பதிவு செய்த நாள்
10
ஜூலை
2021
03:07
லட்டு என்பது சமஸ்கிருத வார்த்தையான ‘லட்டுகா’ என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு ‘சின்ன பந்து’ என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால், அதற்கு அந்தப் பெயரே நிலைத்து விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது ‘லட்டு’ என்றே சொல்லப்படுகிறது.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப்படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி வேங்கடவனின் பரிபூரண பிரசாதமாக பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாக காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பல முறை குறிப்பிட்டுள்ளார். ஒருவர் வெறுமனே ஆசைப்பட்டால் மட்டும், அவரது கைகளுக்கு திருப்பதி லட்டு வந்து விடாது. அந்த பிரசாதம் அவரது கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அவரது கைக்கு லட்டு வந்து சேரும் என்பது பக்தர்களது நம்பிக்கையாக உள்ளது. திருப்பதி லட்டு பிரசாதம் என்பது ஆரம்பத்திலிருந்தே தரப்படுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
திருப்பதி லட்டுக்கு முன்னர்..
மேல் திருப்பதியில், அதாவது திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடப்பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள் வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நைவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம். ஆனால், ஆரம்ப காலங்களில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம்தான் இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தான பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை உறுதி செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் என்பது பிரபலம். மனோகரம் என்பது கிட்டத்தட்ட ‘இனிப்பு முறுக்கு’ என்று சொல்லலாம். அதாவது, அரிசி மாவையும், வெல்லப் பாகையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பொறித்து எடுத்தால், அதுதான் மனோகரம். நீண்ட நாட்களுக்கு மனோகரம் கெடாமல் இருக்கும். எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கிறது.
கி.பி.830ஆம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர்கள் ஆட்சி காலத்தில், ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல வேண்டுமென்றால் பல நாட்கள் ஆகும். தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு, பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீடுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.
கி.பி.1445ஆம் ஆண்டு வரை ’திருப்பொங்கம்’ என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. அந்த ஆண்டிலிருந்து ‘சுய்யம்’ என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455ஆம் ஆண்டு முதல் அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள்.
1460ஆம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468ஆம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547ஆம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
1803ஆம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது.
1940ஆம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.
ஆனால், உண்மையில் லட்டு என்கிற இனிப்பு பிரசாதம் அறிமுகமாகி கிட்டத்தட்ட 300 வருடங்கள்தான் ஆகிறது. அதாவது, லட்டு எப்போது முதல் வழங்கப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாக தகவல்கள் அல்லது கல்வெட்டுகள் ஆகியவை இல்லை. கி.பி 17-ம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருவதாக தகவல்கள் உள்ளன.
திருமலை வேங்கடவனின் சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், டோலோத்சவம், வசந்தோத்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை போன்ற பல்வேறு சேவைகளில், கட்டணம் செலுத்திக் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு சிறு லட்டுகள் பிரசாதமாக தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன. பெருமாள் சேவைக்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கும், பக்தர்களுக்கு இலவசமாக அளிப்பதற்கும், ஒருவருக்கு இவ்வளவு லட்டு என்று விலைக்குத் தருவதற்கும் திருமலையில் தினமும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
தினந்தோறும் மாபெரும் விசேஷமாகவும், உள்நாடு மற்றும் வெளி நாடுகளிலும் விமரிசையாக நடக்கும் திருக்கல்யாண உத்சவம், கி.பி. 1546-ம் ஆண்டில்தான் முதன் முதலாகத் தொடங்கப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் உண்டு. அது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம். பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் இந்தத் திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி போன்றவை
பிரசாதமாக வழங்கப்பட்டதாக கல்வெட்டுத் தகவல் சொல்கிறது. அதற்கு பின்னரே லட்டு பிரசாதம் வழக்கத்திற்கு வந்துள்ளது.
திருப்பதியில் 17-ம் நூற்றாண்டில் லட்டு அறிமுகமாகி விட்டாலும், 20-ம் நூற்றாண்டில்தான் பூரண பிரசாதமாக மாறியது என்பதை பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
1932-ம் ஆண்டில் மதராஸ் அரசாங்கத்தினரால், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோவில் வந்தது. அதில் மடப்பள்ளி பிரசாதங்கள் செய்யும் உரிமை ‘மிராசி’கள் என்பவர்களிடம் இருந்தது. ஐந்து மிராசிகளுக்குப் பிரதிநிதியாக உள்ள ஒருவர்தான் ஒட்டுமொத்த மடப்பள்ளி நிர்வாகத்தையும் பொறுப்பேற்று நடத்தி வந்தார் என்ற தகவல் திருப்பதி தேவஸ்தான குறிப்பேடுகளில் உள்ளது.
அந்த காலகட்டத்தில் ஒரு நாள் திருப்பதி திருக்கல்யாண உத்சவத்துக்கு ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) என்கிற ஒரு பிரார்த்தனையை பக்தர் ஒருவர் செய்தார். அதற்குரிய கட்டணத்தையும் அவர் தேவஸ்தானத்தில் செலுத்தி, ஆயிரக்கணக்கான லட்டுகளைத் தயாரித்து திருக்கல்யாண வைபவத்தை விமரிசையாக செய்தார். அன்றைய தினம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதமாகத் தங்களுக்குக் கிடைத்த லட்டு பிரசாதத்தை பல பக்தர்களும் வீட்டுக்கு எடுத்துச் சென்று அக்கம் பக்கத்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.
திருப்பதி பெருமாளுக்கு அவ்வப்போது திருக்கல்யாண உத்சவம் ஆலயத்திலேயே கோலாகலமாக நடந்து வந்தது. 1940-ம் ஆண்டில் இருந்து நித்ய கல்யாண வைபவமாக அது மாறிவிட்டது. இந்தக் கல்யாண வைபவத்தில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைவருக்கும் லட்டு பிரசாதத்தை வழங்கினார்கள். 1943-ம் ஆண்டில் இருந்து, பெருமாள் கல்யாண உத்சவத்தில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. அதே சமயம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொள்ள இயலாத பக்தர்களுக்கு, திருப்பதி லட்டின் மீது ஆவல் அதிகமாகி விட்டது. இந்த விநியோக முறை ஏங்க வைத்தது. அதன் அடிப்படையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து பேசி, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆலய தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்தனர். பின்னர் அது நிரந்தரமாகிவிட்டது.
திருமலையில் ‘ஸ்ரீவாரி பிரசாதம்’ என்றும், ‘லட்டு பிரசாதம்’ என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு, பிரத்யேகமாக ஒரு மடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த மடப்பள்ளி ‘பொடு’ என்று அழைக்கப்படும். பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, பெருமாள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்றும் தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.