முருகனுக்கு வேல் தான் அடையாளம். எல்லா தெய்வங்களும் ஆயுதம் ஏந்தி இருந்தாலும், வேலுக்கு தனிச்சிறப்புண்டு. முருகனே தேவசேனாபதியாக பன்னிரண்டு கைகளில் பல ஆயுதங்களை வைத்திருந்தாலும் வேல் மட்டும் அவருக்கு சமமானதாகக் கருதப்படுகிறது. அதற்கு சக்தி ஆயுதம் என்று பெயர். தமிழில் சக்திவேல் என்று குறிப்பிடுவர். இதனை தனியாக வைத்து வழிபடும் வழக்கமும் உண்டு. முருகனின் வேலின் பெயரால் வேலாயுதம் என்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவர்.
பாம்பு கனவுக்கு தீர்வு: ஆந்திரா, கர்நாடகா பகுதியில் முருகனுக்கு மனிதவடிவில் சிலை அமைப்பதில்லை. நாகப்பாம்பின் வடிவமாக கருவறையில் எழுந்தருளச் செய்வர். சஷ்டி திதியன்று முருகன்கோயில்களில் நாகராஜா பூஜை நடத்துவர். கனவில் பாம்பு தோன்றினால், அதற்குப் பரிகாரமாக சுப்பிரமண்ய ப்ரீதி என்னும் பெயரில் புற்றுக்கு பால் விடும் வழக்கமும் உண்டு. பாம்பைக் கண்டால் ஸுப்பராயுடு என்று முருகனின் பெயரால் குறிப்பிடுவர்.
தமிழ்க்குழந்தை: சீர்காழியில் பிறந்தவர் திருஞானசம்பந்தர். இவரை முருகனின் அவதாரமாகக் கூறுவர். தந்தையுடன் சென்ற சிறுகுழந்தையான சம்பந்தர், குளக்கரையில் பசியால் அழுதார். அவரது அழுகையைப் பொறுக்காமல் அம்மையப்பர் காளை வாகனத்தில் எழுந்தருளினர். அம்பிகையும் ஞானசம்பந்தரின் பசி நீங்க பாலூட்டினாள். இறையருளால் தோடுடைய செவியன் என்று தேவாரத்தைப் பாடத் தொடங்கினார். ஆதிசங்கரரும் சவுந்தர்யலஹரியில் சம்பந்தரைப் பற்றி பாடியுள்ளார். பர்வதராஜனின் மகளான பார்வதிதாயே! திராவிட சிசுவிற்கு (தமிழ்க் குழந்தையான ஞானசம்பந்தருக்கு) பாலை வழங்கினாய். அதன் சிறப்பால் அக்குழந்தை பாடும் திறன் பெற்று எல்லோரையும் கவர்ந்தது, என்று குறிப்பிடுகிறார்.