வியாசரின் மகாபாரதம் அர்ஜுனனுக்கும் திருமணம் நடந்ததையும் அவர்களுக்கு அரவான் பிறந்ததையும் சித்தரிக்கிறது. அதில் அரவான் மகாபாரதப் போரில் இறப்பதாகக் காட்டப்படுகிறது. ஆனால் பாரதத்தின் தமிழ் வடிவங்களில் அரவான் பலி கொடுப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி அரவான் மிக அழகன். சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தும் பொருந்தியவன். ஆனால் இந்தத் தன்மையே அவனுக்கு முடிவைத் தந்தது. மகாபாரத யுத்தம் நெருங்கிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் பாண்டவர்கள் தரப்பு வெற்றி பெற வேண்டுமானால் அனைத்து லட்சணங்களும் பொருந்திய ஒருவரை காளிக்கு பலி கொடுக்க வேண்டும் என குறிப்புகள் கூறின. கண்ணன் அரவானைத் தேர்ந்தெடுத்தார். பாண்டவர்கள் வெற்றிக்காக இந்த தியாகத்தை நீ செய்வாயா என்று கேட்க, எந்தத் தயக்கமும் இன்றி அரவான் சம்மதித்தான். ஆனால் இதற்கு சில நிபந்தனைகளை விதித்தான். போருக்கு முன்பு தனக்குத் திருமணம் நடைபெற வேண்டும். போருக்கு முன்பே தான் இறந்தாலும் போரில் நடைபெறும் நிகழ்வுகளை தன்னால் பார்க்க முடிய வேண்டும். பாரதப் போருக்கு முன்பாகவே அவனை பலி கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரிந்த பிறகு யார் அவனுக்குப் பெண் கொடுப்பார்கள்? கண்ணனே மோகினி அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்து கொண்டார். இறந்த பின்னும் ஆவி ரூபத்தில் அரவானால் போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றை காணமுடிந்தது. கண்ணன் மோகினி அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்து கொண்டதால் திருநங்கைகள் அரவான் கோயிலுக்குச் சென்று அவனைத் தன் கணவராக வரித்துக் கொண்டு தாலி கட்டிக் கொள்கின்றனர். பின்னர் அரவான் மகாபாரதப் போருக்கு களபலியானான் என்பதால் தங்கள் தாலியைத் துறந்து விதவைக் கோலத்தில் ஒப்பாரி வைக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் இந்த நிகழ்வுகள் கூத்தாண்டவர் வழிபாடாக பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கூத்தாண்டவர் என்று குறிப்பிடப்படுவது அரவான்தான். தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் அரவான் கோயில்கள் உள்ளன. அவர் காவல் தெய்வமாகவும் பல பகுதிகளில் வழிபடப்படுகிறார். மதுரையில் உள்ள கோயிலில் மிகப்பெரிய அரவான் சிற்பம் காணப்படுகிறது. சிங்கப்பூரில் உள்ளது தொன்மையான மகா மாரியம்மன் கோயிலில் அரவானின் முகம் மரத்தில் பிரம்மாண்ட வடிவில் காணப்படுகிறது. இந்தோனேசியாவிலும் அரவான் வழிபாடு உள்ளது. தமிழக நாட்டுப்புறக் கலையான கூத்து வடிவிலும் அரவான் கதை நிகழ்த்தப்படுகிறது