பதிவு செய்த நாள்
16
மே
2022
04:05
1960ல் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் இது. ஜெயம் என்பவர் மஹாபெரியவரின் பக்தை, வங்கி ஒன்றில் பணிபுரியும் கணவருடன் இங்கு வசித்து வந்தார். ஒருமுறை இவரது உறவினர், ரோஜா செடியைக் கொடுத்து, இதில் பூக்கும் பூக்களை மஹாபெரியவர், காமாட்சியம்மனுக்கு சாத்தும்படி கூறினார். ஆனால் பூப்பதற்கு பதிலாக செடியில் இருந்த இலைகள் ஒவ்வொன்றாக உதிர ஆரம்பித்தன. அந்த நேரத்தில் அவரது கணவர் மேட்டுப்பாளையத்திற்கு மாற்றப்பட்டார். வீட்டை காலி செய்வதற்கு முதல்நாள், ‘‘ நாம் நினைத்தபடி பெரியவாளுக்கு ரோஜா சூட்ட முடியவில்லையே...’ என கணவரிடம் வருத்தப்பட்டார் ஜெயம். இதை கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண், மறுநாள் காலையில் ரோஜா பூத்திருப்பதைக் கண்டாள். ‘‘என்ன ஆச்சரியம்.... இலைகள் உதிர்ந்த செடியில் பட்டு ரோஜா பூத்திருக்கே’’ எனக் கூவினாள். மஹாபெரியவரின் திருவிளையாடல் தான் இது என அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
அவரது கணவருக்கோ வங்கியில் ஆச்சரியம் காத்திருந்தது. இடமாறுதல் ரத்து செய்யப்பட்டிருந்தது. பொள்ளாச்சியிலேயே குடியிருந்தனர். செடி வேகமாக வளர்ந்து நிறைய பூக்கள் பூக்கத் தொடங்கின. ஒருநாள் பக்தையின் கணவர், ‘‘ தோட்டத்தில் பள்ளம் தோண்டி வை. இன்று புது ரோஜா செடி வாங்கி வர்றேன்’’ என்றார். ‘‘இருக்கிற செடிக்கே என்னால தண்ணீர் விட முடியலை’’ என பக்தை அலுத்துக் கொண்டார். ‘‘மஹாபெரியவருக்கும், காமாட்சியம்மனுக்கும் அன்றாட பூஜைக்கு பன்னீர் ரோஜாப்பூக்களை சாற்ற விரும்பறேன்’’ என்றார் கணவர்.
‘‘பெரியவர் அருள் இருந்தால் இந்த செடியிலேயே பன்னீர் ரோஜா பூக்கட்டும்’’ என்றார் பக்தை. மறுநாள் காலையில் செடியைப் பார்த்தபோது, அதில் பன்னீர் ரோஜாக்கள் பூத்திருந்தன. உடனடியாக அப்பூக்களைப் பறித்த பக்தை, மஹாபெரியவரை தரிசிக்க புறப்பட்டார். நடந்த நிகழ்வை எல்லாம் தெரிவித்து விட்டு பூக்களை சமர்ப்பித்தார். புன்னகைத்த பெரியவரோ, ‘‘நம்ப முடியவில்லையே... வீட்டிற்கு போய் செடியைப் பார்’’ என்றார். மறுநாள் அதில் பழையபடி பட்டு ரோஜாக்கள் பூத்திருந்தன. மகானின் திருவிளையாடலை எண்ணி ஜெயம் மகிழ்ந்தார். மகானின் அருள் இருந்தால் நடக்காத விஷயமும் நடக்கும் என்பது நிஜம் தானே.