பதிவு செய்த நாள்
05
ஜன
2022
03:01
உலக மக்களை காக்க பெருமாள் பல அவதாரங்கள் எடுத்தார். அதில் ஒன்று தன்வந்திரி அவதாரம் ஆகும்.
தன்வந்திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம் மற்றும் பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனிதமான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே தன்வந்திரியாக அம்ருதகலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந்தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட்களையும் பெற்று தேவலோகம் சென்றான். திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ் என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர்.
நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்.
ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.
பொருள்:
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்;
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங் களைப் போக்குபவரும்;
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;
மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.