பதிவு செய்த நாள்
09
ஜூன்
2020
04:06
சுகப்பிரசவமாகி தாயும், சேயும் நலமுடன் வாழ திருச்சி தாயுமான சுவாமிக்கு வாழைத்தார் நேர்த்திக்கடன் செலுத்துவதாக பக்தர்கள் வேண்டுகின்றனர்.
திருச்சி நகரில் தனகுப்தன் என்னும் வணிகர் ஒருவர் இருந்தார். அவரது மனைவி ரத்தினாவதி. குழந்தை இல்லாமல் வருந்திய இவர்கள் திருச்சி மலைக்கோட்டையில் கோயில் கொண்டிருக்கும் செவ்வந்திநாதரான சிவபெருமானை வேண்டினர். அதன் பயனாக ரத்தினாவதி கருவுற்றாள். பிரசவ காலம் நெருங்கியது. காவிரியின் மறுகரையில் வசித்த தன் தாயாருக்கு தகவல் அனுப்பினாள். தாயும் மகளின் பிரசவத்திற்கு தேவையான மருந்துகளைச் சேகரித்துக் கொண்டு மகள் வீட்டை நோக்கி புறப்பட்டாள். வழியில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பதட்டம் அடைந்த தாய், சிவனருளால் தன் மகளுக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என வேண்டினாள்.
ஒருவழியாக நான்காம் நாள் வெள்ளம் வடிந்தது. பதட்டமுடன் மகள் வீட்டிற்கு விரைந்தாள். அங்கு கண்ட காட்சி அவளை திடுக்கிடச் செய்தது. காரணம் மகள் அருகே தன்னைப் போலவே ஒரு மூதாட்டி உதவி செய்வதைக் கண்டாள். தயங்கியபடி உள்ளே அவள் நுழைந்ததும், அமர்ந்திருந்த மூதாட்டி வீட்டிற்குள் சென்று மறைந்தாள். திகைத்தபடி நின்ற தாயிடம், ‘ஏனம்மா நிற்கிறாய்? பால் கொடுக்க வேண்டும், தொட்டிலில் துாங்கும் குழந்தையை கொண்டு வாம்மா’ என்றாள் ரத்தினாவதி. வந்த மூதாட்டி குழந்தையை மகளிடம் கொடுத்து விட்டு உற்றுப் பார்த்தாள். இதைக் கண்ட மகள், ‘‘என்னம்மா! குழந்தை புதிதாகப் பார்ப்பது போல் பார்க்கிறாயே’’ எனக் கேட்டாள். அப்போது கண் கலங்கிய மூதாட்டி, ‘ஆம்! அம்மா, இப்போது தான் நான் குழந்தையைப் பார்க்கிறேன்’ என்று சொல்லி, ஊரிலிருந்து வரும் வழியில் வெள்ளத்தால் மூன்று நாட்கள் பயணம் தடைபட்டதையும் தற்போது தான் வீட்டுக்கு வந்திருப்பதையும் தெரிவித்தாள்.
அதிர்ச்சியடைந்த ரத்தினாவதி, ‘‘என்னம்மா சொல்கிறாய். நீ தான் பிரசவம் நடக்கும் முன்பே வந்து விட்டாயே. இரவு பகலாக என் கூடவே இருந்து கவனித்தாயே...குழந்தைக்கு மருந்து கொடுத்தாயே’’ என்றாள். அப்போது தான் இருவருக்கும் செவந்திநாதரான சிவபெருமானே தாய் வடிவில் தோன்றி பிரசவம் பார்த்த உண்மை புரிந்தது. அப்போது, ‘‘எனது மகளுக்காக ‘தாயுமானாயா’ என்று கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள் ரத்தினாவதியின் தாய். அன்றிலிருந்து திருச்சியில் உள்ள செவ்வந்திநாதருக்கு ‘தாயுமானவர்’ என்ற சிறப்புப்பெயர் ஏற்பட்டது. இதனடிப்படையில் சுகப்பிரசவம் உண்டாக பெண்கள் இத்தலத்தில் பிராத்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் வாழைத்தாரை சுவாமிக்கு நேர்த்திக்கடனாகச் செலுத்துகின்றனர். ரத்தினாவதிக்கு சிவன் பிரசவம் பார்த்த வைபவம் சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.
எப்படி செல்வது: திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகில் கோயில் உள்ளது
விசேஷ நாட்கள்: சித்திரை பிரம்மோற்ஸவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 – பகல் 12:00 மணி, மாலை 4:00 – 8:30 மணி
தொடர்புக்கு: 0431 – 270 4621, 271 0484