பதிவு செய்த நாள்
11
மே
2012
02:05
ஒரு சமயம், லோகநாயகன் சிவபெருமான், மனித வடிவம் கொண்டு ஒரு வில்வ மரத்தினடியில் தியானத்தில் அமர்ந்தார். அம்மரத்தின் மேல் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்தது. அது மரத்தில் உள்ள வில்வ இலைகளை பறித்து வாயிலிட்டு கடித்துக் கீழே துப்பியது. அவ்விதம் விழுந்த வில்வ இலைகள் தியானத்தில் இருந்த ஈசன் மீது பட்டு அவரை மறைத்து சிறுகுண்று போல் ஆனது. தியானம் கலைந்து கண்களை திறந்து பார்த்தார் ஈசன். தன் மேனி முழுவதும் அர்ச்சனை செய்யப்பட்டதுபோல், வில்வஇலைகள் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். தன் சுய உருவில் ஜடாமுடியும், பிறையும், திரிசூலமும், புலித்தோல் ஆடையுமாய் காட்சி தந்த பெருமான், மரத்தின் மேலே இருந்த குரங்கை பார்த்து ஐந்தறிவு பெற்ற விலங்கினமாய் இருந்தாலும், வில்வஇலைகளால் அர்ச்சித்து என்னை மகிழ்வித்திருக்கிறாய். உனது அடுத்த பிறவியில் மன்னனாகப் பிறந்து பல பல அருட்தொண்டுகள், தர்மகாரியங்கள் செய்து பரகதி அடைவாய், என அருளினார். ஈசனின் திருவருள் பெற்றதால் அந்தக் குரங்கு பகுத்தறிவையும் பெற்று உன்னதமான நிலையை அடைந்தது. சுவாமி! இந்த மிருக ஜன்மத்தில் என்னை அறியாமல் மனிதப்பிறவி அர்ச்சித்தேன். ஆனால் மனிதப்பிறவி அப்படி அல்ல. மனிதன் வஞ்சகன். சூது நிறைந்தவன், பொறாமை குணம் கொண்டவன். பகுத்தறிவு என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு, ஆன்மிக உணர்வுகளை வெட்டி விலக்குபவன். நான் மனிதனாக, மன்னனாகப் பிறந்தாலும் என் முகம் மட்டும் குரங்கு முகமாகவே இருக்க அருள் செய்ய வேண்டும். அது எனக்கு இந்தப் பிறவியை நினைவூட்டவும், இறைபக்தியுடன் நல்லுணர்வுகளோடு இருக்கவும் உதவிசெய்யும், என்றது.
ஈசனும் அப்படியே அருள்புரிந்தார். மறுபிறவியில் குரங்கு முகமும், மனித உடலும் கொண்டு பிறந்தது. திருவாரூரை ஆட்சி புரிந்தது. அவரது பெற்றோர் முசுகுந்தன் எனப்பெயரிட்டனர். முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள். முசுகுந்தன் வீரதீரம் மிக்க மகாவீரன். இவரது வீரத்தையறிந்த தேவேந்திரன், தேவ லோகத்தில் அசுரர்களுடன் நடந்த போரில் தனக்கு உதவிசெய்ய இவனை அழைத்தான். முசுகுந்தனும் போரில் ஈடுபட்டு இந்திரனின் வெற்றிக்கு உதவினான். இந்திரன் முசுகுந்தனை தனது மாளிகைக்கு அழைத்து பலவித உபசாரங்கள், மரியாதை செய்தான். அவன் எந்தப் பரிசைக் கேட்டாலும் அளிப்பதாகக் கூறினான். ஒரு அழகிய மண்டபத்தில் இருந்த சோமாஸ் கந்த விக்ரகத்தைப் பார்த்த முசுகுந்த மன்னன் அதைத் தனக்கு தருமாறு கேட்டான். அவ்விக்ரகம் மகாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்டது. மிக அபூர்வமானது என்பதால், இந்திரனுக்கு அதைக் கொடுக்க மனமில்லை. அதைப்போல் வேறொரு விக்ரகத்தை சிருஷ்டித்து, அதை அம்மண்டபத்தில் வைத்துவிட்டான். அன்றிரவு ஈசன் அவன் கனவில் தோன்றி, நடந்ததைச் சொல்லிவிட்டார். எனவே, அவ்விக்ரகத்தைப் பெற முசுகுந்தன் மறுத்துவிட்டான். இப்படி ஆறு முறை ஏமாற்றிய இந்திரன், வேறு வழியின்றி உண்மையான விக்ரகத்தையும், அதைப் போலவே செய்த மற்ற ஆறு மூர்த்தங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டான். முசுகுந்தன் பூலோகம் வந்து அந்த மூர்த்தங்களை திருவாரூரை சுற்றியுள்ள சிவத்தலங்களில் பிரதிஷ்டை செய்தான். பூமி ஸ்தலமாகிய திருவாரூரில் இந்திரன் பூஜை செய்த நிஜ மூர்த்தியையும், மற்ற மூர்த்திகளை திருக்குவளை, நாகப்பட்டிணம், திருவாய்மூர், திருக்காறாயில், வேதாரண்யம், திருநள்ளாறு ஆகிய தலங்களிலும் பிரதிஷ்டை செய்தான். இவை சப்தவிடங்கத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. விடங்கம் என்றால் சிறிய லிங்கம் எனப்பொருள்.