ஒரு வருடத்தில் வரும் பன்னிரண்டு அமாவாசைகளில் ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை. சூரியன் தெற்குநோக்கிப் பயணிக்கும் தட்சிணாயன காலத்தின் தொடக்கத்தில் வருவது ஆடி அமாவாசை. (சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்கும் உத்தராயன காலத்தின் தொடக்கத்தில் வருவது தை அமாவாசை) ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாள் அமாவாசையாகும். ஜோதிட சாஸ்திர கணக்கின்படி வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை, தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை. மேற்சொன்ன கடக ராசியும், மகர ராசியும் நீர் ராசிகள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. அமாவாசையன்று நீர் நிலைகளில் ஏற்படும் மாறுதல்களால் கடலில் வாழும் ஜீவராசிகளான சங்கு, சிப்பி, பவளம் போன்றவை புத்துயிர் பெறுகின்றன. அதன் சந்ததிகளும் பரம்பரை பரம்பரையாக வாழ வழிவகுக்கின்றன அதிலும் ஆடி அமாவாசையன்று ஏற்படும் மாறுதல்களால் கடல்நீரில் ஓர் புதிய சக்தி ஏற்படுகிறது. எனவே அன்று புனிதத்தலங்களிலுள்ள கடலில் நீராடுவது உடல்நலத்திற்கு வளம் தரும் மேலும் நம்முடன் வாழ்ந்த காலஞ்சென்றவர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர்பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.