வில்லாளன் என்ற வேடன் காட்டில் வேட்டையாடிய போது, புற்றுக்குள் முனிவர் ஒருவர் ‘ஓம் நமோ நாராயணாய’ என்று மந்திரம் ஜபிக்கக் கேட்டான். அவரிடம் ‘நாராயணன்’ என்றால் யார் என்பதைக் கேட்டறிந்தான். அந்த மந்திரம் சொன்னால் மோட்சம் உண்டாகும் என்றும், அதன் பின் மிருகங்களைக் கொன்று புசிக்கும் அவல நிலை உண்டாகாது என்பதையும் அறிந்தான். உடனே தவத்தில் ஈடுபடப் போவதாக தன் தாய் வில்லியிடம் தெரிவித்தான். ‘‘உயிர்களை கொன்று தின்னும் நமக்கு தவவாழ்வு கைகூடாது’’ என அவள் தடுத்தாள். முடியும் என சவால் விட்டவன், மன உறுதியுடன் வெற்றி பெற்றான். அவனுக்கு காட்சியளித்த நாராயணர் மலையளவு தங்கம் அளித்தார். அதை தனக்காக பயன்படுத்தாமல் தன் தாயான வில்லியின் பெயரால் ‘வில்லிப்புத்துார்’ என்னும் நகரை நிர்மாணித்தான். அங்கு வடபத்ரசாயி என்னும் பெயரில் நாராயணர் கோயில் கொண்டார். இத்தலத்தில் தான் ஆண்டாள், பெரியாழ்வார் என தந்தையும், மகளுமாக இரு ஆழ்வார்கள் அவதரித்தனர்.