அம்மனுக்குகந்த வெள்ளி, அமாவாசை போன்ற நாட்கள் சிறப்பு பூஜைக்கு உரியவை என்றாலும் ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் வைபவங்கள் இத்தலத்தின் முக்கிய விழாக்கள் ஆகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி, மீனாட்சி, ஆண்டாள், மகாலட்சுமி மற்றும் கடைசி வெள்ளியன்று பத்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் கண்டுதொழ கண்கள் கோடி வேண்டும். ஆடிவெள்ளியன்று மாலையில் நடைபெறும் ஆடிப் பொன்னூஞ்சல் விழா இத்தலத்தின் பிரதான திருவிழாவாகும். ஐந்தாம் வெள்ளியன்று அம்மன் திருவீதி உலா வருவது கோலாகல நிகழ்வாகும்.
தல சிறப்பு:
அம்மனுக்கு எதிரே 108 மணியால் செய்த சூலமும், ஊஞ்சலும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில்,
சரவணம்பட்டி,
கோயம்புத்தூர்.
பொது தகவல்:
பத்ரகாளி கொலுவீற்றிருக்கின்ற தலம் தான் அம்மன் கோயில் என்னும் அற்புத க்ஷேத்திரமாகும். கோவை நகரிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது. அக்காலத்தில் இவ்வூரின் பிரதான தொழில் விவசாயம். சரவணம்பட்டியில் விளை நிலங்கள் சூழ்ந்த ஓடைக்கரையின் தென்பகுதியில் அமைந்துள்ளது இத்தலம். இவ்வம்மையின் விக்ரஹமானது அழகும் அருளும் பொருந்திய தொன்மை வாய்ந்ததாகும். இச்சிலையின் தொன்மையை அறியும் பொருட்டு தமிழ்நாடு அரசு சிற்பக்கலை வல்லுனர்களை அழைத்து வந்தனர். அவர்கள் சிலையை ஆராய்ந்து பார்த்து இச்சிலை 400 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தனர். ஒரு காலத்தில் ஊரின் ஒதுக்குப்புறமாக இருந்த இக்கோயில் இன்று நகர் சூழ்ந்த கோயிலாக விளங்குகிறது.
நமது பழந்தமிழ் மன்னர்கள் தாங்கள் வாழ கட்டி இருந்த அரண்மனைகளும், கோட்டைகளும் பெரும்பாலும் பட்டழிந்து போன நிலையில் அவர்கள் கட்டிய கோயில்கள் இன்றும் நின்று நிலைபெற்றுள்ளன. இக்கோயில் வளாகத்தில் காவல் தெய்வமான கருப்பண சுவாமியும், அம்மனின் குதிரைகள், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, விநாயகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் உள்ளனர். அம்மனுக்கு எதிரே 108 மணியால் செய்த சூலமும், ஊஞ்சலும் உள்ளன. எதிரே அம்மன் தீர்த்தக் கிணறு உள்ளது. தன்னையே கதி என்று நாடி வந்தவர்கள் என்றும் கைவிட்டதில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நிகழ்ந்த சம்பவம். மைசூரில் ஒரு விவசாயி வீட்டில் வைத்திருந்த நகை பணம் அனைத்தும் கொள்ளை போயின. சிறுகச்சிறுக சேமித்து வாங்கிய நகைகள் களவு போனதில் இடிந்துபோய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.
இந்நிலையில் கோவைக்கு ஒரு வேலை நிமித்தமாக செல்ல வேண்டி இருந்ததால் புறப்பட்டனர். அன்று வெள்ளிக்கிழமை வழியில் உள்ள இந்த கோயிலில் ஒரே கூட்டம். காரை நிறுத்தி ஒரு மன ஆறுதலுக்காக கோயிலின் உள்ளே சென்று அம்மனை தரிசித்தனர். நகைகள் களவு போன செய்தியை அம்மனிடம் வேண்டி, எப்படியாவது களவுபோன பொருட்களை திரும்ப கிடைக்கச் செய்யும்படி மன்றாடி வேண்டினர். பின் புறப்பட்டு கோவையை நோக்கிச் சென்றனர். என்ன ஆச்சரியம் கோவை நகரை அடையும் முன்பே மைசூர் காவல் நிலையத்திலிருந்து திருடன் அகப்பட்டு விட்டதாகவும், நகைகள் வந்து பெற்றுச் செல்லுமாறும் தகவல் வந்தது. அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமா? அம்பாளை நம்பினோர் கைவிடப்படார். அடுத்த வெள்ளிக்கிழமையன்றே இத்தலத்திற்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றி மகிழ்ச்சியுடன் திரும்பினர். அருகில் உள்ள ஊரில் கட்டிடம் கட்டும் தொழில் செய்பவர், இருசக்ர வாகனத்தில் செல்லும் போது நேர்ந்த விபத்தில் பலத்த காயமுற்று மயக்கமடைந்தார். தகவல்அறிந்து வந்த மனைவி இவர் நிலைகண்டு அதிர்ச்சியுற்று அழுது புலம்பி மயக்கமடைந்தார்.
ஆம்புலன்ஸ் வாகனம், அடிபட்டவர் மனைவி, மற்றும் உறவினர்களுடன் அரசு மருத்துவ மனையை நோக்கிப் புறப்பட்டது. வாகனம் இக்கோயிலை கடக்கும்போது மயக்கம் தெளிந்த அடிப்பட்டவரின் மனைவி இக்கோயிலின் அருகே நிறுத்தச் சொல்லி அம்மனிடம் கண்ணீர் மல்க தன் மாங்கல்யத்தை காப்பாற்ற மனமுருகி வேண்டி பின் புறப்பட்டார். மருத்துவ மனையை அடையும் முன்பே கணவன் கண்விழித்து சுயநினைவுடன் மனைவியைப் பார்த்தார். மருத்துவர்கள் அபாயக்கட்டத்தை கடந்து விட்டார் எனவே விரைவில் குணம் அடைந்து விடுவார் என தைரியம் கொடுத்தனர். மூன்று நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இன்றும் இத்தம்பதியினர் தவறாமல் கோயிலுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
பிரார்த்தனை
இங்கு முக்கிய பிரார்த்தனையாக திருமணத்தடை போன்றவற்றிற்காக பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் கருப்பு வளையல்களை சிவப்பு கலர் ரிப்பனில் மாலையாக தொடுத்து அம்மனுக்கு சாற்றி பூஜித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
கோவை மாவட்டத்தில் சம்ஹார மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் அம்மன் தலம் இது ஒன்றே. பீடத்தில் வலது காலை மடக்கி குத்து காலிட்டும், இடது காலை பீடத்தின் அடியில் கிடக்கும் மகிடாசூரன் மீது வைத்த நிலையில் அமர்ந்துள்ளார். சங்கு, கேடயம், மணி, உடுக்கை, கபாலம், திரிசூலம், வாள், கதாயுதம் என எட்டு கரங்களில் ஏந்தி அஷ்டபுஜ தேவியாக காட்சியளிக்கிறாள். விரித்த ஜடையுடனும் முக்கண்ணும் கொண்டு உக்கிர அம்மன் தோற்றத்தில் காவல் தெய்வமாக விளங்குகிறாள். பீடத்தில் இரண்டு மலர்ந்த தாமரை மலர்களுடன் காலடியில் இரு அசுரர்களும் ஒருசேர இருப்பது ஒரு வித்தியாசமான தோற்றமாகும். பத்ரகாளியம்மன் சுற்றுவட்டார கிராமத்தவர்களின் குல தெய்வமாக விளங்குகிறார்.
பல ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலைக் கடந்து செல்லும் போது காலில் செருப்புடன் செல்ல மாட்டார்கள். குதிரை மீதோ, வண்டியிலோ செல்ல நேர்ந்தால் இறங்கி நடந்து தான் கோயிலைக் கடந்து செல்வர். அந்த அளவிற்கு அம்மன் மீது பய பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தனர் என்பதை அறியும் போது மெய் சிலிர்க்க வைக்கும். இயற்கையில் சம்ஹார மூர்த்தியாக இருந்தாலும், நடைமுறையில் சாந்த சொரூபிணியாக பக்தர்களின் வேண்டுதலை தாயுள்ளத்துடன் கனிவோடு நிறைவேற்றுகிறார். மேலும் சுற்றுவட்டாரக் கிராமத்தவர்கள் அம்மனிடம் உத்தரவு பெற்று திருமணம், போன்ற மங்கல காரியங்களை மேற்கொள்கின்றனர். பொதுவாக பத்ரகாளியம்மன் கோயில் என்றால் உயிர்பலி பூஜை இருக்கும். ஆனால் இத்தலத்தில் ஆரம்ப காலந்தொட்டே அவ்வாறு எந்த உயிர் பலியும் இட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு:
இந்து சமய வழிபாட்டு நெறியில் சக்தி வழிபாடு சங்க காலத்திற்கு முன்பே அமைந்ததாகும். தமிழகத்தில் உள்ள நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையாகப் பிரித்ததுடன் அந்நிலங்களுக்குரிய அதி தெய்வங்களையும் அமைத்து தொன்றுதொட்டு வழிபட்டு வந்தவர்கள் நம்முன்னோர்கள். இவற்றில் பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவையை வைத்து வழிபட்டுள்ளனர். கொற்றவை வழிபாட்டை சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். பண்டைய தமிழர்கள் வீரத்திற்குரிய தெய்வமாக கொற்றவையாகிய காளியை வைத்து வழிபட்டுள்ளனர். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் செம்மாண்ட கவுண்டர், பூமாண்ட கவுண்டர் என இரு கொங்கு வேளாள பெருமக்கள் சீரோடும் சிறப்போடும் கோவையின் வடபகுதியில் வாழ்ந்து வந்தனர்.
செம்மாண்ட கவுண்டர் பெயரால் செம்மணன் பட்டி என இவ்வூரை அழைக்கலாயினர். பின் பேச்சு வழக்கில் செவணம்பட்டி என ஆயிற்று. செவ்வணன்- சிவப்பு திருமேனி கொண்ட முருகன் எனப் பொருள்படும். பிற்காலத்தில் இப்பெயர் சொல் வழக்கில் மருவி, சரவணம்பட்டி என்ற பெயர் நிலைத்து விட்டது. இவ்வூரின் அருகே ரத்தினகிரியில் குமரன் குடிகொண்டுள்ளதாலும் அருகே உள்ள மடாலயத்தில் திருமுருகன் வீற்று அருளாட்சி புரிவதாலும் இவ்வூருக்கு சரவணம் பட்டி என்பது பொருத்தமானதே. அன்னை பார்வதிதேவி உலகில் ஒவ்வொரு தீயசக்தி தோன்றும் போதும், அதை சம்ஹாரம் செய்து உலகுக்கு நன்மை செய்யும் பொருட்டு பல வடிவங்களில் தோன்றுவாள். மகுடாசூரன், சும்பன், நிசும்பன் போன்ற அரக்கர்களை சம்ஹாரம் செய்து பத்ரகாளியாக விளங்குகிறாள். படம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:அம்மனுக்கு எதிரே 108 மணியால் செய்த சூலமும், ஊஞ்சலும் சிறப்பு.
இருப்பிடம் : கோவை -சத்தியமங்கலம் சாலையில் 6 கி.மீ. தொலைவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது. சரவணம்பட்டி- அம்மன் கோயில் காந்திபுரம் பஸ் நிலையத்திலிருந்து தடம் எண் 24, 45, 57, 82, 111 மூலம் கோயிலை அடையலாம்.