1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. . 2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. 3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது. 4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார். . 5) கைசிக மாஹாத்மியத்தில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமிப்பிராட்டிக்கு நம்பாடுவான் என்பான் திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். . 6) நம்பாடுவான் என்னும் பஞ்சமகுலத்தைச் சார்ந்த பரம பாகவதோத்தமன் ஸோமசர்மா என்னும் ப்ராஹ்மணன் ப்ரம்ம ராக்ஷஸாகத் திரிந்து அலைந்தபோது அவனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுடைய சாபத்தை நீக்கினான். . 7) இன்றும் இந்த நிகழ்ச்சி கைசிக ஏகாதசியன்று திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் நடித்துக் காட்டப் படுகிறது. . 😎 கைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 365 “பச்சை” எனப்படும் பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார். . 9) அப்போது கைங்கர்ய பரர்கள் திருவடி விளக்குவதேல்? அடைக்காய் அமுது நீட்டுவதேல்? திருவிளக்கு தூண்டுவதேல்? என்று கூறிக்கொண்டு பச்சை சாற்றுவர். . 10) அரையர்கள் எழுந்தருளி திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஒன்பதாம் பத்து ஆறாம்திருமொழி “அக்கும்புலியனதளும்” என்று தொடங்கும் 10 பாசுரங்களையும், நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி 5ஆம் பத்து ஆறாம்திருவாய்மொழி “எங்ஙனேயோ அன்னைமீர்காள்” என்று தொடங்கும் 11 பாசுரங்களையும் அபிநயம் மற்றும் தாளத்தோடு விண்ணப்பம் செய்வர். . 11) முறைகாரபட்டர்ஸ்வாமி எழுந்தருளி ஒன்றான ஸ்ரீபராசர பட்டர் அன்று வாசித்த முறையிலேயே ஸ்ரீவராஹபுராணத்தின் உள்ளீடான கைசிக மாஹாத்மியத்தைக் குல்லாய் தரித்து நம்பெருமாள் திருமுன்பு விண்ணப்பம் செய்வர். . 12) கைசிக துவாதசியன்று முறைகாரபட்டர் நிலையங்கி, குல்லாய், தொங்கு பரியட்டம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கைசிக புராண ஸ்ரீகோஸத்தோடு நம்பெருமாளுடன் மேலைப்படி வழியாக சந்தன மண்டபத்துக்குள் எழுந்தருளுவார். . 13) மேலைப்படியில் நம்பெருமாள் எழுந்தருளும்போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் புஷ்பங்களையும், பச்சைக்கற்பூரப் பொடியையும் நம்பெருமாள் திருமேனி மீது வாரியிறைப்பர். இந்த நிகழ்ச்சி கற்பூரப்படியேற்ற ஸேவை என்று அழைக்கப்படுகிறது.