இறைவன் எங்கும் இருப்பதால் நாம் எப்படி இருக்க வேண்டும்? : சுவாமி விமூர்த்தானந்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2022 06:05
இறைவன் அண்டம் முதல் அணுவுக்குள் அணுவாய் பரந்து வியாபித்திருக்கிறார். காண்பதெல்லாம் கடவுள், கல்லும் மண்ணும் விலங்குகளும் மரங்களும் எல்லாம் கடவுள். இரக்கமில்லா அரக்கனும் அருளே வடிவான அடியார்களும் இறையம்சங்களே என்பது சனாதன இந்து தர்ம சாரத்தின் ஒரு துளி. இந்த மாபெரும் சத்தியம் நடைமுறையில் உணரப்படாமல் தத்துவார்த்த அளவில் மட்டும் பேசுபடு பொருள் ஆகும்போது இந்து சமயம் பல இடர்களைச் சந்தித்துள்ளது. இன்றும் சந்தித்து வருகிறது. பரம்பொருளின் அருள் நிலையை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் உணர்த்தும்போது இந்து சமயம் கோலோச்சுகிறது. சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்ற தத்துவப் புரிதலில் தெளிவும் அனுஷ்டானமும் இருந்தால் நமது சமய வாழ்க்கை சிறக்கிறது. நம் சமயமும் பாதுகாப்பாக வளர்கிறது.
வெளிநாட்டிலிருந்து வந்த இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்குள்ள மதரீதியான சிரத்தை இங்குள்ள இந்துக்களுக்கு ஏன் குறைவாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது. பிற மதத்தினர் தாங்கள்தான் தங்களது தெய்வ மகிமைகளை மக்களிடத்தில் பரப்ப வேண்டும், பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று நம்புகிறார்கள். தங்களது வழிபாட்டுத் தலங்களை, நூல்களைத் தங்களது கண்களாகப் பாதுகாக்கிறார்கள். நம் மக்களுக்கு நமது கோயில்களையும் புனித நூல்களையும் பேணுவதில் பக்தி இருக்கிறது. ஆனால் அவற்றைப் பாதுகாப்பதில் வீரம் இருக்கிறதா? எல்லாவற்றிலும் இறைவனைக் காணச் சொல்கிறது இந்து மதம். ஆனால் அதைப் பின்பற்றும் மக்களோ தங்களது கடவுளர்களுக்கே ஓர் அவமதிப்பு நேர்ந்தாலும் அதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று நொண்டி சமாதானம் பேசுகிறார்கள். கோயில்கள் சிதைக்கப்பட்டாலும், கோயில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டாலும் இறைவன் எல்லாம் பார்த்துக் கொள்வான் என்று பேசித் திரிகிறார்கள், சமயச் சோம்பேறிகளாக!
இந்தக் கோயில் சிதைக்கப்பட்டால் என்ன? நம் இறைவன்தான் எங்கும் இருக்கிறாரே; இந்தக் கோயிலை இடிப்பதால் இந்து மதத்திற்கு ஒன்றும் ஆபத்து வந்துவிடாது என்று திண்ணை வேதாந்தம் பேசுவது இந்து மதத்தின் ஒரு சாபக்கேடு. இந்து மதத்திற்கு மட்டுமான செக்யூலர்வாதம் கற்றுத்தந்த சமய கோழைத்தனம்! இரண்டு அன்னிய மதப் பிரச்சாரகர்கள் நமது தாய் மதத்தைப் பழிக்கிறார்கள். அப்போது சுவாமி விவேகானந்தர் அவர்களைக் கண்டித்து விரட்டியடிக்கிறார். அந்தச் சமயத்தில் அவர் நம் மதத்திலிருந்து ஒருவன் போய்விட்டால், ஓர் எண்ணிக்கை குறைகிறது என்பது மட்டுமல்ல, மதரீதியான ஓர் எதிரி கூடுகிறான் என்பதைப் புரிந்து கொள் என்று விழிப்புணர்வு மிக்க இந்து மதத்தை வெளிப்படுத்தினார்.
உண்மை – திண்ணை- செயல்முறை வேதாந்தங்கள் உண்மை வேதாந்தம் நமக்குக் கூறுவது, நீயே பரம்பொருள் - தியானம், புனிதம், பக்தி இவற்றின் மூலம் ஆனந்தமான ஆன்ம அனுபூதி பெறலாம் என்பதாகும். இந்த அத்வைத உணர்வை, ஞானத்தை ஆடையின் நுனியில் முடிந்து கொள் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார். மேலும் படைப்பை பாரமார்த்திக சத்தியம், வ்யாவஹாரிக (நடைமுறை) சத்தியம் என்று இரண்டு விதமாக வேதாந்தம் கூறும். முதலாவது, பரம்பொருள் பற்றிய நிரந்தரமான, நிச்சயமான உண்மை. இது அனுஷ்டானத்தினாலும் தியானத்தினாலும் அடையப்பட வேண்டியது. அடுத்தது, அன்றாட வாழ்வில் தார்மீகமாகச் சமய வாழ்க்கை வாழ்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியது. தியானத்தினாலும் விசாரத்தினாலும் உணர வேண்டிய வேதாந்த ஞானத்தையும் லட்சியத்தையும் அனுபவத்தில் கொண்டு வராதவர்கள் அல்லது சரியாக மக்களுக்கு எடுத்து ஓதாதவர்கள் ஏற்படுத்தியதுதான் திண்ணை வேதாந்தம்.
உன்னதமான, நுணுக்கமான ஆன்மிக விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் அனுஷ்டானம் செய்வது பற்றி சுவாமி விவேகானந்தர் உரைத்தது செயல்முறை வேதாந்தம். ஒரு குருகுலம். குரு சீடர்களுக்கு எல்லாமே இறைமயம் - சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்பதை விளக்கினார். அவர்களுள் ஒருவர் அன்று வெளியே பிட்சைக்காகச் சென்றபோது திடீரென்று ஒரு மதம் பிடித்த யானை வந்தது. எல்லோரும் ஓடி விடுங்கள் என்று யானைப்பாகன் கூறினார். எல்லோருமே தப்பித்தனர். ஆனால் இந்தத் துறவி மட்டும் மதம் பிடித்த யானையிடமும் மாதவனே இருக்கிறான் அல்லவா? என்று விசாரம் செய்தார். யானையோ அவரைத் தூக்கி அடித்தது. தனக்கு நேர்ந்த விபத்தை எண்ணி துறவி கலங்கினார். குரு தனக்குச் சரியான உபதேசத்தை வழங்கவில்லையோ? என்று மனம் நொந்தார். பிறகு குருவைச் சந்தித்தார் துறவி. குருவே, நீங்கள் உரைத்தபடி யானையிடத்தில் நான் இறைவனைத்தான் கண்டேன். அப்படி இருந்தும் எனக்கு ஏன் இப்படி ஓர் ஆபத்து வந்தது? என்று கேட்டார். குரு, ஆம் மகனே, அனைவருக்குள்ளும் ஆண்டவன் இருக்கிறார். அப்படியானால் யானைப் பாகன் என்ற ஆண்டவன் உனக்கு எச்சரித்ததை நீ ஏன் செவிமடுக்கவில்லை? என்று கேட்டு அந்தத் துறவிக்கு நடைமுறை ஞானத்தைக் கற்றுத் தந்தார். எல்லா விலங்குகளிலும் இறைவன் இருக்கிறார். அதற்காகப் புலியைக் கட்டிக் கொள்வாயா? என்று பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திண்ணை வேதாந்தத்தைப் பரிகசிப்பார். பாரமார்த்திக சத்தியத்தை நினைவில் கொண்ட அந்தத் துறவி, வ்யவகாரிக சத்தியத்தில் - செயல்முறை அறிவில் கவனம் கொள்ள மறந்துவிட்டார். மேலும், அந்தத் துறவி இறைவனைப் பற்றியும் தன்னைப் பற்றியும் விசாரம் செய்து கொண்டிருந்தாலும் சமுதாயத்திலுள்ள மனிதன் கூறியதைப் புறக்கணித்த குற்றத்தினால் அவர் விபத்துக்கு ஆளாக நேர்ந்தது.
ஜகத் மித்யா - உலகம் பொய்யானது என்று வேதாந்தத்தைப் புத்தகமாகப் படித்தவர்கள் உரைப்பார்கள். உலகம் பொய்யானது என்று சொல்லிக்கொண்டே மெய்யான வேதாந்தத்தையும் விட்டுவிடுகின்றனர். தக்ஷிணேஸ்வரத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்தபோது அங்கு ஒரு சாதகர் தங்கி இருந்தார். உலகம் உண்மையல்ல என்று பகலில் மக்களுக்கு வேதாந்த உபதேசம் செய்வார். ஆனால் இரவில் ஒரு பெண்ணோடு தவறான செயல்களில் ஈடுபடுகிறார். அவரைத் திருத்தி ஆட்கொள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் அன்பாய்க் கூறிப் பார்த்தார். வேதாந்தம் கேட்டவர் வேட்கையை விட்டாரே என்று திருமூலர் கூறியதைப் புரிந்து கொள்ளாத அந்தச் சாதகர் எல்லாமே மித்யை, நான் செய்வதும் பொய்தானே? என்று வாதம் புரிந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் கடிந்து கொண்டு அவரைத் துரத்திவிட்டார். சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்பதைத் தவறாகக் கூறுபவர்களை குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் பார்க்கவே விரும்ப மாட்டார்.
ஜீவன் - ஜகத் - ஈஸ்வரன் படைத்தவனையும் படைப்பினையும் சேர்த்து ஜீவன் - ஜகத் - ஈஸ்வரன் என்று மூன்று முக்கிய அம்சங்களாகப் பிரிக்கலாம். ஜீவன் என்றால் ஜீவாத்மா, மனிதன். ஜகத் என்பது சமுதாயம், நாடு மற்றும் உலகம். ஈஸ்வரன் என்றால் படைத்து, காத்து, மறைக்கும் தன்மை கொண்ட சர்வ சக்தி வாய்ந்தவர். ஆன்மிக வாழ்க்கையின் அடிப்படையான இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பினைப் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக, ஒன்றின் மூலம் மற்றொன்றை எவ்வாறு நிறைவு செய்யலாம்; ஒன்றின் மூலம் இன்னொன்றில் எவ்வாறு வளர முடியும்; மிக முக்கியமாக, ஒன்றைப் புறக்கணித்து இன்னொன்றில் நாம் முழுமையாகப் பரிணமிக்காமல் இகத்திலும் பரத்திலும் நஷ்டம் அடைவோம் போன்றவற்றை உணர வேண்டும். ஜீவனான தனிமனிதன் ஆன்மிகத்தில் வளர்வதும், ஜகத்தான சமுதாய முன்னேற்றத்தை வளர்ப்பதும்தான் சுவாமி விவேகானந்தர் மூலம் ஸ்ரீராமகிருஷ்ணர் நமக்குக் காட்டிய மார்க்கம். இந்த ஆன்மிக லட்சியத்தை ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாய ச என்று சுவாமி விவேகானந்தர் வரையறுத்தார். சமயத்தை மறந்த சமுதாயமும், சமுதாயத்தைப் புறக்கணித்த சமயமும் நன்கு வாழ்ந்ததில்லை; உருப்பட்டதில்லை. ஸ்ரீராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் கருத்துகளின்படி, ஆன்மிக சாதகன் என்றாலே அவனுக்குச் சமயப் பொறுப்பும் சமுதாயக் கடமையும் கட்டாயம் தேவை. இந்த இரண்டிலும் நன்கு வளர்வதற்குத்தான் ஆன்மிகக் கருத்துகளையும் அதனோடான நம் தொடர்பு தார்மீகமான வாழ்க்கை மூலமாக இருக்க வேண்டும் என்பதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் திண்ணை வேதாந்தமோ, ஜகத்தை மித்யை என்று திரும்பத் திரும்ப வலியுறுத்தித் தனிமனிதனைப் பயனற்றவனாக்கி விடுகிறது. உலகம் ஒன்றுமே இல்லை என்ற புரிதலுடன் ஒருவர் வாழத் தொடங்கினால் அவர் எதைத்தான் ஒழுங்காகச் செய்ய முடியும்?
ஆசாரியர் ராமானுஜர் பொறுப்புடன் இந்த உலகம் சத்தியம்; பரம்பொருளோ சத்தியத்தின் சத்தியம் என்று உபதேசித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தானும் வளர்ந்து, கூடவே தன் சமுதாயக் கடமைகளையும் சரியாகச் செய்பவன் அடையும் பலன் என்ன? ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும் இன்னொரு கதை இது. இதிலும் ஒரு குருகுலம். சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்பதைச் சீடர்களின் சிந்தனையில் குரு ஏற்றுகிறார். ஒரு துறவி பிக்ஷைக்குப் போகிறார். அங்கு ஒரு பணக்காரன் ஏழை ஒருவனை அடித்துத் துவம்சம் செய்கிறான். அந்தப் பணக்காரனைத் தட்டிக் கேட்க யாருமே இல்லை. ஏழை படாதபாடு படுவதை மக்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். எல்லோரிடத்திலும் இறைவன் இருக்கிறார் என்பதை அனுபவத்தில் உணர்ந்த அந்தத் துறவி தன் கண் முன்னே நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறார். பணக்காரர் ஏழையை அடிப்பதை விட்டுவிட்டு நியாயம் கேட்ட துறவியை நையப் புடைக்கிறான். சந்நியாச தர்மத்தின்படி, துறவி திருப்பி அடிக்கவில்லை. எல்லா அடிகளையும் வாங்கிக் கொண்டு ஏழையை மீட்ட திருப்தியில் துறவி மயங்கிவிட்டார். இந்தச் சம்பவத்தை அறிந்து குரு வந்தார், துறவியை ஆசுவாசப்படுத்தினார். பால் புகட்டினார். சிறிது நேரம் கழித்துத் துறவிக்கு உணர்வு வந்துவிட்டதா என்பதைப் பார்ப்பதற்கு குரு, மகனே, யார் உனக்குப் பால் ஊட்டுகிறார் என்பது தெரிகிறதா? என்று கேட்டார்.
எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் பக்குவம் பெற்ற அந்தச் சீடர், ஆம் சுவாமி, என்னை அடித்தவரே இப்போது எனக்குப் பால் ஊட்டுகிறார் என்றார். இவ்வாறு நீக்கமற நிறைந்திருக்கும் தெய்வத்தை அனுபவத்தில் உணர்வதுதான் ஆன்மிகத்தின் முக்கிய அம்சம். ஜகத்தான உலகிற்கு, சமுதாயத்திற்கு, மக்களுக்கு ஒருவன் ஆற்ற வேண்டிய கடமையைச் சரியாகப் புரிந்தால்தான் ஆன்ம அனுபூதியும் ஆண்டவனின் அருளும் கிடைக்கிறது; கிடைத்தது நிலைக்கிறது. இறைவன் எங்கும் இருக்கிறான். அதை அனுபவத்தில் உணராத வரை வெறும் தத்துவம் ஜனன - மரணச் சூழலிலிருந்து நம்மைக் காப்பதில்லை. நம் சமயமும் நல்ல வகையில் வளர்வதில்லை. அதற்குப் பாதுகாப்பும் கிடைப்பதில்லை. ஆடை நுனியில் அத்வைதத்தை முடிந்து கொள் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதன் பொருளும் இதுதான்: ஒருவர் தனது ஆன்மிக அனுபவத்தினால் நிறைவு பெற வேண்டும்; உலகம் அவரால் பயனடைய வேண்டும்; அந்த மனிதரைப் படைத்ததற்காகவே இறைவன் ஆனந்தம் அடைய வேண்டும். ஜீவன் - ஜகத் - ஈஸ்வரன் ஆகிய மூன்றும் ஒருங்கே ஆனந்தம் அடைவதுதான் ஆன்மிக வாழ்க்கை.