ஸ்ரீரங்கம் கோயில் ரங்கவிலாச மண்டபத்தைக் கடந்து கார்த்திகை கோபுரத்திற்குள் சென்றவுடன் பெரிய கருடன் சன்னதி வருகிறது. இந்த சன்னதி இருப்பதாலே அந்த பெரிய மண்டபமே கருட மண்டபம் என்ற பெயர் பெற்றிருக்கிறது.
ரங்கநாதர் கோயிலுக்கு பெரிய கோயில் என்று பெயர், அதற்கேற்றார்போல் இங்குள்ள கருடனும் பெரிய கருடன் என்றே அழைக்கப்படுகிறார். 108 திவ்வியதேசங்களில் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே கருடன் அமர்ந்த நிலையில் சேவைசாதிக்கிறார். சுண்ணாம்புக்காரையினால் பல நூறாண்டுகளுக்கு முன்பே பீடத்துடன் சுமார் 20 அடி உயரம் கொண்டவராக மிக்க கலை நயத்துடன் வடிவøக்கப்பட்டுள்ள இந்த கருடன், உயிரோட்டத்தோடு காணப்படுகிறார். இவர் அனந்தன், வாசுகி, தட்சன்,கார்கோடகன், சங்கன், பதுமன், மகாபதுமன், குளிகன் எனப்படும் 8 நாகங்களை ஆபரணங்களாக அணிந்துள்ளார். இவர்மீது பூசப்பட்டுள்ள வர்ணங்கள் முற்றிலும் மூலிகைகளிலிருந்து வடிக்கப்பட்ட தனித்துவம் கொண்டவையாகும். (இயற்கை வண்ணங்கள்-முரைல் பெயிண்டிங்) இக்காரணத்தினாலே, புதுப்பிப்பதற்காக ரசாயணம் கொண்ட பெயிண்டுகள் இதுவரை இந்த கருடன்மீது பூசப்படாமல் பழமையோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. எனினும் இன்றளவும் புதுப்பொலிவுடன், ஒரு இடத்தில் கூட வண்ணம் மங்காமலோ, உதிராமலோ, பளிச்சென்றே இன்றும் சேவை சாதிக்கிறார். பக்ஷ்சிராஜன் என்ற பெயருக்கேற்ப இவரது கை, கால்நகங்கள் வடிவமைக்கப்பட்டிருப்பதும், பக்கவாட்டில் இறகுகள் இருப்பதும்,கலை நயத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றன. சுமார் 15 மீட்டர் வண்ண வஸ்திரம் அணிந்து பெருமாளை தரிசிக்கச் செல்லும் பக்தர்களை வணங்கி வழியனுப்பி வைப்பவராக இவர் காட்சி தருகிறார். கூர்மையான, அதேநேரம் கருணை பொங்கும் பார்வையோடு அமர்ந்திருக்கிறார். கருடனின் பத்தினிகளான ருத்ரை மற்றும் சுகீர்த்தி ஆகியோர் இவரது கருவறை சுவரின் பக்கவாட்டில் சித்திர ரூபத்தில் காட்சியளிக்கின்றனர்.