பதிவு செய்த நாள்
17
பிப்
2022
04:02
மத்தியபிரதேசத்தில் உள்ள திருத்தலம் சித்ரகூடம். வனவாச காலத்தில் சீதை, லட்சுமணருடன் தங்கியிருந்த ராமரின் பாதம் படாத இடமே இங்கு இல்லை. இங்குள்ள கல்லும், மண்ணும் புனிதமானதாக கருதப்படுகிறது. காமாநாத்ஜி என அழைக்கப்படும் இந்த ராமபிரானைத் தரிசிப்போரின் பாவம் அனைத்தும் பறந்தோடும்.
ராமர் காட்டில் வாழ்ந்த 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இங்கு தான் தங்கியிருந்தார். காமத்கிரி என்னும் மலை மீது கோயில் உள்ளதால் சுவாமிக்கு ‘காமாத்நாத்ஜி’ என்று பெயர். காமத்கிரியை வலம் வர 5 கிலோ மீட்டர் துாரம் சுற்றியாக வேண்டும். அத்ரி, பரத்வாஜர், வால்மீகி மகரிஷிகள் வாழ்ந்தது இங்குதான். சித்ரகூடத்திற்கு பெருமை சேர்க்கும் மந்தாகினி நதியில் உள்ள ராம்காட் படித்துறையில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். குன்றில் மீதுள்ள காமத்நாத்ஜியை தரிசிக்க 50 படிகள் ஏற வேண்டும். சுவாமியின் தலையில் கிரீடம், இடுப்பில் செந்துார வஸ்திரம் அழகு சேர்க்கின்றன.
பரிக்ரமா செல்லும் வழியிலும் ராமர் கோயில்கள் பல உள்ளன. அங்கு ஒரு கோயிலில் ஒன்றரை அடி உயர ராமர், சீதை, லட்சுணர் சிலைகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும். இங்குள்ள பரத்மிலாப், ஸ்பாஸ்டிக் பகுதிகள் குறிப்பிடத்தக்கவை.
காட்டிற்கு வந்த ராமனை பரதன் சந்தித்த இடம் பரத்மிலாப். தத்ரூபமாக வடிக்கப்பட்ட ராமர், பரதன் சிற்பங்கள் இங்குள்ளன. ஸ்பாஸ்டிக் சிலா என்னும் இடத்திலுள்ள பாறையில் ராமன், சீதை, காகத்தின் சிலைகளைக் காணலாம். சித்ரகூடத்தில் தங்கியிருந்த போது ஒருநாள் இந்திரன் மகனான ஜெயந்தன் காகத்தின் வடிவில் இங்கு வந்தான். தன் அலகால் கொத்தி சீதையை துன்புறுத்தினான். இதையறிந்த ராமர் காகத்தின் வலக்கண் பார்வையை இழக்கச் செய்தார். இந்த சம்பவம் நடந்த இடத்தில் சிற்பமாக வடித்துள்ளனர்.
சீதை குளித்த சீதா குண்டம், அனுசுயா தேவி ஆசிரமம், குப்த கோதாவரி குகை ஆகியவை பக்தர்கள் தரிசிக்க வேண்டியவை. ஒருசமயம் சீதைக்கு தாகம் எடுத்த போது லட்சுமணன் மந்திரம் சொல்லி அம்பு தொடுத்தான். பாறையை பிளந்தபடி கோதாவரி நதி சிறிது துாரம் ஓடி பூமிக்குள் மறைந்தது. இங்குள்ள குகையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. அதற்குள் சிறிது துாரத்தில் ராமர், சீதை, லட்சுமணரை தரிசிக்கலாம். திங்கட்கிழமையும், அமாவாசையும் சேரும் நாட்களில் கூட்டம் அலை மோதும். பரிக்ரமா செல்லும் சாலையை நேர்த்தியாக அமைத்துள்ளனர். கோடை காலத்தை விட குளிர்காலம் தரிசிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.
எப்படி செல்வது
* அலகாபாத்தில் இருந்து 108 கி.மீ.,
* வாரணாசியில் இருந்து 246 கி.மீ.,
* அயோத்தியில் இருந்து 270 கி.மீ.,