திருவண்ணாமலையில் உள்ள மலையை பக்தர்கள் சிவலிங்கமாக கருதி வணங்குகின்றனர். பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலையை 260 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர் கூறுகின்றனர். இந்த மலையைச் சுற்றி 108 சிவலிங்கங்கள் புதைந்திருப்பதால் இந்த மலையையும், மலையைச் சுற்றியுள்ள 108 சிவலிங்கங்களையும் சுற்றியே கிரிவலம் செய்கிறோம்.
பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்பு, வளர்பிறை, தேய்பிறை பிரதோஷ நாட்களில் சித்தர்கள், ஞானிகள், யோகிகள் சூட்சும வடிவில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவதாக ஐதீகம்! திருவண்ணமலையில் சித்தர்கள் பலரின் ஜீவ சமாதிகள் உள்ளன. அவற்றில் சூட்சும வடிவில் தங்கி தவத்தில் ஆழ்ந்துள்ளனர். அண்ணாமலையாரை தரிசித்த சித்தர்களில் 25க்கும் அதிகமான சித்தர்கள் இங்கு சமாதியானதாக அகத்தியர் ஜீவநாடியில் கூறியுள்ளார். அந்த சித்தர்களை இங்கு தரிசிப்போம்.
* திருவண்ணாமலையில் அவதரித்தவர் அருணகிரிநாதர். சிற்றின்ப நாட்டத்தால் சீரழிந்து வாழ்வை வெறுத்து அண்ணாமலையார் கோயில் கோபுரத்தின் மீதிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, முருகப்பெருமானால் காப்பாற்றப்பட்டார். “முத்தைத்தரு’ என முருகன் அடியெடுத்துக் கொடுக்க “திருப்புகழ்’ பாடத் தொடங்கினார். 15ம் நுாற்றாண்டில் இங்கு வாழ்ந்தவர்.
* ‘திருவண்ணாலைக்கு வந்து ஞானகுருவாக இரு’ என அண்ணாமலையாரின் அழைப்பால் ஞானியாக வாழ்ந்தவர் யோகி குகை நமச்சிவாயர்.
* திருவண்ணாமலை குளத்தில் தண்ணீரை திரட்டிக் குடமாக்கி அதில் தண்ணீரை எடுத்துச் சென்று, அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்த யோகி பாணிபத்திரசாமி.
* உண்ணாமுலை அம்மனின் கைகளால் சர்க்கரை பொங்கல் வாங்கும் பேறு பெற்றவர். சிதம்பரம் கோயிலின் திரைச் சீலையில் தீப்பிடித்ததை திருவண்ணாமலையில் இருந்தபடியே அறிந்து அணைத்த ஞானி குரு நமசிவாயர்.
* திருவண்ணாமலையில் பஞ்சம் போக்க, ஏரி அமைத்து, உண்ணாமல் தவமிருந்து, மழை பொழிய செய்தவர் மங்கையர்கரசியார்.
* 96 வயது வரை மலையை தினமும் சுற்றிய பலனால் அண்ணாமலையாரை நேரில் காணும் பேறு பெற்றவர் சோணாசலத் தேவர். * இலங்கை யாழ்பாணத்தில் பிறந்து சிவனருளால் புதையல் பெற்றவர். குளம், மடம் அமைத்து மக்களைக் காத்த ஞானப்பிரகாசர்.
* 500 சீடர்களை உருவாக்கி, அண்ணாமலையானின் புகழ் பரப்பியவர். நுால்கள் வெளியிட்டு சைவத்தின் பெருமைகளை உலகறியச் செய்தவர் வேத, ஆகம, சமய, சாத்திர வித்தகர் அப்பைய தீட்சிதர்.
* காணாமல் போன பூஜைப் பேழையை அண்ணாமலையாரின் அருளால் பெற்றவர். 16ம் நுாற்றாண்டில் குருதேவர்
மடத்தில் தீட்சை பெற்று சிவப்பிரகாசர் என்னும் ஞானியைக் கண்ட குமாரசாமி பண்டாரம்.
* அண்ணாமலையாரின் அருளால் பாடும் திறனைப் பெற்றவர். திருவாரூர் தியாகேசர் சன்னதி முன் முக்தி பெற்றவர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
* காவிரியாற்று நீரை எண்ணெயாக்கித் தீபமேற்றியவர். பூமியிலிருந்து ஜுவாலையை வரவழைத்து தன் உடம்பை தானே அக்னிக்கு ஆஹுதியாக்கிய ஆதிசிவப்பிரகாசர் சுவாமிகள். * கரிகாற்சோழன் காலத்து பாதாளலிங்க மூர்த்தியை வழிபட்டவர். விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயர் ஆயிரங்கால் மண்டபம் கட்டிய போது, பாதாளலிங்கத்தை இடம் மாற்றி விடாமல் பாதுகாத்தவர் தம்பிரான் சுவாமிகள்.
* தனது மரணத்தை தானே உணர்ந்து “ஜீவ சமாதி’ கண்டவர். ஜில்லா கலெக்டர் ஐடன் துரையின் நோயைத் தீர்த்தவர். இருபுறமும் புலிகள் காவல் இருக்க தவம் செய்தவர். ஈசான்ய மடாலயத்தின் ஆதிகுருவான ஈசான்ய ஞான தேசிகர் சுவாமிகள்.
* கேரளாவில் பிறந்து, யாத்திரை சென்று வழிபட்டு இறுதியாக திருவண்ணாமலையில் முருகனுக்கு கோயில் கட்டியவர். வாழ்நாள் முழுவதும் மக்களிடம் பக்தியை வளர்க்கப் பாடுபட்டவர் சற்குரு சுவாமிகள்.
* அண்ணாமலையாரே அருள் தெய்வம் என உணர்ந்து தியானித்தபடி வருவோர்க்கெல்லாம் அருள்புரிந்த குருநாதர் பத்ராசல சுவாமிகள்.
* பழனியிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்து உழவாரப் பணி செய்தவர். அன்னக்காவடி சுமந்து அடியார்களின் பசியைப் போக்கியவர். ஏழைகள் மீது இரக்கம் கொண்ட சமூக சேவையில் ஈடுபட்டவர். பாதாள லிங்கக் குகையிலே இளம்வயதில் ரமணரைப் பாதுகாத்தவர் பழனி சுவாமிகள்.
* பாதி கோபுரமாக நின்ற திருவண்ணாமலை வடக்கு கோபுரத்தை கட்டியவர். மக்களின் நோய்களை பஞ்சாட்சர மந்திரம் சொல்லித் திருநீறு கொடுத்து குணப்படுத்தியவர் அம்மணியம்மாள்.
* திருநெல்வேலியில் அவதரித்து திருவண்ணாமலையில் முருகனை தரிசித்தவர். வண்ணப் பாக்களோடு கம்பத்து இளையனார் எனப்படும் திருவண்ணாமலை முருகனுக்கு வேல் கொடுத்தவர் இசைஞானி வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் * திருவண்ணாலை மலைப்பாதையில் அங்கம் புரள உருள்வதை லட்சியமாக கொண்டவர். திருவண்ணாமலை அறுபத்து மூவர் மடாலயத்தின் ஆரம்ப கால ஞானகுரு அங்கப்பிரதட்சண அண்ணாமலை சுவாமிகள்.
* காஞ்சியில் பிறந்து திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான் சேஷாத்திரி சுவாமிகள் ‘‘ அண்ணாமலையாருக்கே என்னை ஆளாக்குவேன்’ என கன்னிப் பருவம் வரை காத்திருக்க, சிவபெருமான் கனவில் தோன்றி அருள்புரிந்தார். கண் விழித்த போது தலைமுடி சடையாகி விட்டிருந்தது. திருவண்ணாமலை கோயில் பணிகளைச் செய்த சடைச்சியம்மாள். . “துறவு கொள்வதே பொதுவாழ்வுக்கு உகந்தது’ என 36 வயது – 103 வயது வரை திருவண்ணாமலை, தருமபுரியில் திருப்பணிகள் செய்தவர் “தம்மணம் பட்டி’ அழகானந்த அடிகள்.
* அண்ணாமலையாரின் நினைவாக 12 ஆண்டு தனிமையில் தவம் செய்து மலையிலேயே வாழ்ந்தவர் ராதாபாய் அம்மையார்.
* திருவண்ணாமலையில் பூமியில் 108 லிங்கங்கள் உண்டு என்பதை உலகிற்கு வெளிப்படுத்தியவர். பஞ்சாட்சர மந்திர ஜபத்துடன் வலம் வந்து பேரின்ப நிலை பெற்றவர் இறைசுவாமிகள்.
* 1917ல் பிறந்து 1008 முறை அண்ணாமலையை அங்கப்பிரதட்சணமாக சுற்றியவர். தேவர்களும், சித்தர்களும் கிரிவலம் செய்வதை ஞானக்கண்ணால் கண்ட தவசீலர் இசக்கி சுவாமிகள்.
* திருச்சுழியில் அவதரித்து வாழ்நாள் எல்லாம் உண்ணாமல் உறங்காமல் தவம் செய்து புகழ் பெற்றவர் ரமண மகரிஷி.
* 1918ல் கங்கை கரையில் பிறந்து அமைதி தேடி காவிரிக்கரை வரை அலைந்தவர். பின்னர் பல திருத்தலங்களும் சென்று முடிவில் ரமண மகரிஷியிடம் சரணடைந்தார். 1959 முதல் திருவண்ணாமலை வீதிகளில் துறவியாக வாழ்ந்த யோகிராம் சுரத்குமார்.