உயர்ந்த நீண்ட மதில் சுவர்களால் சூழப்பட்டு, கிழக்கு திசைநோக்கி அமைந்த கோயில். கோபுர வாசல் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகா மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம், நந்திதேவர் தரிசனம் கிடைக்கிறது. அர்த்த மண்டபத்தில் அழகழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கற்தூண்கள் நமது கண்ணையும் கருத்தையும் கவருகின்றன. கருவறையில் கைலாசநாதர் கருணையே உருவாக காட்சி தருகிறார். கோயில் வெளிப்பிராகாரத்தின் தெற்குச் சுற்றில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலை விநாயகர், மேற்குச் சுற்றில் அண்ணாமலையார், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வடக்குச் சுற்றில் சண்டேசுவரர், துர்க்கை, கிழக்குச் சுற்றில் நவகிரகம், சந்திரன், பைரவர், சூரியன், உஷா, பிரதியுக்ஷா சன்னதிகள் காணப்படுகின்றன.
பிரார்த்தனை
சகல ஐஸ்வரியங்கள் பெற பக்தர்கள் இங்குள்ள கைலாசநாதரையும், ஆனந்தவல்லி அம்மனையும் மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கும், இறைவனுக்கும் பாலபிஷேகம் செய்தும், புது வஸ்திரம் சார்த்தியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் எல்லாவற்றிலும் காஞ்சி கைலாசநாதர் என்றே இறைவனின் திருநாமம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் ஆனந்தவல்லி அம்மன் அமைதி தவழ காட்சி தருகிறாள். அவளைக் காண கண்கோடி வேணடும். மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. தல விருட்சமாக வில்வமரம் விளங்குகிறது. அன்றாட பூஜை கைங்கர்யங்களுக்காக, வடக்குச் சுற்றில் வாசமலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர்ச்சி மிக்க நந்தவனம் உள்ளது. அதில் ருத்ராட்சம், திருவோடு மரங்களும் செழித்து நிற்கின்றன. வெள்ளிக்கிழமைகளில் பன்னிரு திருமுறை மன்றத்தாரால் தேவார, திருவாசக பாராயணம் நடத்தப்பட்டு வருகிறது. திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழா சித்திரை பிரம்மோற்சவம். பத்து நாட்களுக்கு அதிவிமரிசையாக நடைபெறும் கோயிலின் எதிரே தெப்பக்குளம் உள்ளது.
தல வரலாறு:
கி.பி. 13ஆம் நூற்றாண்டில், பிற்காலப் பாண்டிய மன்னரான குலசேகர பாண்டியனால் இவ்வூரில் ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு ஒரு கற்றளி எழுப்பப்பட்டது. பின்னர் கி.பி. 1227ஆம் ஆண்டில், மாறவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் விக்கிரம பாண்டியன் ஆகியோரால் இக்கோயில் திருப்பணி மற்றும் விழாக்களுக்காக பல்வேறு தான, தர்மங்கள் செய்யப்பட்டதை அருகேயுள்ள பத்ரகாளியம்மன் கோயில் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கி.பி. 10ஆம் நூற்றாண்டுவரை இப்பகுதியில் சமண மதமும் நீடித்திருந்தது. கைலாசநாதர் கோயிலுக்கு வடக்கே கலைநயமிக்க சமண தீர்த்தங்கரர் கோயில் ஒன்று காணப்படுகிறது. அதிலுள்ள கல்வெட்டு ஒன்றில் இராகவன் என்கிற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.