சீதையை விட்டுப் பிரிந்த ராமர் பட்ட துயரம் ஒரு மடங்கு என்றால், சீதை அசோகவனத்தில் பட்டது கோடி மடங்கு. பிரியமான மனைவி இல்லாத துயரம் மட்டும் தான் ராமனுக்கு! ஆனால் அரக்கியர் சூழ்ந்திருக்க, காமுகனான ராவணனிடம் சிக்கித் தவித்தாள் சீதை. தன் நிலையை எண்ணி கலங்கி உயிரையும் விடவும் துணிந்தாள். அதற்காக அசோக மரத்தில் கழுத்தில் சுருக்கிட்டுக் கொள்ள முயன்றாள். அந்த தருணத்தில் அங்கு வந்தார் அண்ணல் அனுமன். மேகம் கூடி மழை கொட்டினால், பட்டுப் போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ அது போலானது அனுமனின் வரவு. மகாலட்சுமியான சீதையின் துன்பம் போக்கி நம்பிக்கை அளித்ததால் தான் அவரை "பெண்களின் சுவாமி என வழிபடுகிறோம். இவரை சரணடைந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். வருத்தம் தீரும். பிரிந்த கணவருடன் சேரும் பாக்கியம் கைகூடும். கன்னியருக்கு ஸ்ரீராமனைப் போல நல்ல கணவர் அமைவர்.