பதிவு செய்த நாள்
17
பிப்
2022
04:02
"மஞ்சள் குங்குமத்தோடு நீடூழி வாழவேண்டும்" என்ற வாழ்த்தொலியைக் கேளாத செவிகள் இருக்கமுடியாது. ஆன்மிகம், அறிவியல், அழகு என்ற இந்த முப்பரிமாணத்தின் குறியீடு குங்குமம். கடவுளையும், கணவனையும் குங்குமமாகச் சிருஷ்டித்துக் கொள்பவர்கள் நம் பெண்கள். ஆன்மிகத்தில் மட்டுமல்ல. அழகு சாதன வரிசையிலும் குங்குமத்துக்கு முக்கிய இடம் உண்டு.
பூஜை நாட்களில் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களில்கூட வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குக் குங்குமம் கொடுப்பது வழக்கம். சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை "சீமந்தப் பிரதேசம்" என்பார்கள். திருமணமான பெண்கள் நெற்றி வகிட்டின் தொடக்கத்தில் குங்குமம் அணிவார்கள். திருமணமான நேபாளப் பெண்கள் மற்றும் வடநாட்டுப் பெண்கள் வகிடு முழுவதும் குங்குமமிட்டு அலங்கரித்துக் கொள்வார்கள். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குக் குங்குமம் கொடுத்தால், அதனைத் தருபவர் மற்றும் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். பெண்கள் குங்குமத்தைத் தான் இட்டுக் கொண்ட பின்புதான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அம்மன் கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களில் குங்குமம் முதன்மையானது. உலகெல்லாம் தமிழகத்தின் ஆன்மிகச் சாட்சியாகத் திகழும் மீனாட்சி அம்மன் கோயிலின் புகழ் பரப்பும், நறுமண வஸ்து குங்குமம். மாகாளி வழிபாட்டில் மட்டுமல்ல குபேரன், ஆஞ்சநேயர் வழிபாடுகளிலும் குங்குமம் இடம் பெறுகிறது. குபேரன் வழிபாட்டில் பச்சைக்குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோவிலில் வளர்பிறை அஷ்டமியில் குபேர ஹோமம், அபிஷேகம் செய்து பச்சை வண்ணக் குங்குமம் பிரசாதமாக வழங்குகிறார்கள்.
மன்னர்கள் போருக்குக் கிளம்பும் முன் ஆரத்தி எடுத்து, அதிலிருந்து கட்டைவிரலால் செந்நீரை எடுத்து நெற்றித் திலகமிட்டு அனுப்புவது நடைமுறையிலிருந்தது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்குத் தீய சக்திகளை (கண் திருஷ்டி) விரட்டும் ஆற்றல் உண்டு என்பார்கள். பரதநாட்டிய முத்திரையாக இடது கையில் கண்ணாடி பிடித்து அதைப் பார்த்து வலது கை மோதிர விரலால் குங்குமம் தொட்டு வைப்பது போல் அபிநயிக்கும் மகளிர் நடனச் சிலையினை கோயில்களில் பார்த்திருக்கிறோம்.
மனிதன் அதிகமாக சிந்திக்கும்போது நரம்புகள் சூடேறி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணம் கட்டுப்படுத்தப்படும். இதனால் புத்துணர்வும், உற்சாகமும் தோன்றும். குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால் அதனுடன் சேர்ந்து வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும்.
நமது முதன்மைச் சக்கரங்களில் ஆறாவது சக்கரமாக உள்ளது ஆக்ஞை சக்கரம். நெற்றியில் இரு புருவங்களுக்கு மத்தியிலுள்ள பகுதியில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது. “நெற்றிக் கண்’, “மூன்றாவது கண்’, “ஞானக் கண்’ எனப் பல பெயர்களால் இந்தச் சக்கரம் அழைக்கப்படுகிறது. மூளையின் உட்புறமாகவுள்ள “பீனியல்’ என்ற நாளமில்லா சுரப்பியே ஆக்ஞையோடு இணைக்கப்பட்ட- ஆக்ஞையின் ஆளுமைக்கு உட்பட்ட சுரப்பியாகும். ஒருவரின் ஞானம், பேரறிவு வெளிப்படக் காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம் தான். இதைத் தூண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும், எதிர்மறை எண்ணங்களின் தாக்கங்களில் இருந்து விடுவிக்கும் ஆற்றலும் குங்குமத்துக்கு உண்டு.