கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்வது தலத்தின் சிறப்பாகும்.
திறக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோபுர வாயிலைத் தாண்டியதும், மகா மண்டபம் உள்ளது. கருவறைக்கு இடதுபுறம் பாலகணபதி அருள்பாலிக்கின்றார். கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்கின்றாள். இவளை தரிசிக்கும்போதே நம்மனதில் உள்ள கவலைகள் யாவும் அகன்று விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனை
நினைத்த காரியங்கள் நிறைவேறவும், திருமணத்தடைகள் நீங்கவும் இங்குள்ள அம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு திருமாங்கல்யம் சாத்தி, தங்களது நேர்த்திக்கடனை காணிக்கையாக்குகின்றனர்.
தலபெருமை:
பவுர்ணமி நாளில் அம்பாளுக்கு ஹோமம் செய்து, சிறப்பான வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. சித்ரா பவுர்ணமி நாளில், பூச்சொரியல் விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அமாவாசை நாளில் மாலையில் நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேன், திரவியப் பொடி, மாப்பொடி, நெய், பன்னீர், பால், தயிர், இளநீர், சந்தனம் என பதினொரு வகை திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அம்பாள் பதினாறு பேறுகளும் அருள்வதாகச் சொல்லி உருகுகின்றனர் பக்த கோடிகள். ஆனி மாதம், அம்பாளுக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. முதல் வெள்ளியன்று பழ அலங்காரம் இரண்டாம் வெள்ளியன்று சந்தனக்காப்பு அலங்காரம், மூன்றாம் வெள்ளியன்று வளையல் அலங்காரம், நான்காம் வெள்ளியன்று ரூபாய் நோட்டுகளாலான அலங்காரம் என்று விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. தை மாதத்தின் மூன்றாம் வெள்ளியில் காய்கறி அலங்காரம் செய்யப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு காய்கறிகளையே பிரசாதமாக அளிக்கினறனர். அதனைப் பெறுவது, ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் வராமல் காத்திடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இக்கோயிலில், தினமும் ஒரு கால பூஜை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. காளி, சினம்மிக்க தெய்வமாகக் கூறப்பட்டாலும், பக்தர்களுக்கு சீர்மணக்க அருள்பவள். மங்களங்கள் யாவும் அளிப்பவள். இந்த அன்னை, தன்னை நாடுவோர், வேண்டிய வண்ணமே காரியசித்தி அடைய வைத்து மனம் குளிரவைத்து, உன்னத வாழ்வு அளிப்பதாய் பக்தர்கள் மனம் சிலிர்க்கக் கூறுகின்றனர். பகலவன், உதிக்கும் திசை நோக்கி அமைந்துள்ள கோயிலின் கோபுர தரிசனம், நம் மனத்திலுள்ள அகந்தையை நீக்கி, மன அமைதியையும் பொறுமையையும் அளிக்கிறது.
தல வரலாறு:
வெகு ஆண்டுகளுக்கு முன்னர், பூந்தோட்டமாகத் திகழ்ந்த இவ்விடத்தில், அம்மன் எழுந்தருளியதாலும் சாத்வீகமான பூப்போன்ற புன்னைகையுடன் திகழ்வதாலும் பூங்காளி என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். அன்னை காளி, அமைதியே உருவாகக் காட்சிதரும் கோயில் ஒன்று, மலைக்கோட்டை மாநகரில் தில்லைநகர், தென்னூர், புத்தூர், உறையூர் ஆகிய ஊர்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இருள் போக்கும் ஒளியாகத் திகழும் தேவி பூங்காளி அம்மனாக புன்னகை தவழும் முகத்துடன் இங்கே அருள்புரிகின்றாள்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:கருவறையில் அம்பாள், இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அலங்காரமாய் அருள்பாலிக்கிறார். ஒரு கையில் தாமரைப் பூவும் தாங்கி மற்றொரு கையை இடது தொடை மீது வைத்தவாறு, சாத்வீகமாகத் திகழ்வது தலத்தின் சிறப்பாகும்.