சுதந்திரத்திற்கு முன்பிருந்த காலத்தில் நம் நாட்டில் மருத்துவ வசதி அதிகம் கிடையாது. அப்போது சிறுவன் ஒருவனுக்கு காலில் புண் ஏற்பட்டது சின்னப் புண் தானே என அவனும் கண்டு கொள்ளவில்லை. நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூக்குள் புரையோடி வலி அதிகமானது. வலி தாளாமல் தவித்த சிறுவனை மருத்துவரிடம் காண்பித்தனர். அந்த உள்ளூர் மருத்துவர் பெற்றோரைக் கண்டபடி திட்டி, ‘இப்படியா பொறுப்பு இல்லாமல் இருப்பீர்கள். உடனே பட்டணம் போய் காண்பியுங்கள்’’ என்றார்.
அங்கு சிறுவனைச் சோதித்த மருத்துவர், ‘‘புண் செப்டிக் ஆகி விட்டது உடனே காலை எடுக்க வேண்டும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகி விடும்’’ என எச்சரித்தார். ‘‘காலை எடுப்பதற்கு எந்த மருத்துவமனைக்குப் போனாலும் குறைந்தது 5000 ரூபாய் தேவைப்படும். நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால் என் பீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன். மருத்துவமனை செலவுக்காக மட்டும் 1500 ரூபாய் கட்டுங்கள். சிகிச்சையைத் தொடரலாம்’’ என்றார்.
அந்த நாட்களில் அரசு அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான். 1500 ரூபாய் கட்டணம் என்று கேட்ட சிறுவன் அதிர்ச்சிக்கு ஆளானான். ‘‘ஒரு காலை வெட்டி எடுக்க மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தர முடியும்? இந்தக் கால் தேயும் வரை கடவுள் குடியிருக்கும் கோயிலைச் சுற்றலாம்’’ என மனதிற்குள் எண்ணிய சிறுவன் தன் சொந்த ஊரான காங்கேய நல்லுாரில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்.
108, 1008 என்ற கணக்கெல்லாம் அவனிடம் இல்லை. காலை, மாலையில் கணக்கு வழக்கின்றி கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான். சில மாதங்களில் அந்த மருத்துவரே அதிசயிக்கும் வகையில் புண் ஆறத் தொடங்கியது. இனி என் வாழ்நாள் முழுவதும் முருகன் புகழ் பாடுவதிலேயே ஈடுபடுவேன். அதுவே என் தொழில். அதுவே என் உயிர் மூச்சு’’ என ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தச் சிறுவன். தன் உடல் தளரும் வரை அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஆறுமுகன் புகழ் பாடிய திருமுருக கிருபானந்த வாரியார் என அழைக்கப்பட்ட வாரியார் சுவாமிகள்.