பதிவு செய்த நாள்
17
பிப்
2022
04:02
வீட்டில் விளக்கேற்ற நல்ல மருமகளை எதிர்பார்த்து காத்திருக்கிறீர்களா... பண நெருக்கடிகளால் தொழில் முன்னேற்றம் தடைபடுகிறதா... சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் மாசிமகத் தெப்பத் திருவிழாவுக்கு கிளம்புங்கள். அங்கு குளக்கரையில் பக்தர்கள் ஏற்றிய விளக்குகளில் ஒன்றை எடுத்து வந்து வீட்டு பூஜையறையில் வழிபட விருப்பம் நிறைவேறும். திருவிழாவுக்கு செல்ல முடியாதவர்கள், எந்த நாளில் சென்றாலும் அர்ச்சகரிடம் விளக்கைப் பெற்று வழிபாடு செய்யலாம்.
பிரம்மாவிடம் வரம் பெற்ற இரண்யன் மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். அவனது அட்டூழியம் அதிகரித்தது. அவனை அழிப்பதற்காக பூலோகத்தில் கதம்ப மகரிஷியின் ஆஸ்ரமத்தில் தேவர்கள் ஆலோசித்தனர். அந்தக் கூட்டத்திற்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் தலைமையில் சப்தரிஷிகள் கோஷ்டியாக வந்தனர். இதனால் அந்த இடம் ‘திருக்கோஷ்டியூர்’ எனப் பெயர் பெற்றது. இங்கு சவுமிய நாராயணப் பெருமாளுக்கு கோயில் உள்ளது.
திருமணத்தடை, குழந்தைப் பேறு, பிரிந்த தம்பதி சேர்தல், வீடு கட்டுதல், நகை வாங்குதல், நோய் குணமாதல், மனக்கவலை தீருதல் என நம் கோரிக்கை நிறைவேற தெப்பத்திருவிழாவன்று குளக்கரையில் பக்தர்கள் ஏற்றிய தீபத்தை வீட்டுக்கு எடுத்து வர வேண்டும். அதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட வேண்டும். கோரிக்கை நிறைவேறியதும், அந்த விளக்கோடு புதிய விளக்கு ஒன்றை வாங்கி அடுத்த ஆண்டு மாசி மக விழாவில் குளக்கரையில் ஏற்ற வேண்டும். இந்த இரண்டும் மற்றவருக்குப் பயன்படும். இவ்வாறு கோரிக்கை நிறைவேறுவதோடு, மற்றவர் கோரிக்கை நிறைவேற வழிவகுப்பதால் புண்ணியமும் சேரும். நமக்கு கிடைத்த நன்மை பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல்ல கருத்து இதன் மூலம் போதிக்கப்படுகிறது.
இங்கு வசித்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் உபதேசம் பெற ராமானுஜர் வந்தார். ‘யார் நீ?’ என்று கேட்க, ‘நான் ராமானுஜன் வந்திருக்கிறேன்” என்றார். வீட்டுக்குள் இருந்தபடியே நம்பி, ‘நான் செத்த பின் வா!’ என்றார். புரியாத ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்டார். இப்படி 17 முறை வந்தும், அதே நிலையே தொடர்ந்தது. 18ம் முறை ராமானுஜர், ‘அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்’ என்று சொல்ல, நம்பி அவரை சீடராக ஏற்று ‘ஓம் நமோ நாராயணாய’ மந்திரத்தை உபதேசித்தார். ‛‛ராமானுஜா இதைச் சொன்னால் சொர்க்கம் கிடைக்கும். ஆனால் இதை பிறரிடம் சொன்னால் நரகம் தான் கிடைக்கும்’ என எச்சரித்தார். ஆனால் ராமானுஜர் கோபுரத்தின் மீதேறி மந்திரத்தை ஊரறியச் சொன்னார். இதை நம்பி கண்டித்தார்.‛‛குருவே! நான் ஒருவன் நரகம் போனாலும், ஊரார் சொர்க்கம் போவார்களே’ என ராமனுஜர் தெரிவித்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் ராமானுஜர் சிலை இங்குள்ளது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் சவுமிய நாராயணர். அரக்கர்களான மது, கைடபர், இந்திரன், புரூருப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, சந்தான கிருஷ்ணர், பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோர் கருவறையில் இருக்கின்றனர். இரண்ய வதம் நிகழும் வரை இங்கு தங்கிய இந்திரன், தேவலோகத்தில் தான் பூஜித்த சவுமிய நாராயணர் சிலையை இங்கு வைத்து வழிபட்டான். அதுவே இங்கு உற்ஸவராக உள்ளது.
புரூருப சக்கரவர்த்திக்காக தோன்றிய மகாமக கிணறு இங்குள்ளது. 12ஆண்டுக்கு ஒருறை மகாமகத்தன்று கிணற்றின் முன்பு கருட வாகன சேவை நடக்கும். கோயிலின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்) முதல் தளத்தில் சவுமிய நாராயணர் (பாற்கடல் பெருமாள்), இரண்டாம் தளத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் தளத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என நான்கு கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். திருமாமகள் என்னும் பெயரில் தனி சன்னதியில் தாயார் இருக்கிறாள்.
எப்படி செல்வது
மதுரையிலிருந்து 62 கி.மீ., துாரத்தில் திருப்புத்துார். இங்கிருந்து 8 கி.மீ.,