பதிவு செய்த நாள்
18
நவ
2020
03:11
துாய அறிவின் வடிவமான கடவுளை பரபிரம்மம் என அழைக்கிறோம். பிரம்மத்திற்கு உருவம் இல்லை என்றாலும் நமக்கு அருள்புரிவதற்காக கருணையுடன் உருவம் தாங்கி வருகிறார். அவரை வழிபட்டு தியானித்தால் காலப்போக்கில் உருவம் மறைந்து அருவ வடிவில் காணலாம். இதன் பயனாக காணும் பொருளில் எல்லாம் கடவுள் தென்படுவார். கன்னியாகுமரியில் சூரிய உதயம் காணச் செல்கிறோம்.
சூரியன் மெதுவாகத் தலையைத் துாக்கி உலகைப் பார்க்க வருகிறது. ஒரு நிமிடம்... இரண்டு நிமிடம்... நேரம் நகர்கிறது. சூரியன் கடலுக்கு மேலே தங்கத் தாம்பாளம் போல மிளிர்கிறது. ஆனால் கொஞ்ச நேரத்தில்... சூரியன் மேலே எழுந்ததும் மக்கள் கூட்டம் கலைகிறது. சூரியன் உதித்த போது ரசித்த கூட்டம் மேலே சென்ற பின் அங்கில்லை. அதன் ஒளிப்பிழம்பு கண்களை கூசச் செய்கிறது. சூரியனின் ஒளியே இப்படி எனில் ஆயிரம் கோடி சூரியன் ஒன்றாக உதித்தது போன்ற ஜோதிப்பிழம்பு கடவுள். அதைப் பற்றி கச்சியப்பர் கந்த புராணத்தில்,
அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற ஜோதிப்பிழம்பு ஒரு மேனியாகி..
என்கிறார் நாம் தரிசிப்பதற்காக.
கண்களால் காண இயலாத ஜோதிப்பிழம்பே கருணையால் மேனி தாங்கி உலகிற்கு வருகிறது. சூரனை அழிக்க உங்களைப் போன்ற ஒரு குமரனைத் தர வேண்டும் என சிவபெருமானிடம் தேவர்கள் வேண்டினர். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாம தேவம், சத்யோஜாதம் என சிவனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. ஆனால் ஞானிகள் மட்டுமே வழிபடும் ஒருமுகம் அவரது இதயத்தில் உள்ளது. கீழ் நோக்கிய அந்த முகத்தை வெளிப்படுத்தி ஆறுமுகமாக அவதரிக்கச் செய்தார்.
அவர் நெற்றிக் கண்ணிலிருந்து தீப்பொறி வர அவற்றை அக்னி வாயுவிடம் அளித்தார். வாயு அதனைத் தாங்க முடியாமல் சரவணப் பொய்கையில் சேர்த்திட தீப்பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின. பார்வதி அவர்களை ஒன்றிணைக்க ஆறுமுகன் எனப் பெயர் பெற்றான்.
கருணை கூர் முகங் கள் ஆறும்
கரங்கள் பனிரெண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய
சிவன் வேறு, முருகன் வேறு அல்ல. இருவரும் ஒருவரே! சூரனை வதம் செய்து சேவல், மயிலாக மாற்றினான் முருகன். அசுரனின் ஆணவம் அழிந்ததும் முருகனின் கைகளில் சேவல் கொடி, மயில் வாகனமாக மாறினான். சூரசம்ஹார விழா ஐப்பசி வளர்பிறையில் ஆறு நாட்கள் முருகன் கோயில்களில் நடக்கும். குறிப்பாக திருச்செந்துாரில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இன்று ஊரில் பிரபலமாக உள்ள மருத்துவமனை செயற்கை கருத்தரிப்பு மையம் தான். காரணம் பலருக்கும் மகப்பேறு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்று பழமொழி உண்டு. அதற்கு சஷ்டியில் விரதம் இருந்தால் அகமாகிய கருப்பையில் கரு தோன்றும் என்பது பொருள். எனவே சஷ்டி விரதம் இருந்தால் முருகனருளால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
சஷ்டி என்பது ஆறாவது நாள். ஆறாம் எண்ணின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி. எனவே சஷ்டியில் விரதம் மூலம் பதினாறு வகையான பேறுகளையும் பெறலாம். பிரதமை முதல் சஷ்டி திதி வரை ஆறு நாட்களும் அதிகாலை எழுந்து திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம், வேல், மயில், சேவல் விருத்தம், சஷ்டிக் கவசம் பாராயணம் செய்வது நல்லது. பகல் முழுவதும் விரதம் இருந்து இரவு பால், பழம் மட்டும் சாப்பிட வேண்டும். சூரசம்ஹாரத்தை தரிசித்து ஏழாம் நாள் காலையில் பூஜை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இசை பயில் சடாச்சரம் அதனாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே
என்னும் திருப்புகழ் கூறுவது போல சஷ்டி விரதத்தால் எல்லா நலன்கள், நீண்ட வாழ்நாள் பெற்று வானுலகிலும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பது அருணகிரிநாதர் வாக்கு.இந்த நன்னாளில் விரதமிருந்து சஷ்டி நாயகன் முருகன் அருளால் சகல வரங்களையும் பெறுங்கள்.
நாளும் கோளும் நன்மை செய்யும்: நம் பூர்வஜென்ம பாவம், புண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்வு அமைகிறது. ஏழரை, அஷ்டமச்சனி, ஜென்மகுரு காலங்களில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு எத்தனை பரிகாரம் இருந்தாலும், கந்தர் அலங்காரம் நுாலில், உள்ள இந்தப் பாடலுக்கு ஈடு இணை ஏதுமில்லை. அருணகிரிநாதர் பாடிய இப்பாடலில், முருகனை வணங்கினால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என உறுதிபடக் கூறுகிறார்.
“நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர்
இரு தாளும் (இரண்டு பாதங்கள்),
சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),
சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகமும் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.
ஒரே ஓரு பார்வையாலே...: பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்பஒளி உண்டாகும் என்றெல்லாம் கவிஞர்கள் முருகனை போற்றியுள்ளனர். இந்த வரிகளுக்கு ஆதாரமானவர் யார் தெரியுமா? ஆதிசங்கரர்!
இவர் உடல்நலம் குன்றியபோது முருகன் மீது சுப்பிரமணிய புஜங்கம் என்னும் ஸ்தோத்திரம் பாடினார். அதில் ஒரு ஸ்லோகத்தில், “இரக்கமுள்ள ஆறுமுகனே! உன் தாமரை முகங்கள் ஆறிலும் கருணை பொழியும் பன்னிரண்டு கண்கள் உள்ளன. என் குறைகள் போக்க நீ அத்தனை கண்களாலும் பார்க்கத் தேவையில்லை. ஒருவிழியால் பார்த்தால் போதும்...அப்படி பார்ப்பதால் உனக்கு என்ன குறை நேரப் போகிறது?” எனக் கேட்டார்.
முற்பிறவி ரகசியம்: முருகன் எப்படி அவதரித்தார் என்பது குறித்து காஞ்சி மகாபெரியவர், திரிபுரா ரகஸ்யம் என்ற கிரந்தத்தை மேற்கோள் காட்டி கூறியுள்ளார். பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர். இவர் எல்லாப் பொருட்களையும் தெய்வமாக கருதுவார். ஈ, எறும்பு முதல் வானுலக தேவர்கள் வரை அனைவரும் தெய்வம் தான், இவர் ஒருமுறை அசுரர்களுடன் போர் புரிந்து வெல்வது போல கனவு கண்டார். இது பற்றி தந்தை பிரம்மாவிடம் விளக்கம் கேட்டார்.
“முற்பிறவியில் அசுரர்களின் அட்டகாசத்தைக் கண்ட நீ அவர்களை ஒழிக்க முடிவெடுத்தாய். அந்த நினைவே இப்போது கனவாக வெளிப்பட்டது. இப்பிறவியில் அசுரர்களையும் நீ தெய்வமாகப் பார்ப்பதால் போர் நடக்காது. அடுத்த பிறவியில் இக்கனவு பலிக்கும் என்றார். இப்படிப்பட்ட ஞானியான சனத்குமாரரைச் சந்திக்க சிவபார்வதியே நேரில் காட்சியளித்து விரும்பிய வரத்தை அருள்வதாக தெரிவித்தனர்.
வரம் பெற்று பிழைக்கும் விதமாக தேவை எனக்கில்லை. வேண்டுமானால் நான் வரம் தருகிறேன்,” என்றார்.ஆசை துளியும் இல்லாத சனத்குமாரரைக் கண்டு மகிழ்ந்த சிவன் “அப்படியானால்... ஞானியான நீ எனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும்” என்றார்.
சரி..என்று ஒப்புக்கொண்ட சனத்குமாரர் அதிலும் ஒரு புள்ளி வைத்தார். “சிவனே! நீர் மட்டும் தான் என்னை பிள்ளையாகப் பிறக்கக் கேட்டீர். எனவே, தாயின் சம்பந்தமின்றியே பிறக்க நான் விரும்புகிறேன்” என்றார். சிவனும் தலையசைத்தார். ஆனால் இதையறிந்த பார்வதி, தாய் வயிற்றில் குழந்தை பிறப்பதல்லவோ உலக நியாயம்! தந்தை மூலம் மட்டும் பிறப்பேன் என்கிறாயே! அப்படியானால், உன்னைப் போன்ற நல்ல பிள்ளையைப் பெறும் பாக்கியத்தை இழப்பேனே!” என வருந்தினாள்.
அதற்கு சிவன், “கவலை வேண்டாம்! பஸ்மாசுரன் என்பவன் யார் மீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை பெற்றான். அதைச் சோதிக்க என் தலையிலேயே கை வைக்க முயற்சிக்கவே, நான் மறைந்தேன்.
என்னைக் காணாத சோகத்தில் தண்ணீராக உருகிய நீ பொய்கையாக மாறினாய். இப்போதும் அது சரவணப்பொய்கை என்ற பெயரில் இருக்கிறது. நெற்றிக்கண் மூலம் நான் சனத்குமாரனை தீப்பொறிகளாக உண்டாக்குவேன். அத்தீயை தாங்கும் சக்தி அந்த பொய்கைக்கு மட்டுமே உண்டு. சரவணப்பொய்கையில் தாங்கும் போது உனது சம்பந்தமும் பிள்ளைக்கு வந்து விடும்” என்றார்.அதன்படியே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் அவதரிக்க சரவணப் பொய்கையாக தாங்கினாள் பார்வதி.
வேலுக்கும் ஆறுமுகம்: குழந்தைகளுக்கு தெய்வங்களின் ஆயுதத்தை பெயராக வைக்கும் வழக்கமில்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால் முருகனின் வெற்றிவேலைச் சிறப்பிக்கும் விதத்தில் வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம், என பெயரிடுகிறார்கள். கச்சியப்பர் கந்தபுராணத்தில் "திருக்கைவேல் போற்றி போற்றி!" என்று ஒருமுறைக்கு இருமுறை முருகனின் வேலினைப் போற்றுகிறார். முருகனுக்குஆறுமுகங்கள் போல வேலுக்கும் ஆறுமுகங்கள் உண்டு.
அறுமுகச் சிவனார்: தந்தையான சிவனின் மறுவடிவே முருகன். பாம்பன் சுவாமிகள் அறுமுகச்சிவனார் என்றே முருகனை சிவனாகவே தன் பாடல்களில் குறிப்பிடுகிறார். தாயான பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது முருகன் தாயிடம் ஆசி பெற்றார். அப்போது பார்வதி தன் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி வேலாகத் தந்தாள். சக்திவேல் இன்றி முருகன் தனித்து காட்சி தருவதில்லை. சக்திவேல் தாங்கிய முருகனே சூரசம்ஹாரத்தை வெற்றியுடன் முடித்தார். அவரைச் சரணடைந்தால் என்றென்றும் வெற்றியே சேரும்.
மாமரமாக மாறிய அசுரன்: பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை ஆகும் பாக்கியம் பெற்றவன் தட்சன். ஆணவம் மிக்க அவன், மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்களே மறுபிறவியில் அசுரர்களாக பிறந்து கடவுளால் தண்டிக்கப்படுவர். தட்சன் மறுபிறப்பில் பத்மாசுரன் என்னும் அசுரனாக பிறந்தான். அவனது சகோதரர்கள் கஜமுகாசுரன், சிங்கமுகன், பானுகோபனும் அதர்ம வழியில் வாழ்ந்தனர்.
இந்நிலையில் சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிடவே, அவை குழந்தைகளாக மாறின. கார்த்திகைப்பெண்கள் பாலுாட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்த பார்வதி, குழந்தைக்கு கந்தன் என பெயரிட்டாள். கந்தன் அழகானவன் என்பதால் முருகன் என்று அழைக்கப்பட்டார். முருகன் நவவீரர்கள் என்னும் ஒன்பது வீரர்களுடன் இணைந்து போருக்கு தயாரானார். முதலில் பத்மாசுரனின் தம்பியரை அழித்தார். மாயையில் வல்ல பத்மாசுரன் மாமரமாக மாறி நின்றான். வேலினால் மரத்தை இருகூறாகக் பிளந்து, ஒரு பகுதியை சேவலாக்கி கொடியாகவும், மறு பகுதியை மயிலாக்கி வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். இதனடிப்படையில் சூரசம்ஹார முடிவில் சேவலை பறக்க விடுவதோடு, சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டி வைப்பர். போரில் மாமரமாக மாறிய சூரனை வேலை ஏவி அழித்ததை நினைவுபடுத்தவே மாவிலை கட்டப்படுகிறது.
கந்தகுரு கவசம் காட்டும் தலங்கள்: சாந்தானந்தர் பாடிய கந்தகுரு கவசத்தில் 28 முருகன் கோயில்கள் இடம் பெற்றுள்ளன.
1. சுவாமிமலை
2. திருச்செந்துார்
3. திருமுருகன்பூண்டி
4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)
5. திருவண்ணாமலை (கம்பத்திளையனார்)
6. திருப்பரங்குன்றம்
7. திருத்தணி
8. எட்டுக்குடி (நாகை மாவட்டம்)
9. போரூர்
10. திருச்செங்கோடு
11. சிக்கல்
12. குன்றக்குடி (சிவகங்கை)
13. குமரகிரி (சேலம் அம்மாப்பேட்டை அருகில்)
14. பச்சைமலை (கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள மொடச்சூர்)
15. பவளமலை (கோபிசெட்டிபாளையம் அருகில்)
16. விராலிமலை
17. வயலுார்
18. வெண்ணெய்மலை (கரூர் அருகில்)
19. கதிர்காமம் (இலங்கை)
20. காந்தமலை (மோகனுார், நாமக்கல் மாவட்டம்)
21. மயிலம் (விழுப்புரம்)
22. கஞ்சமலை (சேலம்)
23. முத்துக்குமரன் மலை (வேலுாரில் இருந்து 13 கி.மீ., துாரத்திலுள்ள ஒக்கனாபுரம்)
24. வள்ளிமலை (வேலுார்)
25. வடபழநி
26. ஏழுமலை(திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்)
27. தத்தகிரி (சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அருகிலுள்ள சாமியார்காடு கிராமம்)
28. கந்தகிரி (நாமக்கல்லில் இருந்து 5 கி.மீ., துாரத்திலுள்ள ரெட்டிப்பட்டி பழநியாண்டவர் கோயில்)