ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தரவரதராஜப்பெருமாள் கோயில்,
நல்லூர் - 604406, வந்தவாசி தாலுகா
திருவண்ணாமலை மாவட்டம்.
போன்:
-
பொது தகவல்:
இத்தலத்திற்கு அருகில் திரவுபதிக்கு தனிக்கோயில் இருக்கிறது. கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன், தர்மர் ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக உள்ளனர்.
இக்கோயிலில் சித்திரையில் நடக்கும் பிரம்மோற்ஸவத் தின் போது பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், ஒரே சப்பரத்தில் உலா செல்வது விசேஷம்.
பிரார்த்தனை
இத்தலத்து சுவாமிக்கு, "பிள்ளைப்பேறு நாயகன்' என்ற பெயரும் உண்டு. இவரிடம் வேண்டிக்கொள்ள புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
கருடாழ்வாரை, பெருமாள் எதிரே வணங்கியபடிதான் பார்த்திருப்பீர்கள். அரிதாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் போன்ற ஒரு சில தலங்களில் சுவாமியின் அருகில் அவர் இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகிலுள்ள நல்லூர் சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார். இந்த பெருமாள் குழந்தை வரம் தருபவர் என்பதால் "பிள்ளைப் பேறு நாயகன்' என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறார். கருடாழ்வார் சிறப்பு: மூலஸ்தானத்தில் சுவாமி, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உடன் தாயார்கள் இல்லை. அந்தணர்கள் பிரதிஷ்டை செய்து வணங்கிய சுந்தர வரதராஜர், தனிசன்னதியில் இருக்கிறார். இவரே இத்தலத்தின் மூல மூர்த்தி என்பதால், தினமும் இவருக்கே முதல்பூஜை செய்யப்படுகிறது. ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு, இடது கீழ் கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார். அருகில் ஸ்ரீதேவி, பூதேவி காட்சி தருகின்றனர். இவரது பீடத்தில் ஆஞ்சநேயர் மண்டியிட்டு வணங்கிய படியும், மகரிஷிகள் தவம் செய்தபடியும் இருப்பது விசேஷம். மேலே கந்தர்வர்கள் உள்ளனர்.
சுந்தரவரதராஜரின் வலது பாதத்திற்கு அருகில் கருடாழ்வார், மண்டியிட்டு வணங்கியபடி இருக்க, சுவாமி அவருக்கு மேலே, தன் வலது கையால் ஆசிர்வதித்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. இந்த கருடாழ்வார், பக்தர்களின் குறைகளை பரந்தாமனிடம் பரிந்துரைத்து நிவாரணம் செய்பவர் என கருதப்படுவதால், "பரிந்துரைக்கும் கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். மற்றொரு கருடாழ்வார், மூலஸ்தானத்திற்கு எதிரே சுவாமியை வணங்கியபடி இருக்கிறார்.
சிறப்பம்சம்: இத்தலத்து சுவாமிக்கு, "பிள்ளைப்பேறு நாயகன்' என்ற பெயரும் உண்டு. இவரிடம் வேண்டிக்கொள்ள புத்திரப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு அழைக்கிறார்கள்.
வைகாசி விசாகத்தன்று, சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். பிரதான தாயார் சுந்தரவல்லி தனி சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் வடக்கு நோக்கி, தனிச்சன்னதியில் இருக்கும் ஆஞ்சநேயர் கையில் சஞ்சீவி மலையுடன், கிளம்பும் கோலத்தில் இருக்கிறார். ஆண்டாளுக்கும் சன்னதி இருக்கிறது. உற்சவ மூர்த்தியுடன்ராமானுஜர்,வேதாந்ததேசிகர் இருக்கின்றனர். சிவனுக்கு உகந்த வில்வமரமே இங்கு தலவிருட்சம். பல்லாண்டுகளுக்கு முன்பு இங்கு பெருமாளுக்கு பல யாகங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. யாகம் செய்த "யாகசாலை ஸ்தூபி' கோயில் அருகில் இருக்கிறது. எனவே இத்தலத்திற்கு "சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரும் உண்டு.
தல வரலாறு:
முன்னொரு காலத்தில் தலயாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இங்கு தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் கிளம்பியபோது, இவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து, தான் இத்தலத்தில் தங்க விரும்புவதாகக் கூறினார். அந்தணர்கள் மகிழ்ச்சியுடன், இங்கு கோயில் எழுப்பினர். நாளடைவில் இந்தக் கோயில் பாழடையவே,பிற்காலத்தில் புதிய கோயில் கட்டப்பட்டது. சுவாமி காண்போரை வசீகரிக்கும் அழகுடன் காட்சியளிப்பதால், "சுந்தர வரதராஜர்' என்று அழைக்கப்படுகிறார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டிருக்கிறது. சுந்தரவரதராஜப்பெருமாள் கோயிலில் கருடாழ்வார், பெருமாளின் திருவடியின் கீழ் அமர்ந்து, வணங்கிய கோலத்தில் உள்ளார்.
இருப்பிடம் : மேல்மருவத்தூரில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ள வந்தவாசி சென்று, அங்கிருந்து 13 கி.மீ., டவுன் பஸ்களில் சென்றால் நல்லூரை அடையலாம். வந்தவாசியில் இருந்து குறித்த நேரத்தில் மட்டுமே பஸ்கள் செல்கிறது.