தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 8வது தலம்.
திருவிழா:
தை மாதம் - பிரம்மோற்சவம் - 10 நாட்கள் நடைபெறும் - அமாவாசைக்கு மறுநாள் கொடி ஏற்றி காமதேனு கற்பக விருட்சம் - வாகனங்கள் வீதி உலா - கடைசி நாளில் ராவணேசுவரன் கயிலாய காட்சி - மிகவும் அதிக அளவில் பக்தர்கள் திரள்வது வழக்கம்.
ஆடி மாதம் - லட்ச தீபம் - ஆடி விசாகம் - ஞானசம்பந்தர் விழா, சுந்தரர் மோட்சம்
சித்ரா பவுர்ணமி, பங்குனி உத்திரம், மாசி மகம், அப்பாத்துரை தோப்பு திருவிழா
பிரதோசம் சிறப்பாக நடைபெறுகிறது.
சிவராத்திரி, சங்கடஹர சதுர்த்தி (வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிசேகம்), நர்த்தன கணபதிக்கு சதுர்த்தி அபிசேகம் உண்டு
ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் தலமரமான பனைமரத்துக்கும், நாகலிங்கத்துக்கும் சிறப்பு அபிசேகம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் அம்பாளுக்கு சகஸ்ரநாமம் -விளக்கு பூஜை - ஆடி தை மாதங்களுக்கு 108 குத்துவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.
வருடத்தின் விசேச நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினத்தின் போது சுவாமிக்கு விசேச பூஜைகள் அபிசேகங்கள் செய்யப்படும். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
தல சிறப்பு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது. அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று.சிவபக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்தி தேவர் படைத்துணையாக சென்றுள்ளார். இதற்காக இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும்.
திறக்கும் நேரம்:
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்,
செய்யாறு, திருவோத்தூர்-604 407
திருவத்திபுரம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
+91- 4182-224 387
பொது தகவல்:
சிவபெருமான் இத்தலத்தில் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் வேதப்பொருளை விளக்கி அருளிய காரணத்தால் இத்தலம் திருவோத்தூர் எனப்பட்டது. தற்போது "திருவத்திபுரம்' என அழைக்கப்படுகிறது.
இத்தலத்தை சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார்.
சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் "செய்யாறு' என அழைக்கப்படுகிறது.
இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். தலத்தில் உள்ள நாகலிங்கத்தை அபிசேகம் செய்தால் திருமணத்தடை நீங்கும். இத்தலத்தில் தலமரமாக உள்ள பனைமரத்தின் பனம்பழங்களை சாப்பிட்டால் குழந்தைபாக்கியம் கண்டிப்பாக கிடைக்கிறது. வெளிநாட்டிலிருக்கும் பக்தர்கள் எல்லாம் கூட இந்த மரத்தின் பனம் பழத்தை வேண்டிக் கேட்டுப் பெறுகின்றதால் பல வெளிநாடுகளுக்கும்கூட அனுப்பப்பட்டு வருகிறது.
நாகலிங்கம் அபிசேகம் : கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது. சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் ராகு காலத்தில் பூஜை செய்து வழிபட்டால் நாக தோசம் நிவர்த்தி ஆகும். ஆமை தோசமும் நிவர்த்தி ஆகிறது.
இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும்.மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்:
கல்யாண உற்சவம் செய்து வைத்தல், கவசம் சாத்துதல், நாகாபரணம் செய்து வைத்தல் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செய்கிறார்கள்.
நெய்விளக்கு ஏற்றவும் செய்கிறார்கள்.
பால், தயிர், இளநீர், குங்குமம், விபூதி, பன்னீர், சந்தனம், எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம்.
சுவாமிக்கு வேட்டி, அம்பாளுக்கு சேலை வழங்கல்,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்கிறார்கள்.
சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்கிறார்கள்.
ஆடிப்பூரத்தின் போது அம்பாளுக்கும் கார்த்திகையில் சுவாமிக்கும் சங்காபிசேகம் நடைபெறுகிறது. தவிர கலசாபிசேகமும் நடக்கிறது.
மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.
தலபெருமை:
இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும். சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம்.ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும். பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால்பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.
8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.
திருஞானசம்பந்தரால் 11 தேவாரப்பாடல்கள் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலம். அருணகிர நாதரால் பாடல் பெற்ற தலம். அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.
பனை மரம் : இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், ""எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர். உடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
நந்தி : இத்திருக்கோயிலில் நந்தி மூலவரை நோக்கி நிற்காது. அதற்கு நேர் மாறாக வாயிலை பார்த்தபடி இருக்கும்.ஈசன் தேவர்களுக்கு வேதம் ஓதிக்கொண்டிருந்தாராம்.அப்போது தக்கவர்களைத் (அதாவது பாடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது வேறு யாராவது வந்து இடைஞ்சல் செய்துவிடக்கூடாது என்பதுபோல்) தவிர வேறு யாரையும் உள்ளே நுழைய விடாது பார்த்துக் கொள் நந்தியை பணித்தார் என்று புராணம் சொல்லுகிறது.
இது இவ்வாறிருக்க இன்னொரு வரலாற்றுக் கதையும் சொல்லப்படுகிறது.அதாவது தொண்டைமான் எதிரிகளுடன் போர் புரியச் செல்ல தயக்கம் காட்டி இறைவனை வேண்ட,"பயப்படாதே உனக்கு துணையாக நம் நந்தியை அனுப்புகிறேன்,' என்று ஈசன் கூறியதால் நந்தி வாயில் நோக்கி செல்வது போல் அமைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
நாகநாதர்: திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
11 தலையுள்ள இதை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி.
இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். ஓத்து என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது.
திருஞான சம்பந்த பெருமான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இங்கு போந்து வேதபுரீசுவரரையும் இளமுலையம்பிகையையும் வழிபட்டு ஆண்பனை பெண்பனையாய்க் காய்க்குமாறு பதினோறு பாசுரங்கள் பாடியருளினார்.
தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் பெற்றி மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம். ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.
இருப்பிடம் : சென்னை - வந்தவாசி(வழி - செய்யாறு), சென்னை - திருவண்ணாமலை(வழி - காஞ்சி செய்யாறு) மார்க்கமாக செய்யாறு வந்து கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம்.