இங்குள்ள நந்தி பகவான் நெற்றியில் திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பதும், புதன் பிரதோஷ தலமாக இருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு. நாமபுரீஸ்வரரை மார்கழி 25ல் இருந்து தை 10 வரை காலை 6.30க்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் மூன்று நிமிடம் சிவபூஜை செய்வது இத்தலத்தில் மற்றொரு சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,
ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.
போன்:
+91 99767 92377
பொது தகவல்:
இங்கு சூரியன், காலபைரவர்,பாலசனீஸ்வரர், லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, ஆதி மாணிக்கவாசகர், ஆஞ்சநேயர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.
பிரார்த்தனை
கிரக ரீதியாகவோ, ஜாதகரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அது நீங்கவும், கல்வி அறிவில் சிறக்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றியும், குழந்தைகளை தத்துக் கொடுத்து திரும்ப தானமாகப் பெற்று நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
தட்சிணாமூர்த்தி ரிஷபத்தோடும் நான்கு ரிஷிகளுக்கு பதிலாக இரண்டு ரிஷிகளுடனும் அருள்பாலிக்கிறார். காலடியில், முயலகன் இருக்கிறான். இவரை மேதா தட்சிணாமூர்த்தி என்கின்றனர். ஏற்கனவே, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில், நவக்கிரக குரு ஸ்தலம் உள்ளதால், இதை இரண்டாம் குரு ஸ்தலம் என்கின்றனர். குரு பகவானுக்குரிய கொண்டைக்கடலை ஆலங்குடி தாலுகாவில் பயிரிடப்பெற்று, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் கோயில்களில் சூரியன், சந்திரன் இருப்பது வழக்கம், ஆனால், இங்கு சூரியன் மட்டுமே காணப்படுகிறார். சூரியனின் வலது பக்கம் கால பைரவரும், இடது பக்கம் அவருடைய மகனான சனீஸ்வரர், குழந்தை வடிவில் பாலசனீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளார். ஆக, இதை சனி ஸ்தலம் என்றும் கூறலாம். குரு பெயர்ச்சி, சனிபெயர்ச்சி காலங்களில் சென்று வர ஏற்ற தலமாக உள்ளது.
நிபந்தனையுடன் குழந்தை தத்து: கிரக ரீதியாகவோ, ஜாதகரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுக்கும் வாங்கும் பழக்கம் எங்கும் இருக்கிறது. அதற்கு மிக உகந்த ஸ்தலம் இது. ஆனால், அவ்வாறு தத்து கொடுக்கும் நபருக்கு வேறு கோயிலில் வேண்டுதல் எதுவும் பாக்கி இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்த நேர்ச்சைகளை நிறைவேற்றி விட்டு குழந்தையை தத்து கொடுக்க இங்கு வர வேண்டும். இவ்வகையில், இவர் இறைவனுக்கு கூட கடனைத் தீர்த்தவராகக் கருதப்படுகிறார். சுத்த சாசன கிரயமாக என்னுடைய குழந்தையை நாமபுரீஸ்வரருக்கு தத்து கொடுக்கிறேன், இனி இது என்னுடைய குழந்தையில்லை, நாமபுரீஸ்வரரின் குழந்தை, என்று கூறியபடி பெற்றோர் கண்ணீர் மல்க தங்கள் குழந்தையை குருக்களிடம் ஒப்படைக்கின்றனர். குருக்கள் அந்தக் குழந்தையை தாய் மாமா அல்லது தாத்தா, பாட்டியிடம் ஒப்படைக்கிறார். குழந்தையின் திருமணத்தின் போது பெற்றோர் கோயிலுக்கு மீண்டும் சென்று சுவாமியிடம், என்னுடைய குழந்தையை சுவாமிக்கு தத்து கொடுத்ததாக கூறிய என்னுடைய வாக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். பிள்ளைக்கு பிள்ளை என்பது போல் என்னுடைய பிள்ளைக்கு பதிலாக தென்னம் பிள்ளையை தானமாக வழங்குகிறேன், என்று கூறி தென்னங்கன்றை வழங்க வேண்டும். இங்கு வழங்கப்படும் தென்னங்கன்றுகளை நிர்வாகத்தால் பராமரிக்க முடிய வில்லை என்பதால், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை காணிக்கையாக வழங்குகின்றனர்.
புதன் பிரதோஷம்: சிவன் கோயில்களில் சனி பிரதோஷம் சிறப்பு வாய்ந்தது. ஆனால் இங்கு புதன் பிரதோஷம் சிறப்பாக கருதப்படுகிறது. புதனுக்கும், சனீஸ்வரருக்கும் அதிதேவதை மகாவிஷ்ணு. கருவறை சுவரின் பின்புறம் லிங்கோத்பவர் இருக்குமிடத்தில் மகாவிஷ்ணு உள்ளார். இதனால் இங்கு சனி பிரதோஷத்தை விட புதன் பிரதோஷம் சிறப்பாகிறது. புதன் கல்வி அறிவை வழங்குபவர் என்பதால், பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக இந்நாட்களில் இங்கு வந்து வழிபடலாம்.
நந்திக்கு நாமம்: மூலவர் எதிரில் அமர்ந்திருக்கும் அதிகார நந்தியின் நெற்றியில் நாமம் உள்ளது. இதன் காரணமாகவும் மூலவருக்கு நாமபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். மஹாவிஷ்ணு நந்தி ரூபத்தில் சிவனை வழிபடுவதாக நம்பிக்கையுள்ளது. இதை மால்விடை என்பர். திருப்பரங்குன்றத்தில் பெருமாளே சிவன் எதிரில் மால்விடையாக உள்ளார் என்பர்.
சிவனை சூரியன் வழிபடுதல்: நாமபுரீஸ்வரரை மார்கழி 25ல் இருந்து தை 10 வரை காலை 6.30க்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் மூன்று நிமிடம் சிவபூஜை செய்கிறார். நிச்சயதார்த்தம், திருமணங்களை நாமபுரீஸ்வரர் சந்நிதியில் நடத்துகின்றனர்.
ஆதி மாணிக்கவாசகர்: திருவாதாவூரிலிருந்து ஆவுடையார் கோயிலுக்கு செல்லும் வழியில் மாணிக்கவாசகர் ஆலங்குடி நாமபுரீஸ்வரரையும், அறம்வளர்த்த நாயகியையும் வணங்கி சென்றதற்கு அடையாளமாக தட்சிணாமூர்த்தி சந்நிதியை அமைத்துள்ளார். இதை நினைவூட்டும் வகையில் ஆதி மாணிக்கவாசகர் சந்நிதி இங்குள்ளது.
தல வரலாறு:
தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு வெளிப்பட்டது. முதலில் கிடைத்ததை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேவர்கள், விஷத்தை சிவபெருமானுக்கு வழங்கினர். சிவனும் உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆலகால விஷத்தைக் குடித்தார். அவ்வாறு விஷமருந்திய பெருமான் குடிகொண்ட தலம் ஆலங்குடி. ஆலம் என்றால் விஷம், குடி என்றால் ஊர் அல்லது குடித்தல். இந்த சம்பவத்தை நிகழ்வு கூறும் வகையில், 1,305ம் ஆண்டு, சுந்தரபாண்டியன் என்ற மன்னன் சிவனுக்கு கோயில் எழுப்பினான். சிவநாமமாகிய நமசிவாய, சிவாயநம ஆகியவற்றை இவர் முன் அமர்ந்து சொன்னால், வாழும் காலத்தில் செல்வமும், வாழ்வுக்குப் பின் கயிலாய பதவியும் கிடைக்கும் என்பதால் நாமபுரீஸ்வரர் என்று பெயரிட்டான்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:நாமபுரீஸ்வரரை மார்கழி 25ல் இருந்து தை 10 வரை காலை 6.30க்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் மூன்று நிமிடம் சிவபூஜை செய்கிறார். விஞ்ஞானம் அடிப்படையில்:இங்குள்ள நந்தி பகவான் நெற்றியில் திருநீறுக்குப் பதில் நாமம் அணிந்திருப்பதும், புதன் பிரதோஷ தலமாக இருப்பது இத்தலத்தின் தனிசிறப்பு.