இங்கு அம்மன் காளிதேவி சொரூபத்துடன், பஞ்சபூதங்களின்மீது அமர்ந்திருப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயில்
வைத்திகோவில், புதுக்கோட்டை.
பொது தகவல்:
கோயிலில் மகா மண்டபம் உள்ளது. அம்மனுக்கு எதிரில் சூலம் அமைந்துள்ளது. பிரகாரத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் இடமும் அமைந்துள்ளது.
பிரார்த்தனை
சகல சுபிட்சங்களும் கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தை வரம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
காப்பரிசி, பால், பட்டுப்பாவாடை மற்றும் தங்கத்திலோ, வெளியிலோ பொட்டு செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கவும், கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் வாய்க்கும்.
தலபெருமை:
இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வாதாக ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் முத்துமாரியின் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக்கொண்டால் விரைவில் குழந்தை வரம் வாய்க்குமாம். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப்பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ பொட்டு செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம்! விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவையொட்டி, பழைமை மாறாமல் மண்சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோயிலின் சிறப்பம்சம். ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இங்கே விசேஷம்! இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, மாங்கல்ய பலம் பெருகும் என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.
தல வரலாறு:
வைத்திகோவிலுக்கு அருகில் உள்ள ஆச்சூரணி எனும் இடத்தில் சகோதரிகள் ஏழு பேரும் தங்கியிருந்தனர். ஒருநாள், மற்ற சகோதரிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து சமைத்துக்கொண்டிருக்க, வைத்திகோவில் முத்துமாரி மட்டும் வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்தாளாம். சகோதரிகளில் ஒருத்தி இவளிடம் நீ மட்டும் ஏன் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கே? என்று கேட்க, முத்துமாரிக்குக் கோபம் வந்துவிட்டது. அவர்கள் சமைப்பதற்கு முன்னதாகவே தன் பங்குக்கு உரிய அரிசி, வெல்லம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, இங்கே தனியாகக் கோயில்கொண்டதாக சிறு கதை ஒன்றைச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். பின்னர் மற்ற சகோதரிகளும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று கோயில் கொண்வதாகவும் தல வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு அம்மன் காளிதேவி சொரூபத்துடன், பஞ்சபூதங்களின்மீது அமர்ந்திருப்பது சிறப்பு.
இருப்பிடம் : புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் விழியல் சுமார் 17 கி.மீ தொலைவில் வைத்திகோவில் என்ற இடத்தில் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறாள் முத்து மாரியம்மன்.