ஆறு வாளில் இருந்தும் விலகுபவன் நுாறாண்டு காலம் வாழ்வான்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2021 07:05
‘‘மனிதனின் ஆயுள் நுாறாண்டுகள் என்பர். எனினும் நுாறு வயதைக் கடந்தவர்கள் உலகில் அதிகமில்லையே ஏன்?’’ எனக் கேட்டார் திருதராஷ்டிரர். அதற்கு அவரது சகோதரரான விதுரர், ‘‘மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. முதல் வாள் கர்வம். மனிதர்களில் பலர்,‘‘ நானே கெட்டிக்காரன். மற்றவர் எல்லாம் முட்டாள்’ என எண்ணுகின்றனர். தன்னிடமுள்ள குறைகளையும், பிறரிடம் உள்ள நிறைகளையும் காண்பவருக்கு கர்வம் உண்டாகாது. * இரண்டாவது வாள் அதிகம் பேசுதல். பேச விஷயமே இல்லாத நேரத்திலும் வீணாகப் பேசுபவன் துன்பத்தை விலைக்கு வாங்குகிறான். * மூன்றாவது வாள் தியாக உணர்வு இல்லாமை. பேராசை தியாக உணர்வைத் தடுக்கும். * நான்காவது வாள்: கோபம். இதை வென்றவனே உண்மையான யோகி. கோபத்தில் தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாது. விவேகத்தை இழந்து மனம் பாவச் செயல்களில் ஈடுபடும். * ஐந்தாவது வாள்: சுயநலம். எல்லாத் தீமைக்கும் வேரான சுயநலம் பாவம் செய்யத் தயங்குவதில்லை. * ஆறாவது வாள்: துரோகம். உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிதான விஷயம். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக துரோகம் செய்வது தவறு. இந்த ஆறு வாளில் இருந்தும் விலகுபவன் நுாறாண்டு காலம் வாழ்வான்’’ என பதிலளித்தார்.