பதிவு செய்த நாள்
26
ஜன
2022
06:01
பார்க்கலாம்; கேட்கக் கூடாது; கேட்கலாம்; பார்க்கக் கூடாது. பார்க்கலாம்; கேட்கலாம். பார்க்கவும் கூடாது; கேட்கவும் கூடாது.
நரியைப் பார்ப்பது நன்மை; நரியின் (ஊளையை) குரலைக் கேட்பது தீமை.
கழுதை கத்துவதைக் கேட்பது நன்மை; கழுதையைப் பார்ப்பது தீமை.
பூனையைப் பார்ப்பது, பூனையின் குரலைக் கேட்பது இரண்டுமே தீமை.
கருடன் கிருஷ்ணப் பருந்தைப் பார்ப்பதும் நன்மை; அதன் குரலைக் கேட்பதும் நன்மை. இப்பலன்களும் மேலும் பல சகுன சம்பந்தமான விஷயங்களும் வராஹமிஹிரரின் "பிருஹத் ஸம்ஹிதா" என்ற நூலில் "சகுன பல நிர்ணயம்" என்ற அத்யாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வாய்த்தால் பார்வையிடவும். காக்கை, காலையில் கரைவது மட்டுமே விருந்தினர் வருகையை அறிவிக்கும் நல்ல சகுனமாகக் கருதப் படுகிறது. மயிலைப் பார்ப்பது, மயில் அகவுதலைக் கேட்பது இரண்டும் நல்ல சகுனம் தான். ஆயினும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் அது அதிகம் காணப்படுவதில்லை என்பதால், நடைமுறையில், சர்வ வ்யாபகமான கருடன் தெரிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் என்றும் கூட எனக்கு தோன்றுகிறது.
கும்பாபிஷேகத்தின்போதும் பெரிய யாகங்களின்போதும் வருவது கிருஷ்ணப்பருந்து என அழைக்கப்படும் கருடன் ஆகும்.இந்த கிருஷ்ணப் பருந்தை பார்த்தவுடன் நம்மால் அடையாளம் காண முடியும். ஆலயங்களில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள்சொல்லி, அதன்பின் அந்தந்த தேசங்களில் பேசப்படும் மொழிகளில் இறைவனைத்துதித்தபின் விமானத்தில் கும்ப நீரைச்சேர்க்கும் பொழுது, யக்ஷர்கள், நாகர்கள், கந்தர்வர்கள், வருணன், வாயு, குபேரன், முப்பத்து முக்கோடி தேவர்கள், அனந்தன், கருடன் போன்றவர்கள் சந்தோஷமடைகிறார்கள். அதன் வெளிப்பாடாக சூரியனின் உக்கிரம் குறைவது, குளிர்ந்த காற்று வீசுவது, மழை பொழிவது, கருட தரிசனம் போன்றவை உண்டாகிறது. ஆனால் இவை அனைத்துமே ஒரே இடத்தில் ஏற்படாவிட்டாலும், இவற்றில் ஏதாவது ஒரு அறிகுறி தென்படும். இறைவன் அந்த இடத்தில் எழுந்தருளுவதால் மேற்சொன்ன தேவர்களின் சந்தோஷத்தின் வெளிப்பாடே இது வேத நூல்கள் சொல்கிறது.