தம்பதியராக வாழ்ந்து அன்பின் அடையாளமாக குழந்தைகளைப் பெற்று வாழ்வது தான் மகிழ்ச்சி. ஞானசம்பந்தரும், ‘பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே’ என்று தேவாரத்தில் சிவனைப் போற்றுகிறார். ‘உலகமே பெரிய குடும்பம்’ என்கிறது வேதம். ‘உலகில் உள்ள எல்லா உயிர்களும் நலமோடு வாழவேண்டும். அவர்களின் தேவை அனைத்தும் நிறைவேற வேண்டும். உலகெங்கும் அமைதி நிலவ வேண்டும்’ என்றெல்லாம் வேதம் வலியுறுத்துகிறது. தனிமனிதனாக வாழும்போது இந்த மாதிரியான உயர்ந்த எண்ணம் மனிதனுக்கு உண்டாகாது. திருமண பந்தம் ஏற்படும் போது தான் மனைவி, குழந்தை என்று விட்டுக்கொடுத்து வாழும் மனநிலை உருவாகிறது. அப்போது மனித உறவுகள் பலப்படுகின்றன. பகை, வெறுப்பு, பொறாமை போன்ற கீழான சிந்தனைகள் மறைந்து அன்பு, கருணை, பாசம், விட்டுக்கொடுத்தல் போன்ற நற்பண்புகள் வளர்கின்றன. இந்த உயர்நிலையை மனிதன் பெற வேண்டும் என்பதற்காகவே திருமண பந்தத்தை உருவாக்கினர்.