பதிவு செய்த நாள்
19
அக்
2021
05:10
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம். ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.
சோத்துக்குள்ளே சொக்கநாதர்: வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.