பாண்டிய நாட்டில் உள்ள சிறு கிராமம் சன்னியாசி, இங்கு பகழிக்கூத்தர் என்ற கவிஞர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தது. மருத்துவரை நாடினாலும் நிரந்தரமாக நோய் குணமாக வழி கிட்டவில்லை. ""இறையருளால்தான் வயிற்றுவலி குணமாகும் என்பதை உணர்ந்து பகழிக்கூத்தர், திருச்செந்தூர் முருகனைப் பிரார்த்தித்தார். அப்போது அந்த வழியே வந்த சிவனடியார் ஒருவர், பகழிக்கூத்தரிடம் திருச்செந்தூர் இலை விபூதியைக் கொடுத்தார். அதில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகழிக்கூத்தர், அதில் கொஞ்சத்தை வயிற்றிலும் பூசிக்கொண்டார். என்ன ஆச்சர்யம்... வயிற்றுவலி உடனே குணமானது! இலை விபூதியைக் கொடுத்த சிவனடியாரை தேடினார். அவரைக் காணவில்லை. எல்லாம் முருகனின் அருள் என்பதை உணர்ந்த பகழிக்கூத்தர், நன்றிகடனாக கந்தவேல் குறித்து பாமாலை ஒன்று பாடினார். அதுவே, திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் என்று போற்றப்படுகிறது.