.
கல்வித்தலம்: ராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டுத்தலமாக இக்கோயில் உள்ளது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமக்காக இங்கு ஊற வைத்த பாசிப்பயிறும் (பயத்தம் பருப்பு), சர்க்கரைப்பொங்கல் மற்றும் பானக நிவேதனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தாயார் சிறப்பு: ராமபிரான் ஏகபத்தினி விரதன் ஆவார். அதாவது, ஒருத்தியையே மனைவியாகக் கொண்டு,ஒருவனுக்கு ஒருத்தி என்ற தர்மத்தை உணர்த்துபவர் இவர். ஆனால், இக்கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள சீதையைத் தவிர, செண்பகவல்லித்தாயாருக்கும் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயருக்கு "தானே பரமாத்மா' என்று உணர்த்தியதால் இவர், பெருமாளின் அம்சமாகிறார். இதை உணர்த்தும்விதமாக இங்கு தாயாருக்கு சன்னதி எழுப்பியுள்ளனர். தவிர, விஷ்ணு துர்க்கைக்கும் சன்னதி உள்ளது. ஆண்டாள் சன்னதி கிடையாது.
சொர்க்கவாசல் இல்லை:வால்மீகி இயற்றிய ராமாயணத்தின் முதல் ஸ்லோகத்தில், ராமபிரான் யோக ராமச்சந்திரனாக இருக்கும் அமைப்பைப் பற்றி பாடியுள்ளார். இந்த ஸ்லோகத்தின் பொருளை உணர்த்தும்விதமாக அமைந்த கோயில் இது. இவர் உலகின் நிரந்தரமான மெய்ஞான நிலையை உணர்த்தும் கோலத்தில் இருப்பவர் என்பதால், நிலையான இன்பமான மோட்சம் கிடைக்க மட்டுமே இவரை வழிபடுகிறார்கள். இதனால், இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
கடல் தீர்த்தவாரி: பவுர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகள் மற்றும் புனர்பூச நாட்களில் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். ஆவணி இரண்டாம் வெள்ளியன்று ராமர், சீதை, லட்சுமணருடன் கருட சேவை காட்சி தருவார். மாசி மகத்தன்று கோதண்டராமர், இங்கிருந்து மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி கண்டு திரும்புவார். பங்குனியில் நடக்கும் ராமநவமி விழாவில், உத்திரத்தன்று சுவாமி திருக்கல்யாணம் நடக்கும்.
தல வரலாறு:
உலகத்தின் தோற்றம் மற்றும் அதன் இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது வேதங்கள் ஆகும். இத்தகைய வேதத்திற்கு மூலமாக இருப்பவர் யார்? அதை இயற்றியவர் யார்? அதன் சாரம் என்ன? என ஆஞ்சநேயருக்கு சந்தேகம் உண்டானது. தனக்கு சந்தேகம் தீர்க்கும்படி ஆஞ்சநேயர், ராமபிரானை வேண்டினார். சுவாமி சின்முத்திரை காட்டிய தனது வலது கையை நெஞ்சில் வைத்து, ""எல்லா உயிர்களுக்குள்ளும் பரமாத்மா என்னும் இறைவன் இருப்பதைப்போல, நானே வேதமாகவும், வேதத்திற்குள் அதன் தத்துவமாகவும் இருக்கிறேன்' என்று உணர்த்தினார். இந்த அமைப்பில் அமைந்துள்ள கோயில் இது. யோக நிலையில் இருப்பதால் சுவாமிக்கு, "யோக ராமச்சந்திரமூர்த்தி' என்ற பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இத்தலத்தில் ராமபிரான் புஷ்பக விமானத்தின் கீழ், வீராசனத்தில் அமர்ந்து, சின்முத்திரை காட்டிய வலது கையை மார்பில் வைத்திருக்கிறார். இது போன்ற அமைப்பை காண்பது அரிது. இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை மட்டும் நடக்கும்.
இருப்பிடம் : திருவண்ணாமலை - வேலூர் சாலையில் 48 கி.மீ., (வேலூரில் இருந்து 32 கி.மீ.,) தூரத்திலுள்ள சந்தவாசல் சென்று, அங்கிருந்து 7 கி.மீ., சென்றால் படைவேடு செல்லலாம். பஸ் ஸ்டாப்பில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.