பதிவு செய்த நாள்
26
ஜூன்
2020
01:06
பெரம்பலுார் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திங்கள், வெள்ளிக்கிழமை மட்டுமே திறந்திருக்கும். இங்குள்ள மதுரகாளி சிக்கலைத் தீர்த்து நிம்மதியுடன் நம்மை வாழ வைப்பாள்.
சிலப்பதிகார நாயகி கண்ணகி, தன் கணவர் கோவலனுக்கு நேர்ந்த கொடுமை கண்டு வெகுண்டு மதுரையை எரித்தாள். பின் மன அமைதி பெறுவதற்காக கால் போன போக்கில் பல ஊர்களுக்கு சுற்றினாள். சிறுவாச்சூர் என்னும் இத்தலத்திற்கு வந்த போது அவளுக்கு மனம் அமைதி கிடைத்ததாக செவிவழிக்கதைகள் சொல்கின்றன. மதுரையை எரித்த மதுரைக் காளியே மதுர காளியம்மனாக இங்கு கோயில் கொண்டிருக்கிறாள்.
இந்த ஊரின் காவல் தெய்வமான செல்லியம்மனை மந்திரவாதி ஒருவன் கட்டுப்படுத்தி தீயசெயல்களில் ஈடுபடுத்தினான். அந்த சமயத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் மதுரகாளியம்மன் இங்கு வந்தாள். செல்லியம்மனை சந்தித்து தங்க இடம் கேட்டாள். சம்மதித்த செல்லியம்மன் தன்னை பயன்படுத்தி மந்திரவாதி செய்யும் அநீதிகளைச் சொல்லி காளியிடம் தீர்வு கேட்டாள். அங்கு தங்கிய காளி உதவுவதாக வாக்களித்து விட்டு அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு புறப்பட்டாள்.
‘‘இனி உனக்கு பூஜை நடக்கும் முன் முதலில் மலையில் தங்கியிருக்கும் எனக்கு பூஜை நடத்த வேண்டும்’’ என்றும் தெரிவித்தாள். அதன் பின்னர் ஒரு திங்கட்கிழமையன்று மந்திரவாதியை அழித்தாள். இப்படி வெள்ளியன்று வந்து தங்கியதையும், திங்களன்று மந்திரவாதியை அழித்ததையும் நினைவுகூரும் வகையில் திங்கள், வெள்ளிக்கிழமையில் மட்டுமே இக்கோயில் திறக்கப்படுகிறது. இது தவிர பவுர்ணமி, திருவிழா நாட்களில் கோயில் திறக்கப்படும். மதுரகாளிக்கு பூஜையின் போது முதலில் மலைக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. சற்று துாரத்திலுள்ள ஆத்தடி குருசாமி கோயிலில் 11 சித்தர்கள் காட்சி தருகின்றனர்.
செல்வது எப்படி: திருச்சியில் இருந்து 50 கி.மீ., துாரத்தில் சிறுவாச்சூர். அங்கிருந்து 5 கி.மீ.,
விசேஷ நாட்கள்: சித்திரை வளர்பிறையில் பூச்சொரிதல் விழா, ஆடிவெள்ளி, ஆடிப்பெருக்கு, தைப்பூசம், தைவெள்ளி.