பதிவு செய்த நாள்
30
ஆக
2020
07:08
ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தி பெற்றது. தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். கேரள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கும் விதத்தில் பூக்கோலத்தை வாசலில் வரைகின்றனர். நறுமணம் கமழும் பூக்களைப் போல உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதும் இதன் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப் பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இது அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இது சிவனுக்கு உரியது. வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்காகவும் பூக்கோலம் இடுவதுண்டு. இது மட்டுமின்றி ஓணத்தன்று வீடுகளில் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் விளையாடுவர். கேரள பண்பாட்டுச் சின்னமாக பூக்கோலம் திகழ்கிறது.
யானை அணிவகுப்பு: தெருவில் ஒரு யானை வந்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பர். கேரளாவில் ஓணத்திருவிழாவில் யானைப்பட்டாளத்தையே கண்டு ரசிக்கலாம். அவற்றின் நெற்றியை தங்கத்தட்டினாலான முகப்படாமினால் அழகுபடுத்தி இருப்பர். பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட்மெட்டல் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள், பட்டுக்கயிறு, பிரத்யேகஅணிகலன்கள், உடலில் வரையப்பட்டிருக்கும் டிசைன் என்று யானைகள் அணிவகுத்துச் செல்வது தனியழகு. இங்கு நடக்கும் மரத் தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன. மேலும், இவை விநாயகரின் அம்சம் என்பதால் தெய்வீகமானவை. எனவே, அவற்றிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் ஊர்வலம் நடத்துகின்றனர்.
அம்மா ஜெபித்த ஸ்லோகம்: அசுரகுரு சுக்ராச்சாரியார், மகாபலிச்சக்கரவர்த்திக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். யாகபயனால் ஹோமகுண்டத்தில் இருந்து தேர்,வில், அம்புறாத்தூணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் மகாபலி தேவலோகம் சென்றான். தேவர்கள் அஞ்சி ஓடினர். தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளைக் கண்டு வருந்தினாள். காக்கும்கடவுள் விஷ்ணுவைச் சரணடைந்து,
யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத
தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா
என்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள். யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே! பழமை மிக்கவனே! புதுமையானவனே! கங்கையை திருவடியில் கொண்டவனே! ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்களைக் கொண்டவனே! என்பது இதன் பொருள். விஷ்ணு ஆவணி திருவோண நட்சத்திரத்தில், அதிதியின் மகனாக வாமனராகப் (குள்ள வடிவம்) பிறந்தார். மகாபலியிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றினார். அதிதி ஜெபித்த இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் குழந்தைகள் தாய் மீது பாசமுடன் திகழ்வர்.