பதிவு செய்த நாள்
23
டிச
2019
04:12
கிளி வாகனம் பொதுவாக சிவன் கோயில்களில் அம்பாளுக்குரியதாகக் கொள்ளப் படுகிறது. காரணம், விஷ்ணு கோயில்களில் தாயார் தனியாக வெளியே வலம் செல்வதில்லை. கிளி வாகனம் இலக்கியத்திலும் புராணங்களிலும் மன்மதனின் வாகனமாகக் கருதப்படுகிறது. நாயகி, தன் காதல் கைகூடுமானால் காதல் தெய்வத்துக்கு ஒரு கிளி வாகனம் கொடை அளிப்பதாகப் பிரார்த்தனை செய்யும் ஒரு பாட்டை சீவக சிந்தாமணியில் (கரமஞ்சரியார் இலம்பகம் 2057) காணலாம்.
இலக்கியத்தில் இப்பறவை காதல் தூதுவனாகவும் கருதப்படுகிறது. தூது என்னும் இலக்கிய நடையில் 16 அல்லது 17ம் நூற்றாண்டின் கவி பளப்பட்டை சொக்கநாத பிள்ளை எழுதிய, அழகர் கிளிவிடு தூது என்ற நூலில் நாயகி தன் கிளியை திருமாலி ருஞ்சோலை அழகரிடம் தூது அனுப்புகிறாள். அவரிடம் தனக்கு உள்ள காதலை எடுத்துக் கூற வேண்டுகிறாள். மதுரை அருகே உள்ள அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரை உத்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சிறிய தமிழ் நூலில், கிளியை அதன் நல்ல குணங்களுக்காகப் பாராட்டி தனக்கு அழகர் மீதுள்ள காதலைக் கூறுகிறாள். மேலும், அந்தக் கோயிலின் அழகைப் பற்றியும் விவரித்து மற்றவர்கள் பார்க்காத சமயத்தில், தெலுங்கு பாஷையில் தனது காதலை அழகரிடம் தெரிவிக்க வேண்டுகிறாள் நாயகி. தனது காரியம் கைகூட வேண்டி கிளிக்கு புதிய வெற்றிலைகளை அளிப்பது, தனிப்பட்ட பூஜை ஒன்றை கிளிக்கு செய்வது போன்ற சில சலுகைகளை கிளிக்கு அளிக்கிறாள்.