பதிவு செய்த நாள்
30
மார்
2021
12:03
ஹாங்காங் நகரில் வாழும் தமிழர்கள் திருப்புகழ் சங்கம் என்று நிறுவி, அண்மைக் காலங்களில் முருகனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் சஷ்டி காலத்தில் திருக்கல்யாண விழாவினைச் செய்து, இறைவனின் ஆசியைப் பெற்ற வருவதைக் காணும் போது, இந்த விழாக்கள் எதற்காக நடத்தப்படுகின்றன என்று எண்ணியதுண்டு. இத்தகைய விழாக்களை நான் இந்தியாவில் வாழ்ந்த போது, காணும் வாய்ப்பு, எனக்கு கிட்டியதில்லை. அதைப் போன்று அழகர் ஆற்றில் இறங்கி, உமையவள் மீனாட்சி சுந்தரரின் திருமணம் என்பது பல ஆண்டுகளாக நடந்து வரும் விழா என்று கேள்விப்பட்டதுண்டு. அதை செய்திகளில் பார்த்து மகிழ்ந்ததுண்டு. இதன் தொடக்க காலம் எப்போது என்று நான் பலகாலம் யோசித்தது உண்டு. இதற்கான சான்றாதாரங்கள் உள்ளனவா என்று எண்ணியதும் உண்டு.
தற்போது நான் செய்து வரும் தமிழ் சுமேரிய ஆய்வின் போது, இத்தகைய விழாக்களுக்கான சான்றாதாரம் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அங்கு கிடைத்த சான்றுகள் கூறும் இந்த விழாவின் வழிமுறைகளை அறித்து கொள்ளலாமா?
“திருக்கல்யாண விழாவிற்கு ஏற்பாடு செய்ய முடிவானதுமே, மணமகன் தற்றும் மணமகள் குடி கொண்டிருக்கும் இரு கோயில்களும்சீரமைக்கப்பட்டு, சுத்தமாக பெருக்கி, நீரால் தூய்மை செய்யப்பட்டு, பச்சை கொம்புகளும் மாலைகளும் சுவர்களில் தொங்க விடப்பட்டு, அலங்கரிகப்படும். திருமணச் சடங்கு நடக்கும், இரு கோயிலின் நுழைவாயிலில் பனை மரங்கள் நின்றன. அவை இரண்டும் கருவுறுதலுக்கான (fertility) குறியீடாக, அத்துடன்அது பெண் தெய்வத்தையும் குறித்தது. இந்த விழா எடுப்பதால், இனிவரும் வருடம் நிறைய விளைச்சலும் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு நகரவாசியிடமும் விதைக்கும்.
மணமகள் தேவையான எண்ணெய், பழரசம், எண்ணற்ற காய்கறிகள் பழங்கள் கொண்ட பெரிய கூடைகள், கறிவகைகள், விளையாட்டுப் பொருட்கள் அனைத்திற்கும் ஏற்பாடு செய்வார். இதற்கு, குருமார்களும் உதவியாளர்களும் உதவுவர்.
இந்தச் சடங்கு, ஒரு இடத்தின் முக்கிய தெய்வத்தை சுற்றி நடப்பதால், அந்த தெய்வத்தை மணக்கவரும் பெண், மற்றொரு இடத்தில் இருந்தால், அங்கிருந்து நிலம் என்றால் தேரிலோ, நதி அல்லது கால்வாய் என்றால் படகிலோ அழைத்து வரப்பட்டார். அதைப் போன்று திருமணத்தைக் காண பல ஊர்களில் உள்ள கடவுளர்கள் தேரிகளிலோ படகிலோ அழைத்து வரப்பட்டனர்.
முற்காலத்தில் தேர்கள் காளைகளால் இழுக்கப்பட்டன. தேரின் உடற்பகுதி, நீல கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. கப்பல்களுக்கு பெயர்களும் இடப்பட்டன. இந்த கப்பல்கள் பிற்காலத்தில் தங்கம் வெள்ளி மதிப்புமிக்க கற்களால் நிரப்பப்பட்டு உள்ளதையும் காண முடிகிறது. பயன்படுத்தப்படாத போது, இந்த கப்பல்கள் கோயில்களில் வைக்கப்பட்டன. திருப்பணிக்காக பயன்படுத்தப்பட்டதால் இந்த கப்பல்களும் இறைத்தன்மை பெற்று புனிதமாக கருதப்பட்டன.
புது வருடப் பிறப்பின் போது செய்யப்படும் திருமணச் சடங்கில், திருமண உடைமைகள் அரசாங்க வீதிகளிலும் புனித வழிகளிலும் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளிலும் எடுத்துச் செல்லப்பட்டன.
மணமகன் பல பரிசுகளையும் ஆபரணங்களையும் எடுத்துக்கொண்டு, அற்புதமான பெரிய மணிகளால் ஆன, அழகிய கவசத்துடன், விலங்கு உருவம் கொண்ட புனித பாத்திரங்கள் அல்லது உயிருடன் எடுத்து வரப்பட்டன.
அதே நேரத்தில் மணமகள் தன்னை திருமணத்திற்கு தயார் படுத்திக் கொள்கிறார். நதியில் மூழ்கி நீராடி, தலைக்கு குளித்து, தன்னை சுத்தப் படுத்திக் கொள்வார். அவர் அழகிய இனிய சுகந்தத்தை அளிக்கும் தேவதாரு இலையிலான பசையை நெற்றியிலே பொட்டாக வைத்துக்கொள்வார். பிறகு விழாவிற்கு தகுந்த அழகிய ஆடைகளைஅணிந்து கொள்வார். மிகவும் மெல்லிய வண்ணங்களால் புருவங்கள் தீட்டப்பட்டு, பொடியால் அவரது முகம் மேலும் பொலிவுசெய்யப்படும். அழகிய கிரீடம் அவரது தலையில் வைக்கப்படும். விதவிதமாக வண்ணக்கற்களால் ஆன அழகிய ஆடை உடுத்தி, கால்களில் காலணிகள் அணிந்து, இடுப்பில் கவசம் அணிவிக்கப்படும். மனிதனின் விதியை நிர்ணயிக்கும், பெண் தெய்வத்தால் பயன்படுத்தப்படும் ஏழு சிறு கற்கள் அவளது கவசத்திலோகழுத்தணியிலோஇணைக்கப்படும். அவருக்குகழுத்தில்ஆடம்பரமான நகைகளும், கைகளில் வளையல்கள், விரல்களில் மோதிரம் அணிவித்து, கடைசியாக எந்த கெட்ட காற்றும் அண்டா வண்ணம்இருக்க தாயத்துக்கள் அணிவிக்கப்படும்.
திருமணத்தின்போது, மகிழ்ச்சிகரமான இசையை கலைஞர்கள் வாசிக்க, கடவுளர்கள் இருவருக்கும், கோயிலின் மதகுருவால், மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து வைக்கபட்டது.பக்தர்கள் பல பொருட்களை கடவுளுக்கு எடுத்துவந்து, இன்முகத்துடன் அவர்களுக்கு படைப்பார்கள்.
திருமணம் முடிந்த பின், அமர்ந்திருக்கும் கடவுளுக்கு, உதவியாளர்கள் உணவினை அளிப்பர். குழல், யாழ் மற்றும் மேளம் முழங்க, விழா நடந்து முடிந்த பின், வந்து கூடிய அனைவருக்கும் விருந்து அளிக்கப்படும். இறுதியில் மணமகள் தன்னுடைய கோவிலுக்கு திருப்பி அனுப்பப்படுவார். திருமணத்திற்கு வந்த மற்ற கடவுளர்களும், அவரவர் கோயில்களுக்கு இட்டுச் செல்லப்படுவார். பிறகு அதிகாரப்பூர்வமாக, கோயிலின் தலைவர், ‘ஊர்வலம் முடிவிற்கு வந்தது’ என்று அறிவித்தவுடன், மக்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்புவார்கள்.”
இத்தகைய திருமணச் சடங்குகள் நடந்தது சுமேரியாவில். புரன் (Buren) என்பவர் இந்த புனித திருமணச் சடங்குகளைப் பற்றி, சுமேரியாவில் கிடைக்கப் பெற்ற, பல பாடல்களிலும், சடங்கு கல்வெட்டுகளிலும், குறிப்புகளிலும், உருவப் பொருட்களிலும், சிதறிக்கிடந்த பொருண்மைகளை சேர்த்து எழுதியுள்ளார். சித்திரத்தின் மூலமும் இச்சான்றுகள் கிடைக்கின்றன. பல இடங்களில் தெய்வம் படகிலோ கப்பலோ கொண்டுவரப்பட்ட குறிப்புகளும் இருக்கின்றன. அந்தக் கப்பல்கள் எப்படி இருந்தன என்பதை உருக் III(பொ.ஆ.மு. 4000 to 3100) உருளை முத்திரைகள் திறம்பட காட்டுகின்றன. மணமகளின்தலையில் வைக்கப்படும் கொம்புகளால் ஆன தொப்பி புனித குறியீடாகவும் அரச பரம்பரை என்பதையும் காட்டும். அவள் அணியும் காதணியும் அவளது அரச வம்சத்தில் தன்மையை காட்டும்.
ஊர் நகரில் நன்னார்-நின்கல், நிப்பூர் நகரில் என்லில்-நின்லில், பட்திபீரா நகரில் இஸ்தார்-தமுசி, எரிது நகரில் என்கி-நின்கி, பாபிலோன் நகரில் மர்துக்-சர்பனிதும், உருக் நகரில் அனு-அனுதும் போன்ற கடவுளரின்திருக்கல்யாணங்கள் நடந்ததற்கான குறிப்புகள் சுமேரிய மண் ஏடுகளில் கிடைத்துள்ளன.
சில நேரங்களில், பெண் தெய்வத்திற்கு மணமகனாக மன்னனும், ஆண் தெய்வத்திற்கு மணமகளாக பூசாரியாக இருக்கும் பெண்ணும், இத்ததைய திருமண விழாக்களில் இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன. தென்னகக் கோயில்களில் சிவபெருமான் - பார்வதி, திருமால் - திருமகள், முருகன் - வள்ளி, தெய்வானை, விநாயகர்- சித்தி புத்திபோன்ற கடவுளரின் திருக்கல்யாணங்கள் நடந்ததைப் பலரும் பார்த்திருப்பீர்கள். வணங்கப்படும் தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் செய்து பக்தர்கள் வழிபடுவதை நாம் தென்னகத்தின் கோயில்களில்நாம் கண்டிருக்கிறோம். திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும் இவ்வாறு இறைவனுக்கும் இறைவிக்கும் பக்தர்கள் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.தெய்வமணமக்கள் மிகச்சிறந்த அலங்காரங்களுடன் பவனி வருவதும், அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதும் ஆன சடங்கை, நாம் கண்குளிரக் கண்டு, நமக்கு எல்லா வளங்களும் வந்து சேரவேண்டும் என்ற நம்பிக்கையுடன், வீடு திரும்புவதும் நம் வழக்கத்தில் இருப்பது. கடந்த 6000 வருடங்களுக்கு மேலாக நடத்தப்பட்டு வரும் இந்தச் சடங்கு, நம் தென்னகத்திலிருந்து தான் சுமேரியாவிற்குச் சென்றிருக்க வேண்டும் என்பதைத் தெளியலாம். இதற்கான சான்றுகள் நம் மண்ணில் இல்லாவிட்டாலும், தென்னகத்தார் குடியேறிய பகுதிகளில் இருப்பதன் மூலமாக அதை உறுதிப்படுத்தலாம்என்று எண்ணுகிறேன்.
முனவைர் சித்ரா
ஹாங்காங்
Chitrahk.blog@gmail.com