பதிவு செய்த நாள்
12
அக்
2021
04:10
“நாள் செய்வதை நல்லோர் கூட செய்ய மாட்டார்கள்!” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த அளவிற்கு நாள் முக்கியம் என்றால் அதில் குறுக்கிடும் நல்ல நேரம் என்னும் கால அளவு அதை விட முக்கியத்துவம் வாய்ந்தது. நல்ல நாளில், நல்ல நேரம் பார்த்து செய்யக் கூடிய செயல்கள் நிச்சயம் பெரும்பாலும் வெற்றி பெறும்.
நல்ல நேரம் : ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுப கிரகங்களின் பார்வை பூமிக்கு கிடைக்கும். அந்த நேரத்தை முன்பே கணக்கிட்டு கொடுத்து இருப்பார்கள். அது காலை, மாலை என இருவேளைகளில் வரும். அந்த நேரத்தில் தீய கிரகங்களின் அல்லது தீய சக்திகளின் ஆற்றல் தணிந்து இருக்கும். இதுவே நல்ல நேரம் ஆகும்.
இதில், (கவனிக்க வேண்டியது) கௌரி பஞ்சாங்கம் அல்லது கௌரி நல்ல நேரம் என்பது ஆதி காலத்தில் இருந்த முறை. அதாவது கிருத யுகத்தில் இருந்தே அது இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதாவது பாற்கடலை கடையும் முன்பிருந்தே கௌரி பஞ்சாங்கம் இருக்கிறது.
இராகு காலம், எம கண்டம்: பாற்கடலை கடைந்த சமயத்தில் இராகு என்னும் அரக்க தளபதி திருமாலின் அவதாரமான மோகினியின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு திருட்டுத் தனமாக அமிர்தம் பருகி விடுகிறான். இதனால் திருமால் சுதர்சன சக்கரத்தை கொண்டு அவன் தலையை கொய்ய, அம்ருதம் உண்ட இராகுவின் உடல் இரண்டாகப் பிரிந்து இராகு/ கேதுக்கள் ஆகின்றன. இவர்கள் தவம் செய்து கிரக பதவியையும் அடைந்து விடுகின்றனர்.
இந்த சமயத்தில் தான் காலக் கணிதத்தில் ஒரு குழப்பம் வருகிறது. சூரியன் முதல் சனி வரையில் ஏழு கிரகங்களுக்கு நாட்களை கொடுத்து விட்ட நிலையில், இராகு/ கேதுவிற்கு எதை கொடுப்பது? இறுதியாக சிவபெருமானின் கட்டளை இதற்கு விடையாக வருகிறது. ஒவ்வொருவர் நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை இராகு, கேதுக்களுக்கு தர உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அந்த நேரத்தில், அந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் இராகு / கேதுக்கள் வல்லமையுடன் செயல் படுவார்கள். அதுவே *இராகு காலம், எம கண்டம்* எனப் பெயர் பெற்றது.
கௌரி நல்ல நேரம்: கௌரி நல்ல நேரம் (இது கிருத யுகத்தில் இருந்தே காணப்படுவதாக ஒரு நம்பிக்கை உண்டு) என்பது கௌரி பஞ்சாங்கத்தில் பிரிக்கப்பட்டுள்ள நல்ல நேரம் ஆகும்.
ஒரு நாளை 16 முகூர்த்தங்களாக பிரித்தால் பகல் பொழுதிற்கு 8 முகூர்த்தமும், இரவு பொழுதிற்கு 8 முகூர்த்தமும் என 16 முகூர்த்தங்களை கொண்டதாகும். ஒரு முகூர்த்தம் என்பது 1.30 மணி நேரமாகும். உத்தி, அமிர்தம், ரோகம், லாபம், தனம், சுகம், விஷம், சோரம் என்று எட்டு வகையான முகூர்த்தம் கௌரி பஞ்சாங்கத்தில் இருக்கின்றன. இதில், அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி என்ற வேளைகளில் சுபகாரியங்களை செய்யலாம். எனினும், இதிலும் கூட ஒரு விதி விலக்கு உண்டு. அதன்படி கௌரி பஞ்சாங்க அட்டவணை நேரத்தில் சுப நேரம் என்று இருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் ராகு காலம், எம கண்டம், குளிகை போன்றவை குறுக்கிட்டால் அது கௌரி பஞ்சாங்கத்தில் நல்ல வேளைகள் என்று போட்டு இருந்தாலும் கூட அவசியம் அந்த நேரத்தை தவிர்த்து விடுங்கள்.