பதிவு செய்த நாள்
13
மார்
2021
11:03
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்பதே முக்கியமான விருப்பமாக இருக்கும். கன்னிப்பெண்கள், நல்ல கணவன் தங்களுக்கு வாய்த்திட வேண்டும் என்று விரும்புவர். மணமான பெண்கள், தீர்க்க சுமங்கலி வரம் வேண்டியும்; கன்னியர், மனதுக்குப் பிடித்த மணவாளன் கிட்ட வேண்டியும் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. இந்த நோன்பு நோற்கப்படுவதற்குக் காரணமாக புராணக் கதை ஒன்று உண்டு.
“அரசன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி அவளுக்கு மணம் செய்விக்க எண்ணி, மகளிடம், “உன் மனம் கவர்ந்தவன் யாரென்று சொல்?” என அரசன் கேட்க, அவளோ ஆட்சியை இழந்து காட்டில் வாழ்ந்து வந்த சத்யவானையே தான் விரும்புவதாகக் கூறினாள். நாரதரோ, ‘சத்யவானின் விதிப்படி அவன் இன்னும் ஓராண்டுக் காலமே உயிரோடு இருப்பான்’ என்று எடுத்துச் சொல்லியும் உறுதியாக இருந்து அவனையே மணம் முடித்தாள். காட்டில், சாவித்திரி, தன் மாங்கல்ய பலம் வேண்டி நோன்பு நோற்றாள். காட்டில் தனக்குக் கிடைத்த அறுகம்புல், அரச இலைகள் ஆகியவற்றைப் பூவாகவும், காட்டில் விளைந்த கார் அரிசியையும் துவரையையும் கொண்டு செய்த அடையையே நைவேத்யமாகவும் வைத்தாள். ‘காரடையான் நோன்பு’ என்ற பெயர் வர இதுவும் ஒரு காரணமென்பர். இதனை மங்கள கவுரி விரதம், சாவித்திரி நோன்பு எனவும் கூறுவர்.
விதிப்படி சத்யவானின் ஆயுள் முடியும் நாளும் வந்தது. சாவித்திரி தன் கணவனைப் பிரியாது, அவனுடனேயே இருந்தாள். சத்யவானின் உயிரைப் பறித்துப் பறந்தார், எமதர்மன். தனது கற்பின் திறத்தால் அவரைப் பின் தொடர்ந்தாள், சாவித்திரி. மானுடப் பெண் ஒருத்தி கூடவே வருவதைக் கண்ட தர்மதேவன் நின்று திரும்பிப் பார்த்தார். சாவித்தி அவரை பக்தியுடன் வணங்கினாள். ஆசிர்வதித்த அவர், “சாவித்திரி, நீ இத்தனை நாட்கள் செய்த நோன்பில் மகிழ்ந்து நான் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கிறேன். உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எது வேண்டுமானாலும் கேள்” என்றார். முதலிரண்டு வரங்களால் தன் கணவரது தந்தை இழந்த நாட்டினையும் கண்களையும் திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டவள், மூன்றாவது வரத்தினை சமயோஜிதமாக, “எனக்கு நூறு பிள்ளைகள் வேண்டும்” எனக் கேட்டாள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமெனில் சத்யவானின் உயிரை தான் கவர்ந்து செல்ல முடியாது என்று உணர்ந்த எமதர்மன், சாவித்திரியின் தைரியத்தையும், சாதுர்யத்தையும், பதிபக்தியையும் பாராட்டி, சத்யவானின் உயிரைத் திருப்பி அளித்துச் சென்றார். எமதர்மனிடமிருந்து சாவித்ரி தன் கணவனின் உயிரை மீட்டது, மாசிமாதம் முடிந்து பங்குனி பிறக்கும் சமயத்தில் நிகழ்ந்தது என்பர். இந்த நோன்பு அவ்வாறே மாசி முடிந்து பங்குனி மாதம் (ஒரு நாளில்) எப்பொழுது தொடங்குகிறதோ, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என்பது விரதவிதி.
பூஜை முறை: பூஜை அறையில் விளக்கேற்றி, கோலம் போட்டு வைக்க வேண்டும். சுவாமிக்குப் படைப்பதற்கான இடத்தில் பெரிதாகக் கோலம் போட்டு, அதன் மீது நுனி இலையினைப் போட்டு (முழு இலை அவசியம் இல்லை) வைக்க வேண்டும். வீட்டில் உள்ள சுமங்கலிகள், பெண் குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணிக்கையில் (இரட்டைப் படையில் போடுவது நல்லது, ஒற்றைப்படையில் இருந்தாலும் கூடுதலாக ஒன்றினை சாவித்ரியை நினைத்துப் போடலாம்) தனித்தனிக் கோலம் சிறிய அளவில் போடவேண்டும். கோலங்களுக்கு மேலே சிறு துண்டுகளாக நுனி இலை வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சுவாமி இலையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் சரடு (மஞ்சள் சரடில் பூ இதழ் நடுவில் கட்டியது) ஆகியவற்றை மேல்பகுதியில் வைத்து, இலையின் நடுவில் வெல்ல அடையையும், வெண்ணெயையும் வைக்க வேண்டும்.
பின்னர் எல்லா இலைகளிலும் அதே போல் வைக்க வேண்டும். முதிர்ந்த சுமங்கலி தன் இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று இலையாகப் போடக்கூடாது. எனவே குறைந்தது நான்கு இலைகளாகப் போட்டு பூஜிக்க வேண்டும். அம்மனுக்கு உகந்த துதிகள் சொல்வது, சத்யவான் சாவித்ரி கதையை பாராயணம் செய்வது போன்றவற்றுக்குப் பிறகு, மாங்கல்யம் நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தூப, தீப ஆரத்திகள் காட்டிவிட்டு, நிவேதனம் செய்யும் விதமாக முதலில் அம்மனுக்குப் போட்டுள்ள இலையைச் சுற்றி சிறிது நீரை விடவேண்டும். அதன் பிறகு அவரவர் இலைகளை நீரால் சுற்றி நைவேத்தியம் செய்து மங்கள தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு வயதில் மூத்த சுமங்கலி, அம்மனை வேண்டிக் கொண்டு அம்மனின் படத்திற்கு ஒரு சரடினை சாத்திவிட்டு, தான் ஒன்றை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டு, பின் தன் குடும்ப இளைய பெண்களுக்குக் கட்டிவிட்டு, ஆசிர்வாதம் வழங்கவேண்டும். (பொதுவாக இந்த விரதத்தின்போது காமாட்சி அம்மன் படத்தை வைத்து பூஜை செய்வார்கள் என்பதால், இதற்கு காமாட்சி விரதம் என்றும் பெயர் உண்டு)
நோன்பு ஆரம்பித்தது முதல் முடியும் வரை தீபம் ஒளிர்தல் மிகவும் விசேஷமாகும். மாசி மாதம் முடியும் முன் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். உடல்நலம் குன்றியவர்கள். கர்ப்பிணிகள், குழந்தைகள் தவிர மற்ற சுமங்கலிகள் நோன்பு (காலம்) நேரம் முழுவதும் உபவாசம் இருந்து அடை நைவேத்யத்தையே பலகாரம் செய்ய வேண்டும். வேறு உணவு வகைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும். மற்றவர்கள் எளிய பலகாரம், பால், பழம் சாப்பிடலாம். நோன்பு நோற்றபின்னும் அந்த நாள் முழுக்க பெண்கள் அடைதான் சாப்பிடலாம். அன்றைய தினம் சில அடைகளை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும். மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் தெய்வத்தைக் கும்பிட்டுவிட்டு, பிறகு அந்த அடைகளை எடுத்துச் சென்று பக்கத்தில் அல்லது அவரவர் வீட்டில் பசு இருந்தால் அதற்குத் தந்துவிட்டு, வலம் வந்து வணங்க வேண்டும். அப்படி வலம் வரும் சமயத்தில், ‘மலை ஏறிப் புல் மேய்ந்து மடு இறங்கி நீர் பருகும் கோமாதாவே, என் தாலி பாக்யம் என்றைக்கும் நிலைக்கும் வரம் எனக்குத் தா!’ என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு வீடு திரும்பி அவரவரது வழக்கப்படியான வேலைகளில் ஈடுபடலாம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், மணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். கன்னியர்க்கு மனம்போல மாங்கல்யம் அமையும். இந்த விரதத்தை காமாட்சி அம்மனே சாவித்ரிக்குச் சொன்னதாகவும் ஒரு புராணக் கதை உண்டு. அம்மனே சொன்ன பெண்களுக்கான பிரத்யேக விரதம் ஆகும்.