பதிவு செய்த நாள்
24
அக்
2020
10:10
நவராத்திரி ஒன்பதாம் நாள் : பூஜை நேரம் காலை 9:00 முதல் 10:00 வரை
சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி என, அறிவையே பெண் தெய்வ உருவில் வழிபடுமாறு, நம் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. உலகின் மிகச் சிறந்த மந்திரமாகப் போற்றப்படுவது காயத்ரி மந்திரம். என் அறிவானது, மனதையடக்கி, நல்வழிப்படுத்த இயலாமல் மங்கும்போதெல்லாம், ஞானமே வடிவாகிய அந்த சக்தியானவள், அறிவுக்கு ஆற்றலைத் தந்தருள வேண்டும் என்பது, அந்த மந்திரத்தின் பொருளாகும்.
இது தான் பாரதத்தின் ஒட்டுமொத்த அறிவாற்றலுக்கும் காரணம் என்பதைக் கண்ட மற்ற நாடுகளும், மதங்களும் இன்று காயத்ரி மந்திரத்தைக் கற்று ஓதத் துவங்கியுள்ளன. இப்படி வேதங்கள், சாஸ்த்திரங்கள் மற்றும் உலக உயிர்களின் அறிவாக இருக்கும் சக்தியை, ஸ்ரீ மஹா சரஸ்வதி தேவியாக வழிபடும் நாளாக, இன்றைய ஒன்பதாவது நாள் நவராத்திரியைக் கொண்டாடி அருள் பெறுவோம். பொய், சூது, வாது ஆகிய தீயக்குணங்கள் கொண்டவர்களை, அம்பிகை விரும்ப மாட்டாள். உண்மை, பக்தி, அன்பு கொண்டவர்கள் எவ்வளவு வறியவர்களாக, இயலாதவர்களாக இருந்தாலும், அவர்களைத் தேடிச் சென்று, அறிவாற்றல் எனும் பெரும் ஐஸ்வர்யமாகிய சக்தியை அருளுவாள். தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்த ஒரு வனத்தில், ஒரு முனிவர் புத்ர பாக்கியமில்லாமல் இருந்தார்; குழந்தை வேண்டி, மிகப் பெரிய யாகம் செய்தார். யாகத்தை நடத்துவதற்காக வந்த வேதியர்களில் ஒருவர், தொண்டு கிழவராக இருந்தார்.
மற்றவர்கள், உரக்க மந்திரங்களை ஓதிய போது, அவரால் ஈடு கொடுக்க இயலாமல், மூச்சுத்திணற நிறுத்தி நிறுத்தி ஓதினார். இதைக் கண்டு குழந்தை வேண்டி யாகம் செய்தவர், முதியவரை ஏளனம் செய்து விட்டார். இதனால், சிறந்த அருளாளராகிய அவ்வேதியர், மனம் வருந்தி பாதியிலேயே வெளியேறிவிட்டார். யாகம் முடிந்து சிலகாலம் கழித்து, வேள்வியின் பயனாய் குழந்தை பிறந்தது; ஆனால், முதிய வேதியரின் மனம் வருந்த யாகம் நடத்தப்பட்டதால், பிறந்த ஆண் குழந்தை வாய் பேச இயலாத நிலையில் பிறந்தது. எக்காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழலிலும் பெரியவர்களை அவமதிப்பது கூடாது என, நம் மூதுரைகள் கூறுவதற்கு இதுவே காரணம்.பையன் வளர்ந்தான். காட்டில், மற்ற முனிவர்களின் பிள்ளைகளுடன் விளையாடச் செல்லும் போதெல்லாம், யாரும் இவனை சட்டை செய்வதில்லை; ஊமை என்று கேலியும் பேசினர். இதனால், மனம் வருந்தி அந்தப் பையன் தனிமையை நாடிச் சென்றான்.
ஒரு ஆற்றங்கரையின் மரத்தடியை, தம் வசிப்பிடமாக்கிக் கொண்டான். காலையில் எழுந்து குளித்து, கண்மூடி காயத்ரி மந்திரம் ஜபம் செய்வான்; கிடைத்த பழங்களை உண்டு, மற்றைய நேரங்களில் இறைவனை எண்ணி தியானம் செய்யப் பழகினான்; மனம் பக்குவப்படத் துவங்கியது. தனக்குத் தானே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டான். எக்காரணத்தைக் கொண்டும் எந்தச் சூழலிலும் பொய் பேசக் கூடாது; யாரையும் துன்புறுத்தக் கூடாது என்ற நியமங்களை வகுத்துக் கொண்டான். பெற்றோர் மற்றும் சுற்றார் எல்லோரும் வந்து எவ்வளவோ வற்புறுத்தியும், ஆறுதல் கூறியும் அழைத்தனர்; அதற்கெல்லாம் இசையாமலும், தம் வைராக்கியத்தை விடாமலும் வாழத் துவங்கினான். சத்தியத்தையே விரதமாகக் கொண்டு வாழ்ந்த அவனது ஆற்றலைக் கண்டு வியந்த எல்லாரும், சத்தியவிரதன் என்று அழைக்கத் துவங்கினர்.
நாட்கள் சென்றன. சரஸ்வதி தேவியின் கடைக்கண் பார்வை அவனுக்குப் பூரணமாகக் கிட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒருநாள், கண்மூடி தவம் செய்து கொண்டிருந்தான் சத்தியவிரதன். அப்போது, காட்டுப்பன்றி ஒன்று உறுமியபடி, ஓடி வரும் சத்தம் கேட்டு விழித்துப் பார்த்தான். உடலில் அம்பு குத்தி, ரத்தம் பெருக அப்பன்றி ஓடுவதைக் கண்டான். அதைப் பார்த்து மிரண்டவன், ஐய்ய்... என்று கூவினான். பன்றியும் ஓடி மறைந்தது. அதைத் தேடி வேடன் ஒருவன் ஓடி வந்தான். பன்றியைக் காணாத வேடன் சத்தியவிரதனை அணுகி, தவசீலரே உம்மை வணங்குகிறேன். இன்று, ஒரு பன்றியைக் கண்டு, அதன்மீது அம்பு எய்து விட்டேன்; இந்த பக்கமாகத் தான் ஓடிவந்தது. தாங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள். எங்கு சென்றது என்று தயவு செய்து கூறுங்கள்... என்று வேண்டினான். சிறுவனுக்கு தர்மச்சங்கடமானச் சூழல். பன்றியைக் காப்பாற்ற வேண்டும் எனக் கருணை கொண்டால், நான் பார்க்கவில்லை என்று பொய் பேச வேண்டும். சத்தியமே விரதமாகக் கொண்டிருப்பதால், அதிலிருந்து வழுவும் நிலை ஏற்படும். இந்தப் பக்கமாகத்தான் சென்றது எனக் கூறினால், ஒரு உயிர் துன்பப்படுவதற்குக் காரணமாக வேண்டும். இதை சமாளிக்க அருள்புரி தாயே... என, சரஸ்வதி தேவியை மனமார வேண்டினான்.
ஐய்ய்... என்று அவன் கூவியது, சரஸ்வதியின், ஐம் எனும் பீஜாட்சர மந்திரத்தின் ஒரு பகுதியாகும். அவனது சத்தியம் தவறாத நெறியையும், பக்தியையும் ஏற்று, அன்னை சரஸ்வதி, தம் கடைக்கண் பார்வையால், அவனது பேசா தன்மை நீங்கிடவும், மிகப் பெரிய அறிவாளியாகத் திகழவும் அருள்பாலித்தாள்; சத்திய விரதன் மிகப் பெரிய ஞானியாகப் பேசத் துவங்கினான்.
ஸ்ரீமத் தேவிபாகவதம், அவன் பேசிய இரண்டு வார்த்தைகளும் ஒப்பிட முடியாத பெருமை வாய்ந்ததாகக் கூறுகிறது.யா பஸ்யதி சா நவததியா வததி சா நபஸ்யதி|இவைகளே அவன் பேசிய இரு வார்த்தைகளாகும். எது கண்டதோ அது பேசாது; எது பேசுமோ அது காணாது என்பது அதன் பொருள். அதாவது, என் கண்கள் கண்டிருக்கலாம்; ஆனால் அது பேசாது. என் வாய் பேசும்; ஆனால், அதற்கு காணும் சக்தி கிடையாது எனக் கூறி, பொய்யும் பேசாமல், பன்றியையும்
காப்பாற்றி விட்டான்.இப்படி வாய் பேச இயலாமல் பிறந்து, சத்தியத்தையே விரதமாகக் கொண்டு, தவம் செய்து சரஸ்வதி அருளால் பேச்சாற்றல் பெற்றதுடன், அறிவாற்றலும் பெற்ற சத்தியவிரதன், பின்னாளில் நிறைய நுால்களும் எழுதியுள்ளான்.மஹா நவமி எனப்படும் சரஸ்வதி பூஜை நன்னாளில் அம்பிகையை வழிபட்டு, அறிவாற்றலும், மன உறுதியும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்! --ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் மயிலாடுதுறை
பூஜிக்கும் முறை:
சரஸ்வதி பூஜையன்று செய்ய வேண்டிய பூஜைகளை வழக்கம் போல் செய்து, புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூ சார்த்த வேண்டும்.நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரைக் கோலமிட்டு அலங்கரிக்கவும். மையத்தில், ஓம்... என்றும் எல்லா இதழ்களிலும், ஐம் என்றும் எழுதவும். மையத்தில் திருவிளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் தீபங்கள்
ஏற்றி வைக்கவும்.
ஓம் ஸ்ரீமஹாசரஸ்வத்யை நமஹ|
ஓம் ஐம் வாக்தேவ்யை நமஹ|
ஓம் ஞான தாயின்யை நமஹ|
என்றும் அர்ச்சனை செய்யவும்.
மேதே சரஸ்வதிவரே பூதி பாப்ரவிதாமஸி|
நியதே த்வம் ப்ரசீதேசி நாராயணி நமோஸ்துதே||
என்ற மந்திரம் சொல்லி புஷ்பம் சார்த்தவும்.
நிவேதனம்:பால் கற்கண்டு சாதம் மற்றும் இனிப்புப் பண்டங்களுடன், பாசிப்பருப்பு சுண்டலும் நிவேதனம் செய்து, சூடம் ஏற்றிக் காண்பிக்கவும்.
பெண்களுக்கு:சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கைத் துண்டுடன், மங்களப் பொருட்களும் வழங்கி, நிறைவில் ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில்
சேர்த்து நிறைவு செய்யவும்.
சுலோகம்
யாகுந்தேந்து துஷாரஹார தவளா
யாஸுப்ர வஸ்த்ராவ்ருதா|
யவீணா வரதண்ட மண்டிதகரா
யாஸ்வேத பத்மாஸனா||
யா ப்ரம்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ்ஸதா பூஜிதா|
ஸா மாம் பாது ஸரஸ்வதி பகவதீ
நிஶ்ஶேஷஜாட்யாபஹா||
- ஸ்ரீஸரஸ்வதி ஸ்தோத்ரம்.
பொருள் :ஸ்ரீ சரஸ்வதி, நிலவின் குளிர்ச்சியான வெண்ணிறம் உடையவள். வெண்பட்டாடை அணிபவள். வெண்தாமரையில் அமர்ந்து வீணை இசைப்பவள். பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் முதலிய தேவர்களும் ஞானம் பெற வேண்டி வழிபடப் படுபவள். உலக உயிர்களின் அறியாமை இருளைப் போக்கும் அந்த சரஸ்வதி தேவி, எனக்கும் நல்லறிவு அருளி காப்பாற்ற வேண்டும்.
நவராத்திரி ஒன்பதாம் நாளுக்கான நிவேதனம்
நவராத்திரிக்கு நிவேதன உணவு: செய்யச் சொல்லிக் கொடுக்க, ஜி.ஆர்.டி., ஓட்டல் தலைமை சமையல் கலைஞர் சீதாராம் பிரசாத் முன் வந்தார். ஒவ்வொரு பெயராகச் சொல்லச் சொல்ல, நிமிட நேரங்களில் எல்லாவற்றையும் தயார் செய்து அசத்தினார். இனி தினமும், சீதாராம் பிரசாத்
சொல்லிக் கொடுப்பார்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 250 கிராம்
பால் - 120 மில்லி
நெய் - 1 தேக்கரண்டி
கல்கண்டு - 200 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய் - 1 தேக்கரண்டி
காய்ந்த திராட்சை - 50 கிராம்
செய்முறை: பச்சரிசியை, 20 நிமிடம் ஊற வைத்து, வேக வைக்கவும். இதில், கல்கண்டு சேர்த்து கரைக்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரி, காய்ந்த திராட்சை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய் பொடி துாவி கலக்கவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2268.3; கார்போஹைட்ரேட், 450.1; புரதம், 34.2; கொழுப்பு, 34.6.
பால் கல்கண்டு சாதம்!
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 500 கிராம்
எண்ணெய் - 10 மில்லி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
துருவிய இஞ்சி - 10 கிராம்
பெருங்காயம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய கேரட் - 10 கிராம்
துருவிய வெள்ளரி - 10 கிராம்
துருவிய தேங்காய் - 50 கிராம்
செய்முறை: பாசிப்பருப்பை வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்க்கவும். வேக வைத்த பாசிப்பருப்புடன் உப்பு சேர்க்கவும். அடுப்பை அணைத்து விட்டு, துருவிய தேங்காய், துருவிய காரட் மற்றும் வெள்ளரி சேர்த்து இறக்கவும்.இதில் அடங்கியுள்ள சத்துக்கள்: மொத்த கலோரி, 2035.7; கார்போஹைட்ரேட், 281.7; புரதம், 126.1; கொழுப்பு, 40.5.
இரண்டு உணவு வகைகளையும், தலா ஐந்து பேர் சாப்பிடலாம்.