பிரம்மா, தன் முடியை கண்டதாக பொய் சாட்சி சொன்னதால் தாழம்பூவை பூஜையிலிருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். இதனால், எந்தக் கோயிலிலும் தாழம்பூ வழிபாட்டுக்கு பயன்படுத்தப் படுவதில்லை. இந்த தாழம்பூ தன் தவறை உணர்ந்து சிவனிடம் மன்னிப்பு வேண்டி தவமிருந்தது. எனவே, சிவராத்திரியன்று மட்டும் விதிவிலக்காக தனது பூஜைக்கு அனுமதித்தார் சிவன். இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் தலம் திருவண்ணாமலை மாவட்டம், பெரணாமல்லூர் அருகிலுள்ள இஞ்சிமேட்டில் உள்ளது. இக்கோயிலில் தாழம்பூவே தல விருட்சம். மலைக்கோயிலான இங்கு வீற்றிருக்கும் சிவன், திருமணிச்சேறையுடையார் என்றழைக்கப்படுகிறார். சிவலிங்கம் 6 அடி உயரமுடையது. இங்குள்ள குகையில் அகத்தியருக்கு சன்னதி இருக்கிறது.