பதிவு செய்த நாள்
11
மே
2012
02:05
வாசஸ்பதி மிஸ்ரர் நன்கு படித்த பண்டிதர். பண்பாளர். அவர் தனது வாழ்க்கையில் ஒரு மகத்தான் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். அதாவது வேதங்களை தொகுத்த வியாசர் எழுதிய பிரம்மசூத்திரம் என்ற நூலுக்கு விளக்கவுரை எழுதுவதே வாசஸ்பதி மித்ரரின் லட்சியமாக இருந்தது. விளக்கவுரை எழுதுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார் மித்ரர். மித்ரரின் பெற்றோர்கள் தன் மகனுக்கு எப்படியாவது திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என விரும்பினர். பெற்றோர்கள் விருப்பப்படி பாமதி என்ற குணமுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் உயர்ந்த லட்சியங்களுடன், தனது கனிந்த உணர்வுகளையும் பாமதி இணைத்துக்கொண்டாள். தன் கணவருக்கு தகுந்த உணவை சமைத்து தருவது, அவருக்குரிய துணிகளை துவைத்து கொடுப்பது, குளிப்பதற்கு நீர் எடுத்து வைப்பது போன்ற அனைத்து வேலைகளையும் வேளை தவறாமல் சிறப்பாக செய்து வந்தாள் பாமதி. இப்படியே காலம் கடந்து சென்று
கொண்டிருந்தது.
பிரம்மசூத்திரம் என்ற மூல நூலில் உள்ள ஸ்லோகங்களை பாமதி படிப்பதை கண்ணை மூடி ரசித்து கேட்பார் மித்ரர். பாமதியின் குரலை எங்கிருந்தோ அசரீரி கேட்பதை போல் உணர்வார். பின் அந்த ஸ்லோகங்களுக்கான உட்பொருளை கிரகித்து கொண்டு ஆழ்ந்து சிந்தித்தவாறே சிறப்பாக உரை எழுதுவார். உடலை மறந்து உணர்வில் ஒன்று பட்ட இருவரும் ஒரே லட்சியத்திற்காக உழைத்தார்கள். பிரம்மசூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. மனிதகுலம் முழுமைக்கும் பயன்படக்கூடிய மகத்தான பொக்கிஷம் அது. எனவே இருவரும் கடுமையான உழைப்பை தர வேண்டியிருந்தது. நாட்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் கரைந்தன. ஓடி மறைந்த வருடங்களின் எண்ணிக்கையை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. சிறப்பான ஒப்புயர்வற்ற விளக்கவுரை எழுதும் பணி வெற்றிகரமாக நிறைவு பெறும் நல்ல நாளும் வந்தது. தனது கணவரின் லட்சியம் நிறைவேறியதைக்கண்ட பாமதி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினாள். வணங்கி நிமிர்ந்த மனைவியை, உலக நினைவு வந்தவராக அனேக ஆண்டுகளுக்கு பின் முதன் முதலாக உற்றுப்பார்த்தார் மிஸ்ரர்.
பஞ்சு போன்ற நரைத்த முடி, கருவளையம் விழுந்த கண்கள், சுருக்கம் விழுந்த தோல், தள்ளாமையுடன் கூடிய உடல், இவற்றுடன் கூடிய பெண்ணாக பாதி உடலுடன் பாமதி நின்று கொண்டிருந்தாள். பாமதியின் இளமை முழுவதையும் கால தேவன் கொண்டு போய்விட்டான். ஆனால் காலதேவனாலும் கொண்டு செல்ல முடியாத தியாகம் மட்டும் அவளுடனேயே இருந்தது. அந்த தியாகத்தின் ஆற்றல் பாமதியின் முகத்தில் மறைக்க முடியாத ஒளியாக மாறி பிரகாசித்தது. அதிர்ந்து போனார் மிஸ்ரர். இந்தப்பெண் யாராக இருக்கமுடியும்? சாட்சாத் பரமேஸ்வரனின் துணைவியே இங்கு எழுந்தருளிப்பதைப் போன்ற பிரம்மை அவருக்கு ஏற்பட்டது. உடனே அவர், அம்மா! நீ யார்? என்று கேட்டார். அதற்கு பாமதி சற்றும் கலங்காமல், சுவாமி! என் பெயர் பாமதி. அநேக ஆண்டுகளுக்கு முன்னால் என்னை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். திருமணமான நாள் முதல் நான், தங்களின் லட்சியத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், உங்களுக்கு சேவை செய்து வருகிறேன். தங்களின் லட்சியம் இன்று நிறைவேறி விட்டது. இதனால் என் பிறவிப்பயனை அடைந்தேன், என்று அமைதியாக கூறினாள் பாமதி.
அடி பாமதி! முதலில் நீ என்னை மன்னிக்க வேண்டும். நமக்கு திருமணமாகி இத்தனை வருடங்கள் ஓடி விட்டதா? என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. உன் வாழ்நாள் முழுவதும் எனக்காக எவ்வளவு உழைத்திருக்கிறாய், மித்ரரின் குரலில் அளவிட முடியாத சோகம் இழைந்தோடியது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதீர்கள், நீங்கள் எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாக முடிந்ததை நினைத்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று அமைதியாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். இதைக்கேட்ட மித்ரர் உணர்ச்சிவசப்பட்டு,உனது தியாகத்தை எதைக்கொண்டும் அளவிட முடியாது. ஒரு சாதாரண மனைவி பெறக்கூடிய சிறிய சுகங்களைக்கூட மனத்தாலும் நினைக்காமல் எனது பணிக்காக முழுமையாக உன்னை அர்ப்பணித்து கொண்டு விட்டாய். இத்தனை வருடங்களில் உன்னைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல், உன்னுடைய கஷ்டங்களைப்பற்றி ஒரு வார்த்தை கூட கூறாமல் எனது பணிக்காகவே வாழ்ந்த பெண் தெய்வம், என்றார். உன் தியாகத்தை நான் உளமாற மதிக்கிறேன், போற்றுகிறேன், வணங்குகிறேன் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்வதற்காக நான் ஒன்று செய்யப்போகிறேன்,என்று சொல்லி நிறுத்திவிட்டு, பாமதியின் அமைதியான முகத்தை அன்பு பொங்க நோக்கினார் வாசஸ்பதி மித்ரர்.
தனது வயதான கணவரின் வாயிலிருந்து என்ன விஷயம் வரப்போகிறது என்பதை பாமதியால் அறியமுடியவில்லை. என்ன சொல்லப்போகிறார் என்பதைக்கேட்க பரிவுடன் சேர்ந்த பணிவுடன் தனது கணவனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள் பாமதி. முதுமையின் தள்ளாமையையும் மீறிக்கொண்டு மித்ரரின் குரல் கணீரென்று ஒலித்தது ,பாமதி! உலகமே போற்றக்கூடிய பிரம்மசூத்திரத்தின் விளக்க உரையாக அமைந்த இந்த நூலுக்கு பாமதி என்ற உனது பெயரையே சூட்டப்போகிறேன். இன்றிலிருந்து இந்த மகத்தான நூல் பாமதி என்ற உனது பெயரால் இந்த உலகத்தில் வலம் வரப்போகிறது,என்றார். பாமதியின் இளமை அழிந்திருக்கலாம். உணர்வுகள் கரைந்திருக்கலாம். ஆனால் தியாகம் வென்றது. காலத்தையும் மீறி பாமதி என்ற நூல் கற்றறிந்த ஆன்மிகப்பெரியோர்களின் கைகளில் இன்றும் தவழ்ந்து கொண்டிருக்கிறது.